சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்

சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்

சினிமா. உலகத்தின் எங்கேயோ ஓரிடத்தில் அல்லது இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தில் அரசியலை நேரடியாகவோ மறைமுகமாகவோ அதிக அளவில் ஏற்படுத்தாத பாதிப்பு தமிழக அரசியல் மிக ஆழமாக பாதித்துக் கொண்டிருக்கிறது என்பது ஒரு அவகாரமான, மோசமான நிகழ்வு இந்த சினிமா. ஏனெனில் தமிழக அரசியலில், ஒருவன் சினிமாவிலிருந்து  வருகிறான் எனில் தமிழக மக்கள் அதற்கு ஒரு தனித்த அடையாளத்தையும், மரியாதையையும், முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு கொடுக்கின்றனர். அவர்கள் யார்? அவர்கள் பின்புலம் என்ன? தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்பு என்ன? என்பதை கண்டு கொள்ளாமல் சினிமாவில் இருந்து வருகிறான் எனில் மக்கள் அந்த நடிகருக்கு / வேட்பாளருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இந்த சினிமா அரசியலை மட்டுமல்லாமல் சாமானிய மக்களையும் பாதிக்கிறது.

அப்படிப்பட்ட இந்த சினிமா கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை, கணவனை, அவளை எப்படி பாதிக்கிறது; அவளை எங்கு கொண்டு செல்கிறது? என்பதை "சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற கதையின் வழியே தமிழக மக்களுக்கு கொடுக்கிறார் ஆசிரியர் ஜெயகாந்தன். கண்ணதாசன் மாத இதழில் தொடராக வெளிவந்தது இந்நாவல்.

இந்த சினிமாவுக்குப் போன சித்தாளு என்ற இந்த குறுநாவல் நேரடியாக சினிமாவிலிருந்து வந்த ஒரு நடிகரை ஒரு தலைவரைக் குறிக்கிறது என்பது புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படித்தாலே தெரிந்து கொள்ளலாம். ஆனால் கர்ஜிக்கும் சிங்கம் என்று கூறப்பட்ட ஜெயகாந்தன் அவர்கள் புத்தகத்தின் முன்னுரையில் இப்புத்தகம் எந்த நடிகரையோ அல்லது தலைவரையோ குறிக்கவில்லை என்று சொல்லி இருப்பது அவர் தன்னைத்தானே மறைத்து கொள்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இக்கதையில் வரும் சில சம்பவங்களைக் கொண்டே இது எந்த தலைவரைக் குறிக்கிறது என்பது புத்தகத்தை படிப்பவர்களுக்கு தெளிவாகவே புரியும். அந்த தலைவர் யார் என்பதை இறுதியில் காண்போம். இப்போது கதைக்குச் செல்வோம்.

குடிசைப் பகுதியில் வசிக்கும் செல்லமுத்து என்பவன் இரவு நேரங்களில் சிங்காரம் என்பவனிடம் இரவு நேரத்திற்கு கை ரிக்க்ஷாவை வாடகைக்கு எடுத்து ஓட்டுபவன். பகல் நேரங்களில் தியேட்டரில் டிக்கெட் வாங்கி அதை விற்றும் வருமானம் பார்ப்பவன். நத்தப்பட்டு என்னும் ஊரில் செல்லமுத்து கட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக கம்சலை என்ற பெண்ணை வளர்த்து வந்தாள் அவனது பாட்டி. சினிமா பார்த்து பார்த்து ஆசை அதிகமாகிறது செல்லமுத்துவுக்கு. அதுவும் வாத்தியார்(புரிஞ்சிக்கிட்டிங்களா?) படத்தைப் பார்த்து பார்த்து ஆசை அதிகமாகிக் கொண்டே செல்ல இறுதியில் அவன் கம்சலையை திருமணம் செய்து கொண்டு பட்டணத்துக்கு கூட்டி வருகிறான்.

சினிமாவில் பார்த்தது போல் தனக்கு அமையவில்லை என்று செல்லமுத்துவுக்கு ஆதங்கம் இருப்பினும் செல்லமுத்து கம்சலைக்கு காதல் செய்ய கற்றுத்தர அவளை சினிமாவுக்கு கூட்டி செல்கிறான். அதுவும் வாத்தியார் படத்துக்கு மட்டும் தான். ஆனால் அவளோ அவனை தன்னிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கிறாள். அவனும் தனக்குத்தானே சமாதானமும் செய்து கொள்கிறான். இதற்கு இடையில் இவளும் வேலைக்குச் செல்கிறாள். எப்போதெல்லாம் வாத்தியார் படம் வருகிறதோ அப்போதெல்லாம் முதல் ஷோவிற்கே சென்று பார்த்து விடுகிறாள்.

ஒரு நாள் பகலில் செல்லமுத்து தரையில் வாத்தியார் படம் போட்ட பனியனுடன் படுத்து கிடக்க வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்த கம்சலை அவன் மார்பின் மீது விழுந்து முத்தம் கொடுக்கிறாள். அப்பொழுது தான் செல்லமுத்துவுக்கு தெரிகிறது அந்த முத்தங்கள் தனக்கு இல்லை என்று. இதன் எதிரொலியாக அவளை வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொள்கிறான். படத்திற்கும் செல்லக்கூடாது என்று உத்தரவு போடுகிறான்.

இதற்கிடையில் வாத்தியாரின், "கோடியிலே ஒருத்தரு"(ஆயிரத்தில் ஒருவன்!) என்ற திரைப்படம் வெளியாகிறது. செல்லமுத்து கம்சலை சண்டையில் சிங்காரம் நுழைகிறான். செல்லமுத்து இல்லாத சமயத்தில் அவளிடம் தான் படத்துக்கு கூட்டிச் செல்வதாக சொல்லி அந்த குஷியில் "ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்..." என்ற பாடலை பாடிக்கொண்டே செல்கிறான். அவளும் அடுத்த அடியாக, "ஒரே மயக்கம்... அம்மம்மா! போதும்... போதும்" என்று பாடுகிறாள். அன்று இரவே சிங்காரமுடன் படத்திற்குச் செல்கிறாள். இத்துடன் அவளுடைய வாழ்வே சீரழிகிறது.

வாத்தியார் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களின் செய்கைகளை ஜெயகாந்தன் சிங்காரம் வாயிலாக இவ்வாறு கூறுகிறார்.

"அவ கையைத் தட்டிக்கிறதும், கன்னத்தைக் கிள்ளிக்கிறதும், வாயை உறிஞ்சிக்கிறதும், ஒதட்டைக் கடிச்சிக்கிறதும், ஒக்கார முடியாம தவிக்கிறதும், பெருமூச்சுவுடறதும், பல்லைக் கடிச்சிக்கிறதும், ஒடம்பைப் போட்டு முறிக்கிறதும்.

எல்லாத்தியும் பாத்துக்கினுதான் குந்தி இருக்கறான் சிங்காரம்!

'இவ இன்னா கொஞ்சம் லூஸோ'ன்னுகூட நெனைச்சிக்கினான் சிங்காரம். ஒரு தபா கொட்டா பூராவும் சுத்தி பாக்கறான் சிங்காரம்... எல்லாமே அப்பிடிதான் இருக்குதுங்க - இன்னடா இது படா டமாஸா கீதே!.. சினிமாவெங்காட்டியும் சினிமா பாக்கற சனங்களே டமாஸா கீறாங்களேன்னு நெனைச்சிக்கினான்."

இக்கதை முழுவதும் சென்னை பாஷையைக்  கொண்டுள்ளது. "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் கதாநாயகி "ஜெயலலிதா" மீது ஒரு மரம் விழுவது போலவும் குறுக்கே பாய்ந்து "எம்.ஜி.ஆர்", ஜெயலலிதா மீது மரம் விழாமல் தன் முதுகில் தாங்குவது போலவும் ஒரு காட்சி அமைந்திருக்கும். அந்தக் காட்சியை இந்த நாவலில் "கோடியிலே ஒருத்தரு" படத்தில் வருமாறு காட்சிப்படுத்தி இருப்பார் ஜெயகாந்தன் அவர்கள்.

இக்காட்சியிலிருந்தும், நாவலின் சில உரையாடல்களிலிருந்தும் ஜெயகாந்தன் அவர்கள் இந்த நாவல் முழுவதும் வாத்தியார் என்று அழைப்பது எம்.ஜி.ஆர் என்பதை குறிக்கும்.

இந்த நாவலில் செல்லமுத்து கதாபாத்திரம் ஏழ்மையான ஆனால் மனைவி மீது பாசம் கொண்டவனாக தான் தவறே செய்ததாக இருந்தாலும் பின்னர் தனக்குள்ளாகவே தான் தவறு செய்து விட்டதாகவே வருந்தி அழுவது போல் காட்சி அமைத்து இருப்பார் ஜெயகாந்தன் அவர்கள்.  மேலும் வாத்தியாரை நினைத்துக் கொண்டு தன்னிடம் வாழும் மனைவியை சகித்துக் கொண்டும், மனைவியைக் காணவில்லை எனும்போது பதற்றம் அடைவதும், இருக்கக் கூடாத இடத்தில் மனைவி இருப்பதைக் கண்டு மனம் பதறி திரும்பி அழைப்பதும், காணக்கூடாத கோலத்தில் தன் மனைவியை பார்த்து பதறுவதுமாக செல்லமுத்து கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கும்.

தமிழ்ச் சூழலில் ஒரு சினிமா பிம்பம் எப்படி பெண்களை அழிவுக்கு கொண்டு சென்றது என்பதை ஜெயகாந்தனின் இந்த "சினிமாவுக்குப் போன சித்தாளு" வெளிப்படுத்தியுள்ளது.

 

No of users in online: 116