ரோமாபுரிப் பாண்டியன் - கலைஞர் கருணாநிதி

ரோமாபுரிப் பாண்டியன் - கலைஞர் கருணாநிதி

51 அத்தியாயங்களைக் கொண்ட ரோமாபுரிப் பாண்டியன் 1974 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட முதல் சரித்திர நாவல். நூல் வெளியீட்டு விழா தலைமை தேவநேயப் பாவாணர் அவர்கள். நூலின் முதற்படியினைப் பெற்றவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

ரோமாபுரிப் பாண்டியன் கதை கி.மு.20-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. சோழ மன்னன் கரிகாலனின் பூம்புகார் அன்று புதிய பொலிவுடன் திகழ்கிறது. காரணம் பாண்டிய நாட்டு வேந்தன் பெருவழுதியின் பயணம். இந்த உறவுக்கு காரணம் புலவர் காரிக்கண்ணனார். இந்நிலையில் பாண்டிய, சோழ உறவை சிதைக்க முற்படுகிறான் சோழ மன்னன் கரிகாலனிடம் தோற்றோடிப் போன சிற்றரசன் இருங்கோவேள். சிற்றரசன் இருங்கோவேளின் ஆட்கள் கரிகாலனை கொல்ல முற்படுகிறார்கள். ஆனால் பாண்டிய மன்னனின் பாதுகாவலன் செழியன் அதை தடுத்து விடுகிறான். எனவே அவர்கள் செழியனை சூழ்ச்சியால் கடத்தி விடுகிறார்கள்.

இந்நிலையில் புலவர் காரிக்கண்ணனாரைப் பார்க்க ஒருவன் வருகிறான். அவனிடமிருந்து தவறவிடப்பட்ட "இருங்கோவேள்" என்று பொறிக்கப்பட்ட பதக்கம் ஒன்று புலவரின் மகள் முத்துநகை கைகளில் கிடைக்கிறது. இந்த நாட்டின் பகைவனான இருங்கோவேளிடம் தந்தை உறவு கொண்டாடுகிறார் என நினைத்து நாட்டையும், செழியனையும் காப்பாற்ற வீட்டை விட்டு புலவரின் மகள் முத்துநகை வெளியேறுகிறாள்.

காட்டுக்குள் செல்லும் முத்துநகைக்கு இருங்கோவேளின் தங்கை தாமரையிடம் அறிமுகமாகி தான் யார் என்று மறைத்து பழக்கமாகிறாள். அதுமட்டுமில்லாமல் இருங்கோவேளும் ஒரு விறகு வெட்டுபவனாக பாண்டிய ஒற்றனாக வீரபாண்டி எனும் பெயரில் அறிமுகமாகி முத்துநகைக்கு காதலனாகிறான்.

இந்நிலையில் பாண்டிய மன்னர் செழியனை மீட்க படை திரட்டி தயாராகிறார். இதற்கிடையே மகள் முத்துநகை மற்றும் அரசர் கரிகாலனால் புலவர் காரிக்கண்ணனார் துரோகியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

மன்னன் இருங்கோவேளின் மனைவி வேளிர்குல இளவரசி பெருந்தேவி பல வருடங்கள் நோயால் பாதிக்கப்பட்டு காட்டினில் கணவருடன் வாழ்கிறாள்.அவள் ஒருநாள் இரவில் யாருக்கும் தெரியாமல் காட்டினில் இருந்து வெளியேறி தன் கணவன் இலட்சியம் நிறைவேற கரிகாலனை கொல்ல புறப்படுகிறாள். அவள் கரிகாலனை கொல்லும் முயற்சியில் வேறு ஒருவன் குறுக்கே புகுந்து விடுகிறான். எனவே அவளின் திட்டம் தோல்வி அடைந்து மரணமடைகிறாள்.

பகைவனின் இடத்தில் அண்ணியார் இறந்தது இருங்கோவேளின் தங்கை தாமரைக்கு தெரியவருகிறது.அப்போது தாமரைக்கு, சிறையில் இருக்கும் செழியன் தன் அண்ணியின் தம்பி என்று தெரிய வருகிறது செழியனின் துணையுடனும் சில நிபந்தனைகளுடனும் சோழ நாட்டிற்கு வருகிறாள். சிற்சில சம்பவங்களுக்கு பிறகு வேளிர்குல மன்னன் இருங்கோவேளும் அவனால் நேசிக்கப்பட்ட முத்துநகை கையாலேயே சோழ நாட்டில் சோழ மன்னன் முன்னே கொல்லப்படுகிறான்.

இந்நிலையில் இருங்கோவேளின் தங்கை தாமரையும் அண்ணி மற்றும் அண்ணன் இருங்கோவேள் மறைவுக்குப் பிறகு காணாமல் போகிறாள். மேலும் பாண்டிய நாட்டிற்க்கு ரோமாபுரியிலிருந்து தூதுவர் ஒருவர் வந்துள்ளதாக பாண்டியத் தளபதி நெடுமாறன் சோழ மன்னர் கரிகாலனிடம் தெரிவித்து அவரிடம் மடல் ஒன்றை கொடுக்கிறான். அதில் பாண்டிய மன்னர் பெருவழுதிப் பாண்டியன் உடல் நலங்குன்றி படுக்கையில் விழுந்து விட்டான் என்ற செய்தியும் உள்ளது.

எனவே சோழ மன்னர், செழியனுடன் புலவர் காரிக்கண்ணனாரை பாண்டிய நாட்டிற்கு அனுப்புகிறான். (வேளிர்குல மன்னன் இருங்கோவேள் இறப்பதற்கு முன் புலவர் காரிக்கண்ணனார் குற்றமற்றவர் எனத் தெரிந்து அவரை சோழ மன்னர் விடுதலை செய்கிறான்). அங்கு சேர்ந்த உடன் செழியனை ரோமாபுரிக்கு தூதுவனாக அனுப்ப திட்டமிடுகிறார்கள். அவன் ரோமாபுரிக்குச் செல்வது பாண்டியத் தளபதி நெடுமாறன் ஒருவனுக்கு மட்டும் பிடிக்கவில்லை.

மேலும் புலவர் காரிக்கண்ணனார் சோழ இளவரசர் இளம்பெருவழுதி, தாமரையை காதலிப்பதாக கூறுகிறார். ஆனால் செழியனோ தாமரையை விரும்புகிறான். எனவே செழியன் தாமரையை மறக்க ரோமாபுரிக்கு தூதுவனாக போவதற்கு முக்கிய காரணம் இதுவும் ஒன்று. 38ஆவது அத்தியாயத்தில் தான் செழியன் ரோமாபுரி செல்வதாக கூறப்பட்டுள்ளது. ரோமாபுரியை கரிகாலன் - பெருவழுதிப் பாண்டியன் காலத்தில் ஆண்டு கொண்டிருப்பது அகஸ்டஸ் சீசர் எனும் மன்னர்.

ரோமாபுரியை சென்றடைந்த செழியனை அகஸ்டஸ் மன்னரின் அந்தரங்க செயலாளரான ஜூனோ எனும் பெண் வரவேற்கிறாள். பின்னர் அவன் அங்கு அகஸ்டஸ் மன்னரை சந்திக்கிறான். ரோமாபுரியின் வரலாற்றை செழியனின் மொழிபெயர்ப்பாளனின் மூலம் தெரிவிக்கும் கலைஞர் தமிழர்,தமிழ்நாட்டின் வரலாற்றைப் பற்றி செழியன் மூலம் ரோமாபுரி செனேட் - பாராளுமன்றத்தில் அழகாக சொல்லியுள்ளார்.

செழியன் ரோமாபுரியில் தங்கியிருக்கும்போது அகஸ்டஸ் சீசருக்கு அவரது எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. செழியன் அகஸ்டஸ் மன்னரின் உயிரை அவரது எதிரிகளிடமிருந்து காப்பாற்றுகிறான். இந்நிலையில் தமிழகத்தில் பாண்டிய மன்னரின் உடல் நிலை மோசமாகிறது. இளவரசன் இளம்பெருவழுதியோ தாமரையைத் தேடி ஊர் ஊராகத் தேடி அலைகிறான். தளபதி நெடுமாறனுக்கோ அரியணையை எப்படி கைப்பற்றுவது என்ற சிந்தனை. எனவே இச்சூழ்நிலையில் பாண்டிய மன்னர் செழியனை ரோமாபுரியிலிருந்து வரவழைக்க எண்ணுகிறார். அதற்கு புலவர் மகளை ரோமாபுரிக்கு அனுப்புகிறார். ரோமாபுரியிலிருந்து செழியன் கிளம்பும் நாளில் அகஸ்டஸ் மன்னர் ஜூனோவை செழியனுக்கு பரிசுப் பொருளாக அளிக்கிறார். ஜூனோவும் செழியனை காதலிக்கிறாள்.

பாண்டிய நாடு வந்ததும் அரசனைப் பார்க்கிறான். செழியனைப் பார்த்த மாத்திரத்தில் கண்ணை மூடுகிறார் அரசர். இப்போது அடுத்த மன்னராக இளவரசன் இளம்பெருவழுதி முடிசூட்டு விழா. சோழ மன்னன் மற்றும் புலவர் காரிக்கண்ணனார் இருவரும் அடுத்த மன்னரைத் தேர்தெடுக்க ஆயத்தமாகிறார்கள். ஆனால் தளபதி நெடுமாறன் ஒரு திடுக்கிடும் உண்மையைக் கூறுகிறான்.

1. தளபதி நெடுமாறன் கூறிய உண்மை என்ன?

2. இளவரசன் இளம்பெருவழுதி முடிசூட்டு விழா என்னவானது?

3. பாண்டிய நாட்டின் அடுத்த மன்னராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்?

4.. தாமரை என்ன ஆனாள்?

வாசகர்கள் இந்த புதினத்தை வாங்கி படித்து இதை தெரிந்து கொள்ளலாம்.

No of users in online: 138