திருக்குர்ஆனில் அறிவியலும் வாழ்வியலும் - எஸ்.ராகவன்,காசிம் முகமது

திருக்குர்ஆனில் அறிவியலும் வாழ்வியலும் - எஸ்.ராகவன்,காசிம் முகமது

மனித குலத்தின் மேன்மைக்காகவும், தனிமனித ஒழுக்கத்திற்காகவும் உலகத்தின் அனைத்து விஷயங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் திருக்குர்ஆனின் மகத்துவத்தை 72 பக்கங்கள் கொண்ட இச்சிறிய புத்தகத்தின் வாயிலாக அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் ஆசிரியர் எஸ்.ராகவன் அவர்கள் எடுத்திருக்கும் முயற்சி சிறப்பாக உள்ளது. இப்புத்தகத்தின் இணையாசிரியராக டாக்டர் காசிம் முகமது அவர்கள் மருத்துவராக பணியாற்றி வந்தாலும் தன் துறை சார்ந்த வேலைகள் மற்றும் தன் குடும்பம் என்று சுயநலமாக இல்லாமல் சமூக அக்கறையுடன் இப்புத்தகம் எழுத ஆசிரியருக்கு உதவியிருக்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதோடு பாராட்டுதலுக்குரியதாகவும் உள்ளது.

ஏக இறைவன் கொள்கையைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளவர்கள் தன் மதத்தினை பரப்புவதற்கான நோக்கத்தில் மட்டுமல்லாமல், உலக மக்கள் யாவரும் விழிப்புணர்வு பெறுவதற்காகவும், நிம்மதியான நல்வாழ்க்கைக்கும் இது போன்ற முயற்சியில் ஈடுபட வேண்டும். ஏனென்றால் இஸ்லாத்தில் பிறந்து, வளர்ந்து நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் பலர், திருக்குர்ஆனின் நன்மைகளை தானும் புரிந்து கொள்வதில்லை; பிறருக்கும் எடுத்துரைப்பதில்லை என்பது வருந்தத்தக்க உண்மை.

இப்புத்தகத்தை படித்துவிட்டு குர்ஆன் ஓதுபவர்கள் அவரவர் தம் தாய்மொழியில் பொருளை உணர்ந்து ஓத வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் வரும். இதற்காகவே ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளலாம். திருக்குர்ஆன் எல்லா காலத்துக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும்படியாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதும், இப்புத்தகத்தின் கடைசி பக்கத்தில் தனது வேண்டுகோளாக திருக்குர்ஆனின் பெருமைகளை எடுத்துச் சொல்வதே என் நோக்கம் என்று குறிப்பிட்டிருப்பதும் மிகச் சிறப்பு.

புவியியல், வானசாஸ்திரம், மழை, வானியல், அறிவியல், தாவரவியல், தேனீக்கள், மது, சூதாட்டம், நையாண்டி, ஆடை அலங்காரம், ஊழல் முறை, சுரண்டல், திருடுதல், வியாபார நியதிகள், கல்வி, கடன், வட்டி, தர்ம சிந்தனைகள் பெற்றோர் - பிள்ளைகள் கடமை, பலதாரமணம், மணவிலக்கு, மறுமணம் மற்றும் மருத்துவம் என்று பல தரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியிருக்கும் திருக்குர்ஆனை ஆழ்ந்து வாசித்து, அதன் உண்மைப் பொருளை கண்டுணர்ந்து இப்புத்தகத்தை எழுதி இருக்கிறார் ஆசிரியர் எஸ்.ராகவன் அவர்கள். வேற்று மதத்தவராக இருந்தாலும், இஸ்லாம் மார்க்கத்தின் மிகப்பெரும்  சொத்தான திருக்குர்ஆனின் மகத்துவத்தை தான் கண்டு வியந்தது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் அதன் நன்மைகள்  கிடைக்க முயற்சித்து தன்னை ஒரு நற்சிந்தனையாளர் என்று நிருபித்திருக்கிறார்.

இந்நூலின் ஒவ்வொரு பகுதியிலும் திருக்குர்ஆனையும், உலகப் பொதுமறை என்று அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் திருக்குறளையும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், திருக்குறள் குறிப்பிடாத சில விஷயங்கள் யாவும் திருக்குர்ஆனில் உள்ளதாக சொல்லியிருப்பது கவனத்திற்குரிய விஷயம்.

இப்புத்தகத்தில் என்னைக் கவர்ந்த வாசகம்,  ''உண்மையான ஆன்மீகம் மிகுதியாக இருக்கும் இடத்தில் அமைதியும், விட்டுக் கொடுக்கும் இயல்பும், சகிப்புதன்மையும், சகோதரத்துவமும் , இரக்க சுபாவமும்  கட்டாயம் இருக்கும்'' என்பதாகும்.

நான் ஆன்மீகவாதி என்று பெருமையாக சொல்லிக் கொள்பவர்கள் மேற்குறிப்பிட்ட உண்மையைப் புரிந்து கொண்டால், உலகில் எந்த பிரச்சனைகளும் எழாது  என்பது என்னுடைய கருத்து.

நல்ல சிந்தனை என்பது மதம், இனம், மொழி, நாடு என்று அனைத்தையும் கடந்து மற்றவர்களுக்கு பயனுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதற்கு இப்புத்தகம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

No of users in online: 138