A few words about item

பார்த்திபன் கனவு - கல்கி

கல்கி அவர்களால் முதன் முதலில் எழுதப்பட்ட சரித்திர தொடர் பார்த்திபன் கனவு. மொத்தம் மூன்று பாகங்களுடன் 368 பக்கங்களைக் கொண்டது இந்த பார்த்திபன் கனவு.

தெற்கே பாண்டியர்களும் வடக்கே பல்லவர்களும் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், பார்த்திபன் சோழ நாட்டை ஒரு சிற்றரசாக உறையூரைத் தலைநகராக கொண்டு ஆண்டு கொண்டிருந்தார். அதே காலகட்டத்தில் தனது தந்தையின் அவமானத்தைப் போக்க வடக்கே சென்று வாதாபியின் புலிகேசி மீது படை எடுத்துச் சென்ற பல்லவ நாட்டின் காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்தி திரும்பி வந்த பொழுது பார்த்திபனின் பாட்டனர் காலம் முதல் ஆண்டுதோறும் கட்டி வந்த கப்பத்தை ஆறு ஆண்டுகளாக சோழ சாம்ராஜ்யம் கட்டாததால் பல்லவ தூதர்கள் உறையூர் வந்து பார்த்திபனிடம் கூற பார்த்திபன், "புரட்டாசி மாதத்தில் பௌர்ணமி இரவில் வெண்ணாற்றங்கரையில் போர் முனையில் சந்திக்கிறேன்" என்று அவர்களைத் திருப்பி அனுப்புகிறார்.

அதற்குக் காரணம், உலகத்தையே ஆண்ட கரிகால் வளவனும், நெடுமுடிக் கிள்ளியும் வழிவந்த சோழ அரசு இப்போது சிற்றரசாக மற்றவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டு ஆள்வதை விரும்பாத பார்த்திபன் இந்த சோழ சாம்ராஜ்யம் மீண்டும் இந்த உலகை ஆள வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் தனது மகன் விக்கிரமனிடம் இவ்வுலகை ஆண்ட சோழரின் புலிக்கொடி மீண்டும் அந்த நிலையை அடைய வேண்டும் என்றும்  சோழரின் புலிக்கொடி வேறு எந்த நாட்டின் கொடிக்கும் தாழாமல் வானளாவிப் பறக்க வேண்டும் என்றும் சத்தியம் வாங்குகிறார்.

மேலும் தோணித்துறை அருகே குடிசை போட்டு படகு ஓட்டிக் கொண்டிருக்கும் பொன்னனிடம் யுத்தத்துக்கு வராமல் இளவரசனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று சொல்லி போருக்குச் செல்கிறார்.

மிகப்பெரிய பல்லவ சைன்யத்துடன் சோழ சாம்ராஜ்யம் மோதி தோல்வி அடைகிறது. போர்க்களத்தில் சிவனடியார் ஒருவர் இறக்கும் தருவாயில் உள்ள பார்த்திபனைச் சந்திக்கிறார். அவனிடம், "மனதில் ஏதாவது குறை இருந்தால் தெரிவி .நான் நிறைவேற்றி வைக்கிறேன்" என்கிறார் அந்த சிவனடியார். அப்போது பார்த்திபன், "சோழ நாடு முன்னே போல் சுதந்திர நாடாக வேண்டும்; தூரதூர தேசங்கள் எல்லாம் புலிக்கொடி பறக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன். என்னுடைய வாழ்க்கையில் அது கனவாகவே முடிந்தது. என்னுடைய மகன் காலத்திலாவது அது நனவாக வேண்டும் என்பது என் மனோரதம். விக்கிரமன் வீர மகனாய் வளர வேண்டும். சோழ நாட்டின் மேன்மையே அவன் வாழ்க்கையின் இலட்சியமாய் இருக்க வேண்டும். இந்த வரத்தைத் தங்களிடம் கேட்கிறேன்" என்கிறான். அவரும், "உன்னுடைய மனோரதத்தை நிறைவேற்றுவேன் - நான் உயிரோடு இருந்தால்" என்று கூறுகிறார்.

சில வருடங்களுக்குப் பிறகு விக்கிரமன் சிராப்பள்ளி மலை மீது பறக்கும் பல்லவர் கொடியை தூக்கிவிட்டு சோழர்களின் புலிக்கொடியை பறக்க விட தயாராகிறான். அதற்கு விக்கிரமனின் சித்தப்பா மாரப்ப பூபதி உதவி செய்வதாக உறுதியளிக்கிறார். இந்த மாரப்ப பூபதி சோழ சிற்றரசின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டு அதை ஆள நினைப்பவன்.

தனது அண்ணனுக்கு செய்த துரோகத்தைப் போலவே தனது அண்ணன் மகன் விக்கிரமனுக்கும் மாரப்ப பூபதி துரோகம் புரிய இறுதியில் விக்கிரமன் காஞ்சிக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படுகிறான். அப்போது கண நேரத்தில் விக்கிரமனும் பல்லவ சக்கரவர்த்தி நரசிம்மவர்மனின்  மகளான குந்தவி தேவியும் பார்த்துக் கொள்கிறார்கள்.

இதன்பிறகு குந்தவி தேவிக்கு விக்கிரமனின் மேல் காதல் பிறக்கிறது. ஆனால் நரசிம்மவர்ம சக்கரவர்த்தி விக்கிரமனுக்கு தேசப்பிரஷ்ட தண்டனை விதித்து மறுபடியும் சோழ நாட்டிற்குள் அவன் பிரவேசித்தால் சிரசாக்கினைக்குள்ளாக வேண்டும் என்று சொல்லி அவனைக் கப்பலேற்றித் தீவாந்தரத்துக்கு அனுப்பி விடும்படி கட்டளை இடுகிறார்.

மாமல்லபுரம் துறைமுகத்துக்கு குந்தவி தேவி அவனைப் பார்க்க செல்லும் பொழுது சிவனடியாரும் அவனைப் பார்க்க வருகிறார். குந்தவி தேவிக்கு சிவனடியார் ஒருவர் விக்கிரமனை தவறாக வழி நடத்துகிறார் என்று தெரிய வருகிறது. அந்த நேரத்தில் அங்கு வந்த சிவனடியாரை குந்தி தேவி பிடிக்க முயல அவர் தப்பிச் செல்கிறார்.

இதற்கிடையில் பொன்னனின் குடிசை வீட்டில் சிவனடியார் மகாராணி அருள்மொழித்தேவியை சந்தித்து சிற்சில உதவிகள் புரிகிறார். மேலும் பல்லவ சேனாதிபதியும் சளுக்கர் படைகளை முறியடித்து புலிகேசியைக் கொன்ற மகாவீரருமான பரஞ்சோதி போருக்குப் பின்  சிவனடியராக துறவு பூண்டு சிறுத்தொண்டராக மாறுகிறார். அவர் ஒரு கட்டத்தில் அருள்மொழித் தேவியை சந்திக்கும் பொழுது கணவரை பறிகொடுத்து விட்டு மகன் விக்கிரமனும் அருகில் இல்லை என்ற கவலையில்  சிறுத்தொண்டருடன் சேர்ந்து தீர்த்த யாத்திரை செல்ல விரும்பி அவருடன் புறப்படுகிறார்.

யாத்திரை சமயத்தில் காவிரி சங்கமத்தில் அருள்மொழி ராணி காணாமல் போகிறார். அப்போது பொன்னனின் மனைவி வள்ளியும் பரஞ்சோதியின் மனைவியும் ஒற்றைக் கை மனிதன் ஒருவன் அருள்மொழி ராணியைத் தூக்கிச் சென்றதாக கூறுகிறார்கள். சிவனடியாரைச் சந்தித்த வள்ளி அருள்மொழி ராணி காணாமல் போனதைப் பற்றி கூறுகிறாள். அப்போது சிவனடியார், ஒற்றைக் கை மனிதன் கபாலருத்திர பைரவன் என்றும் கபாலிக மதக்  கூட்டத்தின் தலைமைப் பூசாரி என்றும் தமிழகத்தில் நரபலி என்னும் பயங்கரத்தை பரப்பிக் கொண்டு வருகிறான் என்றும் கூறுகிறார். மேலும் பல்லவ சோழ நாடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்து அருள்மொழி ராணியை தேடத் தொடங்குகிறார்கள். அதே நேரத்தில் மாரப்ப பூபதியும் கபாலருத்திர பைரவனுடன் சேர்ந்து கொள்கிறான்.

நாட்டில் அருள்மொழி ராணிக்கு சிவனடியார் உதவுதல்,  கபால ருத்ர பைரவனின் நடமாட்டம், அருள்மொழி ராணி காணாமல் போதல், இளவரசன் விக்கிரமன் யாருக்கும் தெரியாமல் நாடு திரும்புதல், மீண்டும் குந்தவி தேவி - விக்கிரமன் காதல்.  இவை எல்லாம் பல்லவ நாட்டின் காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்திக்கு தெரிந்ததா? இல்லையா? மேலும் சிவனடியார் என்பவர்  யார்? அருள்மொழி ராணிக்கு ஏன் அவர் உதவ வேண்டும்? கபால ருத்ர பைரவன் என்பவன் யார்? விக்கிரமன் - குந்தவி தேவி காதல் நிறைவேறியதா? பார்த்திப சோழனின் கனவு அவருடைய மகன் விக்கிரமன் காலத்தில் நிறைவேறியதா? என்பதை புத்தகத்தின் இறுதிப் பகுதியில் காணலாம்.

கல்கியின் "பொன்னியின் செல்வன்" படித்தவர்களுக்குத் தெரியும்; அதில் அதிக அளவில் வர்ணனைகளைப் பயன்படுத்தியிருப்பார். ஆனால் இப்புத்தகத்தில் அது சற்று குறைவு. இரண்டாவதாக  இப்புத்தகத்தில் ஏற்படுத்திய நெருடலான விஷயம், 9வது அத்தியாயமான விக்கிரமன் சபதம் பகுதியில் பார்த்திப சோழன் மகன் விக்கிரமனிடம் பேசும்பொழுது, "இறைவனுக்குச் சக்கரவர்த்தியும் ஒன்று தான்! செருப்பு தைக்கும் சக்கிலியனும் ஒன்றுதான்," என்று கூறியிருப்பார்.

இப்புதினம் யோகானந்த் இயக்கத்தில் ஜெமினி கணேசன்(விக்கிரமன்), வைஜெயந்திமாலா (குந்தவி தேவி), எஸ்.வி.ரங்காராவ்(மாமல்லர் காஞ்சி நரசிம்ம வர்ம சக்கரவர்த்தி), எஸ்.வி.சுப்பையா(பொன்னன்), ராகினி(வள்ளி), டி.எஸ்.பாலையா(மாரப்ப பூபதி), பி.எஸ்.வீரப்பா (கபால பைரவன்), எஸ்.ஏ.அசோகன்(பார்த்திப சோழன்), மாலதி(அருள்மொழி), ஜாவர் சீதாராமன் (சிறுத்தொண்டர்) ஆகியோர் நடிக்க விந்தன் வசனத்தில் படமாக வெளிவந்திருக்கிறது.

Total Number of visitors: 34

No of users in online: 3