A few words about item

பேசும் கலை வளர்ப்போம்

முத்தாரம் இதழில் கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் "பேசும் கலை வளர்ப்போம்" என்ற இந்த நூல். இந்நூல் மொத்தம் 80 பக்கங்களுடன் பத்தொன்பது அத்தியாயங்களைக் கொண்டது. "இது பேச்சாளராக விரும்புவர்களுக்கும் பேச்சாளராக இருக்கிற சிலருக்கும் தங்களின் குறைபாடுகளை நீக்கிக் கொண்டு மேலும் சிறந்த பேச்சாளராக திகழ சில குறிப்புகளை வழங்கியிருக்கிறேன்" என்று கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது நன்றியுரையில் கூறுகிறார்.

இப்புத்தகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலில் தான் எப்படி பேச கற்றுக் கொண்டேன் என்பதை அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து சில கருத்துக்களை கூறியுள்ளார். ஒருவன் சபை கூச்சம் அல்லது அவை நடுக்கம் அதிலிருந்து மீண்டு விட்டால் அவன் நல்ல பேச்சாளனாக வாய்ப்பு பெற்று விட்டான் என்று கூறி விடலாம் என்று கூறுகிறார். மேலும் பேசும் கலைக்கு பெருமை சேர்க்க வேண்டுமானால் முதலில் கூட்டத்தைக் கண்டு ஏற்படுகிற அச்சத்தை மெல்ல மெல்ல ஒத்திகை பார்த்தாவது போக்கிக் கொள்ள வேண்டும் என்றும் பேசுவதற்கும் ஏதாவது விஷயங்களை தெரிந்து வைத்திருந்தால் தான் கூட்டத்தில் பேச வரும் என்று கூறியதுடன் அதற்காக பல தலைவர்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் பழக்கம் மற்றும் நாளிதழ்கள், வார,மாத இதழ்களை ஆர்வத்துடன் படிக்கும் பழக்கம் ஆகியவை தன்னை கூட்டங்களில் நடுக்கம் இன்றி பேச வைத்தது என்று குறிப்பிடுகிறார்.

மேலும் சொற்களை நிறைய அறிந்திருப்பதும் - உள்ளத்திற்கும் உச்சரிக்கப்படும் சொற்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பதும் பேச்சாளர்களுக்கு முக்கியமான தேவைகள் என்கிறார். எத்தனை மணி நேரம் ஒரு சொற்பொழிவாளர் பேசினார் என்பதை விட, என்ன பேசினார் என்பது தான் முக்கியம் என்றும் கூறுகிறார்.

சொற்பொழிவாளர்கள் தவிர்க்க வேண்டியவை என்பதாக சிலவற்றை கூறுகிறார்.அவை,

1. பேசியதே பேசுதல் - அதுவும் ஒரே ஊரில் பேசுதல் - அல்லது நிகழ்ச்சியில் பேசுதல்,

2. ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற சொற்பொழிவாளர்கள் தங்களுக்கு முன் பேசியவர்கள் என்ன பேசினார்கள் என்பதை தெரியாமல் இருத்தல்,

3. வயது வந்தவர்கள் மட்டுமே பேசக்கூடியதை இளைஞர்கள் பேசுவதும் - வயது வந்தவர்களும், வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே பேசக்கூடியதைத் தன் வரம்பை மீறி பேசுதல்

4. "லகர", "ழகர" மற்றும் "ளகரத்தை" இடமாற்றிப் பேசுதல்

5. மக்களுக்குத் தெரிய வேண்டியதைப் பேசுதல்

6. தனக்குத் தெரிந்ததைப் பேசுதல் வேண்டும்; தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசிவிடக் கூடாது.

மேலும், நல்ல கெட்டியான அடித்தளத்தில் கட்டப்படும் மாளிகையைப் போலவே, அழுத்தமான குறிக்கோளுடன் பேச்சாளர்களும் தங்கள் பொதுவாழ்க்கையை(ஒழுக்கம்) உருவாக்கிக் கொள்ளுதல், தவிர்க்க முடியாத எதிர்பாராத நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்யாதிருத்தல், தன் பேச்சை முடிக்கும் வரை அந்த மேடைக்குறிய மரியாதையை பாதுகாத்தல், கூடுமானவரையில் மேடையில் அதிக ஆட்டமின்றி - அங்கச் சேட்டைகளை மட்டுப்படுத்தி பேசுதல் போன்றவற்றை சொற்பொழிவாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை என்கிறார்.

பல துறையைச் சேர்ந்தவர்களும் எப்படிப் பேசினார்கள் - எப்படிப் பேசுகிறார்கள் - என்பதைப் பேச்சாளர்களாக விரும்புகிறவர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

Total Number of visitors: 1

No of users in online: 1