A few words about item

சோலை எனும் வாழிடம் - தியடோர் பாஸ்கரன்

உயிர்மை, தி இந்து, புதிய கதிர் மற்றும் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை "சோலை எனும் வாழிடம் - இயற்கையயல் கட்டுரைகள்" என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகமாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. இப்புத்தகம் காட்டுயிர் பற்றியும் சுற்றுச்சூழல் மாசுபாடு மனிதர் காட்டுயிர் எதிர்கொள்ளல் பற்றிய பல புதிய பரிமாணங்களைத் தருகிறது.

இப்புத்தகம் வாழிடம், காட்டுயிர், விவாதம் மற்றும் கருத்துக்கள் என்ற நான்கு பகுதிகளின் கீழ் 22 கட்டுரைகளைக்  கொண்டுள்ளது. இதில் 22 ஆவது கட்டுரை நேர்காணல். இதில் பல்வேறு கட்டுரைகள் ஆசிரியர் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்த்த நிகழ்வுகளை எழுதியுள்ளார்.

சோலை எனும் வாழிடம் என்ற கட்டுரை எப்படி ஆறுகள் சோலை காடுகளிலிருந்து உற்பத்தி ஆகின்றன சோலை காடுகளில்(பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும்) மட்டுமே வாழும் பறவைகள் ஊர்வன பாலூட்டிகள் மற்றும் பிரசித்தி பெற்ற சிங்கவால் குரங்கு ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அம்மையின் மலையின் மற்றும் காடுகளின் சிலுமியைக் கண்டு அந்த பொக்கிஷங்களை மொத்தமாக தேடித் தோட்டமாக மாற்றி மாற்றியது சுதந்திரம் அடைந்த பிறகு அனைத்து திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு பெரும் வனப் பரப்புகள் நீரில் மூழ்கியது ஆகியவை பற்றி இக்கட்டுறையில் கூறியுள்ளார். "ஒத்தைக்கல் மந்து"  ஆங்கிலேயர்களால் "Ootacamund"ஆகி அதுவும் சுருங்கி ஊட்டியாக மாறியதையும், சோலைமந்தி என்ற அழகான உண்மையான தமிழ் பெயர் "சிங்கவால் குரங்கு" என மாறியதையும் வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

பாலை என்னும் வாழிடம் என்ற கட்டுரை, பாலைவனம், பாலைநிலம் என்ற இரண்டும் வெவ்வேறானது என்றும் தென்னிந்தியாவில் பாலைவனம் கிடையாது; பாலைநிலம் ஒரு வறண்ட நிலப் பகுதி என்றும் பாலைவனம் என்ற சொல் ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு வந்த பின் உருவான சொல் என்றும் குறிப்பிடுகிறார்.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்தெள நல்லியல்பழிந்து நடுங்கு துயருறுத்தப் பாலையென்பதோர் படிவங் கொள்ளும் என்று சிறப்பாக சிலப்பதிகாரத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்.

இந்தப் பாலைநிலமும் மற்ற நிலப்பகுதிகளைப் போலவே சுற்றுச்சூழல் ரீதியில் சீரழிக்கப்பட்டு விட்டது என்றும் அக்காடுகளில் வாழும் உயிரினங்களும் கூட அழிக்கப்பட்டு விட்டது என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

சங்க இலக்கியமான புறநானூறு, நற்றிணை மற்றும் குறுந்தொகை போன்ற தொகுப்புகளிலும் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி வாழ்ந்த மற்றும் கபிலரால் பாடப்பெற்ற கொல்லிமலை இன்று யானைகள், வேங்கைப்புலிகள், மற்றும் காட்டெருது போன்ற பெரிய காட்டுயிர்கள், தாவரங்கள், மூலிகைகள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டதை வல்வில் ஓரியும் கொல்லிப்பாவையும் என்ற கட்டுரையில் எடுத்துரைக்கிறார். மேலும் மூங்கில் காடுகள் காகித ஆலைகளுக்காக மொட்டையடிக்கப்பட்டு விட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.

DDT எனும் வேதியல் பொருள் மற்றும் அதைச் சார்ந்த மருந்துகள் எவ்வாறு ஏரி, குளங்கள் நீர்வாழ் சிற்றுயிர்கள், புள்ளினங்களை அழித்ததையும் தேங்கிய நீரில் வளரும் கொசுப்புழுக்களை இரையாகக் கொண்டு கொசு பரவலைக் கட்டுப்படுத்தும் தவளையின் குஞ்சுகளான தலைப்பிரட்டைகள் அழிந்து கொசு கட்டுக்கடங்காமல் பெருகி மலேரியாவை பரப்பியதையும் விஷம் விதைத்தவர்கள் என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். மேலும் நம்மூரில் இளநீரிலும் தாய்ப்பாலிலும் கூட  DDTயின் எச்சம் இருப்பதையும் சுட்டிக்காட்டி மனிதர்களுக்கு புற்றுநோய், ஒவ்வாமை, நீரிழிவு பிறவி குறைபாடுகள் ஏற்படுவதையும் இந்த மருந்தின் கெட்ட குணம் பல ஆண்டுகளுக்கு அவை அழியாமல் அவைகளின் எச்சம் எங்கு போய் சேருகின்றதோ அந்த இடத்தையும் அழித்து நாச வேலை செய்யும் என்பதையும் கூறுகிறார். மேலும் நமது நாட்டில் மட்டும் பூச்சி மருந்து தொழிலில் 5000 கோடி ரூபாய் புரள்கிறது என்றும் இதனை தவிர்க்க முதலில் இதன் ஆபத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

காட்டுயிர் என்ற பகுதியில் மரங்கள் ஆகாயப் பறவைகள் மற்றும் குயில் ஆந்தைகளைப் பற்றி குறிப்பிடுகிறார் அதிலும் ஆந்தைக்கு ஏற்படும் ஆபத்துக்களை பற்றி தெளிவாக விளக்குகிறார் செல்வத்தின் கடவுளான லட்சுமியின் வாகனம் என்றாலும் சில இடங்களில் பில்லி சூனியம் போன்ற மாந்திரீக சடங்கிலும் மூடநம்பிக்கை அடிப்படையிலும் அவை கொல்லப்படுவதையும் சுட்டி காட்டுகிறார். மேலும் இனப்பெருக்க காலத்தில் ஒரு ஆந்தை உணவு தானியங்களை சேதம் செய்வதில் முதலிடம் வகிக்கும் எலிகளைக் ஒரு இரவில் ஐந்தாறு கொள்ளும் என்று அதன் பயனைக் குறிப்பிடுகிறார்.

விவாதம் என்ற பகுதியில் தமிழ்த்திரையில் காட்டுயிர், ஏறு தழுவுதலும் கலாச்சார அரசியலும், மணற்கொள்ளை: ஒரு சூழலியல் அட்டூழியம் மற்றும் காலநிலை மாற்றமும் நாமும் போன்ற முக்கியமான கட்டுரைகள் உள்ளன.

எரிமலை, ஆழிப்பேரலை மற்றும் நிலநடுக்கம் இவை தவிர்த்து இந்த பூமிப்பந்தை மனிதன் போட்டி போட்டுக் கொண்டு சூறையாடுவதை நிறுத்தினால் ஒழிய இதை காப்பது அல்லது அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொடுப்பது முடியாத காரியமாகவே இருக்கிறது. மேலும் இக்காலகட்டத்திலேயே நாம் பருவநிலை மாறுபாடு காரணமாக மழை அதிகமாக பெய்தல்; அல்லது முற்றாக குறைந்து கடும் வறட்சி ஏற்படுத்துதல்; அதிகளவான வெப்பம்; தேவைக்கு அதிகமான நீரை பயன்படுத்துதல் இவை எல்லாமே முற்றிலுமாக இந்த பூமிப்பந்தை சீர்குலைப்பது என்பது உண்மை. இதை ஒவ்வொரு தனி மனிதனும் உணர்ந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொடுக்க வேண்டியது நமது கடமை என்று உனர்தல் வேண்டும்.

சுற்றுச்சூழலை மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களையும் மனிதன் எந்த அளவிற்கு சூறையாடுகிறான் என்பதை இப்புத்தகம் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். சுற்றுச்சூழலின் மீது ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது.

Total Number of visitors: 9

No of users in online: 4