A few words about item

இப்படித்தான் வென்றார்கள் - திலகவதி

தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான திலகவதி அவர்கள் பல்துறை சார்ந்த வெற்றி கொண்ட மனிதர்களைச் சந்தித்து அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களை "இப்படித்தான் வென்றார்கள்" என்ற புத்தகம் மூலம் கொடுத்துள்ளார். இப்படித்தான் வென்றார்கள் என்ற இப்புத்தகத்தில் மொத்தம் ஒன்பது ஆளுமைகளுடன் அவர் உரையாடல் நிகழ்த்தி உள்ளார். இவர் எழுத்தாளர்களை மட்டுமல்லாமல் பல்வேறு ஆளுமைகளை உதாரணமாக சிற்பம், இசை  மற்றும் திரைப்படங்களில் கோலோச்சியவர்களையும் பேட்டி எடுத்துள்ளார். இந்த ஒன்பது ஆளுமைகளாக கணபதி ஸ்தபதி, தமினா மிலானி, பாலமுரளி கிருஷ்ணா, பால் சக்காரியா, பிரதிபா ரே, மகாஸ்வேதா தேவி, ரவிக்குமார், வோல்கா மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர்.

உரையாடல் காணுவோர் அந்தப் புத்தகத்தை வெளியிடும் பொழுது நேரடியாக கேள்விகளைக் கேட்டு அந்த பதில்களை தான் புத்தகத்தில் கொண்டு வந்திருப்பர். ஆனால் திலகவதி அவர்கள் புத்தகத்தில் பேட்டிக்கு முன் அவர்களைப் பற்றிய சற்று விரிவான அறிமுக உரையை வாசகருக்கு தந்துள்ளார். இது வாசகர்களுக்கு அவர்களைப் பற்றி ஒரு அறிமுகத்தைக் கொடுக்கும். 

திலகவதி அவர்களின் முதல் உரையாடல், சென்னை வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு அழகு சேர்த்த சிற்பி கணபதி ஸ்தபதி அவர்களிடம்.

கணபதி ஸ்தபதி அவர்கள் தனது உரையாடலில் பழநிமலை முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று அல்ல என்றும் பழநிமலை அடிவாரத்தில் இருக்கும் திருவாவினன் குடி ஆலயம் தான் அறுபடை வீடுகளில் ஒன்று என்றும் குறிப்பிடுகிறார். மேலும் தன் உரையாடலில் மயன் என்பவன் முதல் சங்க காலத்தில் தோன்றிய மரத்தச்சன் என்றும் மகாபாரதத்தில் குறிப்பிடும் மயசபையை வடிவமைத்து கட்டியவன் என்றும் "சூரிய சித்தாந்தம்" என்ற அரியதொரு முதல் வானநூலை இயற்றியவன் என்றும் குறிப்பிடும் கணபதி ஸ்தபதி அவர்கள் இந்த மயன் நாவலந்தீவில் பிறந்து அங்கு நிகழ்ந்த கடல் கோள்களுக்குப் பிறகு இன்றைய கேரளம் வழியாக தமிழகம் வந்து வடநாடு சென்று உலக நாடுகளில் கால் பதித்து சிறப்புற்று விளங்கிய மாபெரும் சிற்பி என்றும் இந்த மயன் என்னும் தமிழன் தான் உலகின் முதல் விஞ்ஞானி; அவன் படைப்பே  ஐந்திறம் என்றும் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமல்லாமல் சீதை ஒரு திராவிட பெண்தான். ஒருவேளை அதுவே ராமன் அரியணை ஏறத்தடையாக இருந்தாலும் இருந்திருக்க கூடும் என்ற ஒரு சுவாரசியமான செய்தியைச் சொல்கிறார். சிலைகள் செய்யப் பயன்படும் கற்களை தட்டிப்பார்த்து அதிலிருந்து வரும் ஓசையை வைத்து அது ஆண் கல்லா, பெண் கல்லா, நபும்சகக் கல்லா, (அலிக்கல்) என்றும் ஆண் கல் ஆண் சிலை செய்யவும், பெண் கல், பெண் சிலை செய்யவும் நபும்சகக் கல் மண்டபம் கட்டவும் சிற்பிகள் பயன்படுத்துவார்கள் என்று சிற்பங்களை தேர்வு செய்ய பயன்படும் கற்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா தனது உரையாடலில் சங்கீதத்தில் வட இந்தியாவில் 18 மேளகர்த்தா முறையும் சீனா, ஜப்பானில் 2 மேளகர்த்தாவும் மேலை நாட்டில் 8ம்  ஆனால் நம்மிடம் 72 மேளகர்த்தா முறைகள் உள்ளது என்றும் இதைத் தெரிந்து கொண்டால் உலகத்தில் எந்த பகுதி அல்லது எந்த நாட்டைச் சேர்ந்த இசையையும், இசை முறையையும் இசைக்கருவியையும் வாசிக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உட்பட பல்வேறு விருதுகளையும், பட்டங்ககளையும் பெற்றுள்ள பாலமுரளி கிருஷ்ணா  அவர்கள் எந்த பட்டமும் இல்லாமல் வெறும் பாலமுரளி என்று தன்னை அழைத்தாலே போதும் என்று குறிப்பிடுகிறார். மேலும் பாரத ரத்னா பட்டத்தைப் பற்றி சற்று கிண்டல் அடித்துள்ளார். மேலும் இங்கே சங்கீதம் என்றாலே பக்தி தான் என்றும் நிறைய கீர்த்தனைகளில் பக்தி ரசம் தான் உள்ளது என்றும் ஒரு விதத்தில் அது ஒரு குறை என்று சொல்லும் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் சங்கீதத்தில் நவரசமும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல் இப்போது வரக்கூடிய படங்களில் வரும் இசையைப் பற்றி குறிப்பிடும் போது அந்த அந்தக் காலகட்டத்திற்கு தகுந்தபடி, கதை போக்குக்குத் தகுந்தபடி தான் இசை அமையும் என்று குறிப்பிடுகிறார்.

மலையாள இலக்கியப் பரப்பில் முக்கியமான எழுத்தாளர் பால் சக்காரியா தன் உரையாடலில், மலையாள மொழி இலக்கியச் சூழலைப் பற்றி கூறும்பொழுது மலையாளத்தில் புத்தக வெளியீடு நன்றாக இருப்பதாகவும் ஒரு நாளைக்கு சுமார் 10 அல்லது 12 புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறார். இப்படித்தான் வென்றார்கள் என்ற இப்புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு 2006. ஆனால் அந்தோ பரிதாபம்!தமிழகத்தில் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன என்று நினைக்கிறேன்.

இயேசுநாதரையும், பைபிள் பாத்திரங்களையும் கதையின் மாந்தர்களாக வைத்து பால் சக்காரியா எழுதிய "கண்ணாடி காணுமளவும்" என்ற கதையின் சர்ச்சை குறித்தும், கொக்கோ கோலா நிறுவனம் ஒரு பாட்டிலைத் தயாரிக்க 10 பாட்டில் குடிநீரை காலியாக்குவதை பற்றியும்(கொக்கோ கோலா நிறுவனம் கேரளத்தின் தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் அல்ல என்று குறிப்பிடுகிறார்) தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய பண்புகளாக,
"ஒருவன் எழுத்தாளனாகி விடுகிற பட்சத்தில் அவன் பொது மனிதனாகவும் ஆகிவிடுகிறான். அப்படி
ஆகிவிடக் கூடாது என்று ஒருவன் நினைத்தால் அவன் தன் எழுத்துக்களை ஒளித்துத் தான் வைத்துக்
கொள்ள வேண்டும். அதைப் பொதுப் பார்வைக்குக் கொண்டு வரக்கூடாது. எழுத்தாளன் என்பவன் சமூக
ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விழிப்புணர்வு உடையவனாகவும் பல்வேறு விஷயங்களை
அறிந்தவனாகவும் மிகச் சிறந்த மனிதர் மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகளை தூக்கிப் பிடிப்பவனாகவும்
இருக்க வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.

ஒரு எழுத்தாளருக்குரிய தர்மம் எது என்கின்ற கேள்விக்கு,

"ஒரு எழுத்தாளர் என்கிற முறையில் என்னுடைய நோக்கம் கடந்த காலத்தை ஆவணப்படுத்துவது,
தொடரும் மக்களின் போராட்டங்களை அவற்றின் வரலாற்றுத் தன்மை குன்றாமல் பதிவு செய்வது
மற்றும் நேர்மையாக இருத்தல், திறமை முழுவதையும் உயர்ந்தபட்ச அளவுக்கு பயன்படுத்துதல்,
எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல் இருத்தல் ஆகியவை"

என தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார் இந்திய இலக்கியத்திற்கு பெருமை சேர்த்தவரும் பழங்குடியினர் இன மக்கள் நலனுக்காக காடு, மலை, கொளுத்தும் வெயில், கொட்டும் மழை என்று பாராமல் பாடுபட்ட மகாஸ்வேதா தேவி அவர்கள்.

தலித் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளால் அரசியல் தளத்தில் தலித் மக்கள் பலம் பெற்றுள்ளனரா? என்ற கேள்விக்கு, "இன்று முகாமையாகச் செயல்படும் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம்(?) ஆகிய இரு தலித் இயக்கங்களால் தலித் மக்கள் தன்மானத்தை மீட்டு தலைநிமிர்ந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. தாழ்த்தப்பட்ட மக்களைப் புறக்கணிக்க முடியாத அரசியல் சக்தியாக அந்த இயக்கங்களே திரட்டி உள்ளன. திராவிட இயக்கம் தனது இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டுள்ள இன்றைய சூழலில் தமிழகத்தின் எதிர்கால அரசியலில் இந்த இயக்கங்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார் விடுதலை சிறுத்தைகளின் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ரவிக்குமார் அவர்கள்.

2006ம் ஆண்டு வெளியான இந்த நேர்காணலில் இவரது இரண்டு கருத்துக்களுமே தவறு என்று வெளிப்படையாகத் தெரிகிறது. ஒன்று புதிய தமிழகம் என்ற கட்சி தலித் மக்களை தலைநிமிர வைத்துள்ளது என்பது. மற்றொன்று திராவிட இயக்கம் தனது இறுதி நாளை நெருங்கிக் கொண்டு உள்ளது என்பது. மேலும் தனது நேர்காணலில், "மார்க்சின் வாசகன்

பெரியாரிடம் இருந்து கற்க எதுவுமில்லை என்பது எனது திடமான முடிவு. 'பார்ப்பனீய எதிர்ப்பு' என்பதை அவர்கள் தமது செயலுக்கான காரணமாகக் கூறலாம். ஆனால் அதற்கும்கூட பெரியார் அதிகம் பயன்பட மாட்டார்" என்று பெரியார் மீதான தனது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயகாந்தன் தமிழ் இலக்கியப் பரப்பில் உலகில் வாசகர்களால் மறக்க முடியாத பெயர். உங்கள் படைப்புகள் உங்கள் மனதில் எவ்வாறு கருக் கொள்கின்றன. உதாரணத்துக்கு "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற கேள்விக்கு, "ஏதோ ஒரு சேரியில அந்தக் காரணத்துக்காக ஒரு குழந்தையை எல்லோரும் ரொம்பக் கொடுமைப்படுத்தினாங்க. அவ அம்மா அடிச்சா. அதை எல்லாம் பார்க்கிற பொழுது அதை எல்லாம் மாத்தி எழுதினேன். அவ்வளவுதான். சேரியை அக்கிரகாரமாக மாற்றினேன். அப்பதான் அது கதை. இல்லேன்னா அது ரிப்போர்ட்டேஜ் மாதிரியிருக்கும் எனக்கு. பார்த்ததையே எழுதினால் நமக்குத் திருப்தி இருக்காது" என்று தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார் ஜெயகாந்தன் அவர்கள்.

பல்வேறுபட்ட மனிதர்களை நாம் சந்தித்தாலும் சாதனை மனிதர்களின் வெற்றியை நாம் தெரிந்து கொள்ளவும், அவர்களின் வெற்றிக் கதையை, எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளவும் இப்படிப்பட்ட புத்தகங்கள் வாசகர்களாகிய நமக்கு உதவி புரிகிறது. 

Total Number of visitors: 72

No of users in online: 46