வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

1848 - ஆம் ஆண்டு "ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி"யால் எழுதப்பட்ட "வெண்ணிற இரவுகள்" (White Nights - Fyodor Dostovsky) என்ற குறுநாவல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல எழுத்தாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பத்மஜா நாராயணன் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடும், ரா.கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் வளரி, டிஸ்கவரி புக் பேலஸ், புலம், நூல்வனம் ஆகிய பதிப்பகங்களும் வெளியிட்டுள்ளன. எல்லா பதிப்பகங்களும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய முன்னுரையை கொடுத்துள்ளது. ஒன்பது பக்கங்களுக்கு வெண்ணிற இரவுகள் நாவலுக்கு தனது முன்னுரையை எழுதி உள்ளார் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். முன்னுரை அவருடைய வலைதளத்திலும் உள்ளது.



Poem Header
நின்காதல் நிழல் தன்னில்
நின்று மகிழ்வோம்.
மின்னி மறையும்
கண்ணிமைப் பொழுதெனினும்
போதுமது என்றெண்ணிப்
பிறந்தானோ...?



- இவான் துர்கேனேவ்


இவான் துர்கேனேவ் கவிதையுடன் இந்நாவல் தொடங்குகிறது.

வெண்ணிற இரவுகள் என்ற இக்குறுநாவல் முதல் இரவு, இரண்டாம் இரவு, மூன்றாம் இரவு, நான்காம் இரவு, காலை என மொத்தம் 5 அத்தியாயங்களைக் கொண்டு நான்கு இரவுகள் ஒரு பகலில் இக்கதை முடிகிறது. இரண்டு ஆண்கள், ஒரு இளம் பெண், இளம் பெண்ணின் பாட்டி ஆகியவையே இக்குறுநாவலில் உள்ள கதாபாத்திரங்கள். கதை முழுவதும் இரவு நேரத்தில் ஒரே இடத்தில் நடக்கிறது.

பீட்டர்ஸ்பர்க் நகரில் தனியாளாக  8 ஆண்டுகளாக வசித்து வரும் 26 வயதே ஆன இளைஞன் ஒருவன். அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. பெண்களிடம் பேச கூச்சப்படுகிறவன். கனவுகளில் மட்டும் பெரும் காதல் காவியங்களைப் முனைபவன். இது தான் அந்த இளைஞனைப் பற்றிய குறிப்புகள்.

எந்த இடத்திலும் கதையின் நாயகன் பெயர் இடம்பெறவில்லை. ஒருவேளை அது "ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி"யாகவோ அல்லது நீங்களாகக் கூட இருக்கலாம். இரண்டாம் அத்தியாயத்தில் நாயகன் இளம் பெண்ணிடம் உங்கள் பெயர் என்ன? என்று கேட்டு தெரிந்து கொள்கிறான். "நாஸ்தென்கா" - இதுதான் நாயகியின் பெயர். வயது 17.

முதல் நாள் இரவில் "நாஸ்தென்கா"விற்கு ஏற்படவிருந்த ஒரு பிரச்சினையிலிருந்து நாயகன் அவளை காப்பாற்றுகிறான். இருவரும் அந்த இரவில் நட்பு கொள்கின்றனர். இதுவரை எந்த பெண்ணிடமும் பழகாத, பேசாத நாயகன் அவளிடம் அன்புடன் தன்னைப் பற்றிய விவரங்களை எல்லாம் கூறுகிறான். மேலும் நாஸ்தென்கா அவனிடம் நாளை இரவு பத்து மணிக்கு மீண்டும் இங்கு வருவேன் என்று கூறுகிறாள். அத்துடன் தான் இங்கு எதற்காக வருகிறேன் என்ற இரகசியத்தை நாளை கூறுகிறேன் என்றும் கூறுகிறாள். மேலும் அவனிடம் நிபந்தனை ஒன்றை விதிக்கிறாள். அந்த நிபந்தனையானது அவன் அவள் மீது காதல் கொள்வதில்லை என்று. அவனும் அதற்கு சம்மதிக்க இருவரும் இந்த இரவில் இருந்து விடை பெறுகிறார்கள்.

இரண்டாம் நாள் இரவில் மீண்டும் அவன் அவளைச் சந்திக்கிறான். அப்போது "என் வாழ்வின் சிறந்த ஆண்டுகளை வீணாக்கி விட்டேன் என்பது என்றையும்விட இப்பொழுது எனக்கு நன்றாகத் தெரிகிறது!" என்று கூறி அவனுடைய கதைகளை அவளிடம் கூறுகிறான். அவளிடம் தன் கதையை கூறிய பின் நாஸ்தென்கா, "இப்பொழுது என் கதையை உங்களிடம் செல்ல விரும்புகிறேன். இதைக் கேட்டபின் நீங்கள் எனக்கு ஆலோசனை கூற வேண்டும்" என்று கூறுகிறாள். அதுமட்டுமில்லாமல், "எனக்கு வேண்டியது கெட்டிக்காரத்தனமான ஆலோசனையல்ல. மனப்பூர்வமான சோதரவாஞ்சையோடு கூடிய ஆலோசனையே வேண்டும். வாழ்வெல்லாம் நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் கூறுவீர்கள் அல்லவா அப்படிப்பட்டதே வேண்டும்!" என்று கூறுகிறாள்.

தாய் தந்தையை இழந்த நாட்கள் தன் பாட்டியுடன் வளர்கிறாள். சில வருடங்களுக்கு பின் பாட்டிக்கு கண் தெரியாததால் அவளை கண்காணிக்க முடியவில்லை என்று சொல்லி அவளுடைய உடையை தன்னுடைய உடையுடன் சேர்த்து வைத்து ஊக்கு போட்டு அவளைப் பாதுகாக்கிறாள். இந்நிலையில் அவர்களுடைய மச்சு வீட்டிற்கு ஒருவன் குடி வருகிறான்.

எல்லா காலங்களிலும் நமது தமிழ் பாட்டிகள் தன் பேத்தி எந்த ஆணுடனும் பேசக்கூடாது; பழகக் கூடாது என்றே கூறுவார்கள். இதைப்போலவே இரஷ்யா பாட்டியும் நாஸ்தென்காவிடம் "பெண்ணே உன்னை நான் எச்சரிக்கை செய்கிறேன். அவனைப் பார்க்காதே. அவனைப் பற்றி நினைக்காதே. காலம் கெட்டுப் போச்சு!" என்று கூறுகிறாள். எல்லா ஊர்களிலும் பாட்டிகள் இப்படித் தான் இருப்பார்கள் போலிருக்கிறது.

ஆனால் மனிதர்கள் மனம் அப்படி இருப்பதில்லை. ஆம். நாஸ்தென்கா அந்த இளைஞனை விரும்புகிறாள். அவன் ஊரை விட்டு கிளம்பும் பொழுது தானும் வருவேன் என்கிறாள்.ஒரு வருடம் கழித்து தான் வருவதாகவும் அப்போது அவளை அழைத்துச் செல்வதாகவும் கூறுகிறான். இப்போது அவன் வந்திருப்பதாக கூறி அவனைச் சந்தித்து கடிதத்தை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாள். அவனும் கடிதத்துடன் செல்கிறான்.

கடித முயற்சி தோல்வியடைய நாஸ்தென்கா பரிதவிக்கிறாள். அவன் நாஸ்தென்காவை சமாதானப்படுத்த இறுதியில் உணர்ச்சிப்பிழம்பாக தன் காதலை வெளிப்படுத்துகிறான். நாஸ்தென்காவரும் அவன் தன் மேல் கொண்ட காதலை நினைத்து ஏற்றுக் கொள்கிறாள்.

இருவரும் காதலை உறுதிப்படுத்தி கிளம்பும் சமயத்தில் நாஸ்தென்காவின் காதலன் வருகிறான். அந்த நான்காம் நாள் இரவில் நாஸ்தென்கா என்ன முடிவெடுக்கிறாள் என்பதே கதை.

மறுநாள் காலை அவனுக்கு கடிதம் ஒன்று வருகிறது. அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதோடு கதையை முடிக்கிறார் ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி.

நான்காம் நாள் இரவில் அவனும் நாஸ்தென்காவும் தங்கள் காதலை வெளிப்படுத்துகின்ற இடத்தில் ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி உணர்ச்சிப்பிழம்பாக எழுதியிருப்பார். அதேபோல் மறுநாள் காலை அவனுக்கு வந்த கடிதமும் உணர்ச்சிப்பிழம்பாக எழுதியிருப்பார் ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி.

இக்கதையானது, "முன்பின் தெரியாத இருவர் சந்தித்துக் கொள்ளுகிறார்கள். பேசிக் கொள்ளுகிறார்கள். முடிவில் என்னாகிறார்கள்?" என்பதே.

முதல் முறையாக இந்நாவலைப் படிப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும்.

No of users in online: 86