கேரளாந்தகன் இராஜராஜன் - உளிமகிழ் ராஜ்கமல்

கேரளாந்தகன் இராஜராஜன் - உளிமகிழ் ராஜ்கமல்

ஒவ்வொரு முறையும் வரலாற்று நாவல்களைப் படிக்கும் போதெல்லாம் எனக்குள் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு. அவ்வண்ணமே இப்புதினமும் அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. படிப்பவர்களுக்கு ஆர்வம் குறையா வண்ணம், தன் எழுத்து நடையினை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் ஆசிரியர் உளிமகிழ் ராஜ்கமல் அவர்கள். அடுத்தது என்ன? என்ற ஆவலைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவனம் முழுவதும் இப்புத்தகத்தில் புதைந்திருக்கும்படி கதையை நகர்த்திருக்கும் விதம் மிகச் சிறப்பு.

மரணமே கண்டு அஞ்சியோடும் மாவீரனான "ஆதித்தகரிகாலன்" எவர் சூழ்ச்சிக்கு பலியானார்? என்பதே இந்நாவலின் மையக்கரு. இன்று விஞ்ஞானிகளே வியந்து பார்க்கும் அளவிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லா அக்காலத்திலேயே, மக்களின் நலன் கருதி கல்லணையை கட்டிய ஆதித்த கரிகாலனின் வீரம் மட்டுமல்ல, புத்திக்கூர்மையும் வியத்தகு விஷயமே. "அருள்மொழி இருக்கிறான் எனக்குப் பிறகும் சோழம் காக்க" என்ற ஆதித்தகரிகாலனின் வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இராஜராஜன்" என்று அனைவராலும் அறியப்படும் கதையின் நாயகனான "அருள்மொழிவர்மன்", தமையனைக் கொன்றவர்களைப் பழி தீர்க்கும் வரை சோழத்தின் எப்பதவியையும் ஏற்கப்போவதில்லை என்ற சூளுரையோடு வலம் வருகிறான். சித்தப்பா "மதுராந்தகன்" அரசாட்சியை விரும்பினார் என்பதற்காக "உத்தமசோழர்" என்ற பட்டம் சூட்டி அவரையே சோழத்தின் மன்னனாகவும் அறிவிக்கிறான் அருள்மொழி. அரசாட்சியை உத்தமசோழரிடம் ஒப்படைத்துவிட்டு தமையனைக் கொன்றவர்களைத் தேடிப் பயணிக்கிறான்.

இவ்வாறாக தன்னுடைய 14 வருட தேடுதலுக்குப்பின் கொலையாளிகளை கண்டுபிடிக்கிறான் அருள்மொழிவர்மன். ஆதித்தகரிகாலனைக் கொன்று, சோழ நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள் அந்தணர்கள் தான் என்று தெரிந்தும், அவர்களை கழுவில் ஏற்றிக் கொல்லாது நாட்டை விட்டு வெளியேறச் செய்த அருள்மொழிவர்மனின் தீர்ப்பு குந்தவை மட்டும் வந்தியத்தேவனை மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் அனைவரையும் கொந்தளிக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இச்சூழ்ச்சியில் உத்தமசோழருக்கும் பங்குண்டு என்பதை அறிந்து தேசத்தின் நலன் கருதி, சோழத்தின் மானம் காக்க இப்படியொரு தீர்ப்பை வழங்குகிறான் அருள்மொழிவர்மன்.

காலம் நிச்சயம் பதிலளிக்கும் என மனதின் ஒரு ஓரம் நம்பிக்கை கொண்டு காத்திருந்த குந்தவை மாதேவியாரின் கேள்விக்கெல்லாம் விடையாக, துரோகிகள் அனைவரையும் அப்பொழுது விட்டு விட்டாலும், எப்படி? எந்த இடத்தில்? எந்நேரத்தில் தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற அருள்மொழிவர்மனின் திட்டம் சிறப்பாக உள்ளது.

உத்தமசோழரை பெயருக்கென்று மன்னராக அமர்த்தி விட்டு சோழத்தின் ஒவ்வொரு அசைவையும் தன் பிடியில் வைத்து  இணையரசராக பதவி ஏற்கும் இராஜராஜன், "இக்கணம் முதல் என் செயல்கள் யாவும் அருள்மொழிவர்மனைப் போல் அல்லாமல் என் தமையன் ஆதித்த கரிகாலனையே பிரதிபலிக்கும்" என்று உரைக்கும் பொழுது அவர் பேச்சில் அனல் பறக்கிறது.

சூழலையே தனக்கேற்றவாறு அமைத்துக் கொள்பவன் தான் தலைவன் என்பதற்கிணங்க, சோழத்திற்கெதிராக போர் புரிய துணியும் சேர மன்னரை, தன்னுடைய புத்திக்கூர்மையாலும், சாமர்த்தியத்தாலும் சேர நாட்டையே தன்வசமாக்கி "கேரளாந்தகன் இராஜராஜன்" என்ற பட்டத்தையும் பெற்று விடுகிறான் இராஜராஜசோழன்.

அதுமட்டுமல்லாமல் முடிவெடுக்கும் ஒவ்வொரு முக்கிய தருணங்களிலும், எவராலும் சிந்திக்கக் கூட முடியாத ஒன்றை செயல்படுத்தி வீரத்திலும், விவேகத்திலும் மட்டுமல்லாமல் தன் பரந்த மனப்பான்மையினாலும் சாதுரியமான பேச்சினாலும், கருணைப் பார்வையாலும் அனைவரின் மனம் கவர்ந்து வியக்க வைக்கிறான் அருள்மொழிவர்மன். இப்புதினத்தை வாசித்த பின் வாழ்ந்தால் இப்படி ஒரு மாமனிதனைப் போல் நல்லெண்ணம் கொண்ட மனிதனாக வாழ வேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொருவரின் மனதிலும் தோன்றும்.

வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்த வேண்டும் என்ற ஆர்வத்தோடு செயல்படும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் இப்புத்தக மதிப்புரையின் மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

No of users in online: 43