A few words about item

அஞ்ஞானச் சிறுகதைகள் - சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் அவர்கள் "ஆனந்த விகடன்" இதழில் அறிவியலையும் தற்போதைய நிகழ்வுகளையும் வைத்து தொடராக எழுதி வந்த 100 குறுங்கதைகள் "அஞ்ஞானச் சிறுகதைகள்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

இந்த நூறு சிறுகதைகளும் ஒவ்வொரு பக்கங்களில் அதற்கு இணையான படங்களுடன் வெளிவந்துள்ளது. எல்லா சிறுகதைகளும் ஒரு பக்கங்களுக்குள் வந்துள்ளது.

முதல் சிறுகதை Log in. இன்றைய மனிதர்கள் பேஸ்புக்கில் வாழ்வதால் இதற்கு காரணம் மார்க் என்பதால் அவரின் மீது சந்தோஷ் நாராயணன் கோபம் கொண்டு அவர் வழியிலேயே சென்று 'மார்க்'கே லாகின் செய்து அன்லாக் செய்ய முடியாதபடி வர்ச்சுவலாக வாழ  வழி செய்துள்ளார். இந்தியாவில் சீனாவின் உளவுத்துப்பாக்கி, தவளையின் மரபணு கலந்த தக்காளிக்கு அனுமதி, ஐன்ஸ்டீனின் மரபணுவை குழந்தையின் மரபணுவுடன் இணைப்பது, வேலைக்கு சென்ற மனிதர்கள் பாதையை மறந்து கூட்டம் கூட்டமாக தேனீக்கள் காரணமாக தற்கொலை செய்வது (ரிவெஞ்ச்),  நகரங்களுக்குள் வருகின்றன என யானைகளை ஜெனிடிகலி மாடிஃபை செய்து பன்றிக்குட்டியாக மாற்ற வைக்க நினைப்பது(யானை) என வாசகர்களை அச்சமூட்ட வைக்கிறார்.

வருங்காலங்கள் எப்படி அமையும் என்ற வகையில் தண்ணீருக்காக மாத்திரை சாப்பிடுவது(பிளாஸ்டிக் பாட்டில்), திருநெல்வேலியில் அல்வா சாப்பிட்டு செவ்வாய் கிரகத்தின் நுழைவு வாசலில் ஸ்கேனிங் செய்தல்(டார்க் பிறவுன் ஜெல்லி), கடவுளே ஆச்சரியப்படும் ஃபேஸ்புக் பசங்க(Copy cat), ஏரிகளில் கட்டிடங்கள் கட்டி அங்கு வசித்து வரும் மனிதனுக்கு ஏற்படும் உடல் மாற்றம்(பலி), கோடம்பாக்கம் இயக்குனருக்கு ஏற்படும் சோதனை (மெடமார்ஃபோஸிஸ்), வைல்ட் லைஃப் போட்டோகிராபராக வெறியுடன் அலையும் குரங்குகள்(வைல்ட் லைஃப்),  ஏகலைவன் கட்டை விரலை குரு தட்சணையாக வாங்கிய துரோணர் கதையை நினைவுபடுத்தும் கதை(வித்தை), புரட்சிக்கு ஒரு விதை போதும் என்ற குறுங்கதை(விதை), பெட்ரோலுக்காக வேற்று கிரகத்திலிருந்து வரும் மனிதர்கள் பெட்ரோலுக்காக அழிந்த பூமியை கண்டறிவது(எரி), உலகம் இருக்கும் வரைக்கும் 'காரல் மார்க்ஸ்'சும் அவர்கள் தத்துவமும் இருக்கும் என்பதை நிருபிக்கும் நியோ, மனிதர்களின் எக்காலத்திலும் மாறாத பேராசை(தலையணை) என நம்மை ஒவ்வொரு பக்கங்களிலும் ஆச்சரியப்பட வைக்கிறார்.

மனிதர்களை பற்றி கூறும்பொழுது அவனுடைய சுபாவம் ரத்தத்திலேயே கலந்தது என கிராமத்தில் பெரியவர்கள் கூறுவதற்கு இணையான குறுந்ததைகளாக லட்சம் மூளைகள், வாய்ஸ் எக்ஸ்பெர்ட், புள்ளி என அட! போட வைக்கின்றன.

வாசகர்களை மேலும் வியப்பிட வைக்கும் யார்?, நான் என்ற குறுங்கதைகளும் போதையில் மனிதன் இருந்தால் அவன் வசம் இருக்கும் பொருள்கள் என்ன ஆகும் என்பதை எடுத்துக் காட்டும் கடவுள் துகள், மலைவாழ் மக்களையும், மலைகளையும் அழித்து பேராசையால் மனிதன் செய்த தவறுகளை உணர்த்தும் ரஸம், வர்த்தக வெற்றிக்காக பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவதை மறைமுகமாக தடுத்த கார்ப்பரேட்டுகளைப் பற்றி சொல்லும் மார் மற்றும் வேளாண்மையை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட்டுகளைப் பற்றிய கண்ணி என சந்தோஷ் நாராயணன் அவர்கள் நம்மை சிந்திக்க வைக்கிறார்.

கடவுளுக்கு ரிஜிஸ்டர் தபால் போட்டு குழந்தைகள் எதிர்கால வாழ்க்கையின் முழு விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பும் இன்றைய பெற்றோர்களின் நிலை (டீசர்), கடவுளின் பெயரால் இதைச் செய்கிறோம் என கடவுளையே தீவிரவாதிகள் கொல்வது(22 ஆம் ஆள்!), நூறாவது அஞ்ஞானச் சிறுகதையை எழுதப்போவதில்லை என கடவுளிடம் சந்தோஷ் நாராயணன் மல்லு கட்டுவது என அசர வைக்கிறார்.

ஒரு சில கதைகளை மீண்டும் ஒரு முறை படித்தால் மட்டுமே நமது மூளைக்கு புரிவதாக உள்ளது. சயின்டிஃபிக் கதை என்பதால் பெரும்பாலான கதையின் நாயகர்களின் பெயரும் தமிழ் அல்லாத பெயராகவே உள்ளது.

வாசகர்களுக்கு அதுவும் அறிவியல் சார்ந்த கதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு பிடித்தமான ஒன்றாகும் இக்குறுங்கதைகள்.

Total Number of visitors: 295

No of users in online: 203