சங்கத் தமிழ்

சங்கத் தமிழ்

ஒரு இனத்தின் தொன்மையையும் பெருமையையும் அறிய அந்த இனத்தின் இலக்கியம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் உதவுகிறது. தமிழ் மொழியின் இலக்கியத்தை அறிய சங்க இலக்கியங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. சங்க இலக்கிய நூல்களுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர்.

கலைஞர் கருணாநிதி அவர்களும் சங்க இலக்கியத்தில் உள்ள 100 பாடல்களுக்கு எளிய நடையில் கவிதை வடிவில் விளக்கம் தந்துள்ளார். குங்குமம் இதழில் வாரவாரம் எழுதிய இச்சங்க கவிதைகளை மொத்தமாக சங்கத் தமிழ் என்று நூலாக்கி தந்துள்ளார். ஒவ்வொரு கவிதைகளுக்கும் சிறப்பான ஓவியங்களும், அக்கவிதைகளுக்கேற்ற தலைப்பும் வந்துள்ளன. 484 பக்கங்களை கொண்ட சங்கத் தமிழ் என்ற இப்புத்தகத்தில் முதல் 78 கவிதைகள் எளிய கவிதை நடையிலும் 11 கவிதைகள் இசைப்பாடல் வடிவிலும் மீதி உள்ள 11 கவிதைகள் ஒரு தலைக் காதல் என்ற தலைப்பிலும் வந்துள்ளது.

முதல் 78 கவிதைகளுக்கு கலைஞர் எடுத்துக் கொண்ட நூல்கள்,

புறநானூறு-37, குறுந்தொகை-10, நற்றிணை-8, அகநானூறு-6, கலித்தொகை-5, ஐங்குறுநூறு- 2, பத்துப்பாட்டு-2, நெடுநல்வாடை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பரிபாடல் முறையே ஒவ்வொரு பாடல்கள், அகம் புறம் சேர்ந்து ஒன்று மற்றும் தேவநேயப்பாவணர் அவர்களால் கண்டெடுக்கப்பட்டு சங்க இலக்கியத் தொகுப்புகளில் இணைக்கப்படாமல் விடுபட்டுப் போன பாடல் ஒன்று. இசைப்பாடல் வரிசையில் குறுந்தொகையிலிருந்து 6, புறநானூற்றிலிருந்து 3, கலித்தொகையிலிருந்து 2 பாடல்கள். ஒரு தலைக் காதல் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள 11 கவிதைகள் நற்கண்ணையார் என்ற பெண்பாற் புலவர் சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளி மீது காதல் கொண்டு அக்காதல் கை கொள்ளாமல் போனது பற்றி கவிதைகளாக வடித்துள்ளார்.

இப்புத்தகத்தில் உள்ள முதல் பாடல் புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் எழுதிய

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே;

என்ற பாடலுக்கு "யாதும் ஊரே; யாவரும் கேளிர்!" என்ற தலைப்பில் எளிய நடையில் விளக்க கவிதையைத் தந்துள்ளார் கலைஞர் கருணாநிதி அவர்கள். இக்கவிதையில் புறநானூற்றுக் குறிப்பில் இருந்த பூங்குன்றன் என்ற ஊர் இப்போது மகிபாலன் பட்டியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

முதுகண்ணன் சாத்தனார் இன்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியைப் பாராட்டும் பொழுது, "புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின் வளவன் ஏவா வான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து" என பாராட்டுகிறார். இதனை கலைஞர் கருணாநிதி அவர்கள்,

விஞ்ஞானம் வளர்ந்ததாலே விண்ணூர்ந்து; இற்றைநாளில்
வியத்தகு புதுமைகளை விளைக்கின்றார் அறிவுடையார்! ந முற்றிலும்
அஞ்ஞானம் நிறைந்த காலமல்ல பழங்காலம்;
அன்றைக்கும் வானத்துக் கோள்களை ஆராய்ந்து

காலமாறுதலைக் கணக்கிட்டு, கோள்களின் சுழற்சிக்
கோலமதைத் தீட்டிக்காட்டி; குமிழ் மின்னல் சிரிப்புக்

கொட்டுகின்ற விண்மீண்கள்; தாங்களிருக்குமிடம்
விட்டுப் பெயர்கின்ற நிலையறிந்து நாழிபார்த்துக் கூறி;

கதிரவனைச் சந்திரனைப் பூமியின் நிழல் சூழ்ந்து - நம்
கண்ணுக்கு ஒருநாள் மறைக்கின்ற 'கிரகணம்' வருகின்ற

நாளைக்கூட நமது முன்னோர் வானநூல் இயற்றித்தந்து
வேலைதவறாமல் விரித்துரைத்தார் எனல் வேடிக்கையல்ல!

ஒளிபெற்று வாழ்ந்த நாமோ; திடுமென இருட்டில் வீழ்ந்தோம்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வைரமென ஒளிபொழியும் இப்புறப்பாட்டில்;
'வலவன் ஏவா வான ஊர்தி' என வருதலாலே

வலவன் ஏவுகின்ற வான ஊர்தியும் அக்காலம்
வழக்கத்தில் இருந்ததெனக் கொள்ளலாம் அன்றோ?

ஆதியிலே அறிவியலில் அக்கறை காட்டியதால்; வான
வீதியிலே வலவரென்போர் ஊர்தியினைச் செலுத்தியிருக்கவும் கூடும்!

என மகிழ்கிறார் கலைஞர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பாடிய பாடலுக்கு(புறநானூறு: பாடல்: 72) கலைஞர் அவர்கள் எழுதிய விளக்க கவிதை ஒன்று,

"எழுவரிடம் எதிர் நிற்க முடியாமல் நான் / விழுவதானநிலையொன்று தோன்றுமாயின் / குடிமக்கள் நலம் பேணாக் / கொடுங்கோல் மன்னன் எனக் / குவலயம் எனைத் தூற்றட்டும்!/ தோல்வி என்னைத் தழுவுமாயின் / தொழுதேத்தி எனை நாடி / இல்லையென்று இரப்போர்க்கு / எதுவும் வழங்காத பாவியென / வையகம் இகழுமளவுக்கு / வறுமை வந்தென்னை வருத்தட்டும்! / வெற்றி மாலை என் தோளை வெறுத்து விட்டால் / உற்றார் அனைய எளியோரின் துயர்போக்க / உதவிட முடியா நிலை எனை வந்தடையட்டும்! / மாற்றார் கை ஓங்கி நிற்க - நம் / மறவர் படை தாழ்ந்து விட்டால், / மாங்குடி மருதனார் தலைமை தாங்க / மாங்குயிலோசைத் தமிழ் மொழியில் / பாப்புனையும் பாவாணர் அனைவருமே / பாண்டியத்தை இனிப்பாடுவது சிறப்பல்ல என்று இந்த / நெடுஞ்செழியப் பாண்டியனை நீங்கி / நெடுந்தொலைவு சென்றிடட்டும்!" என உரை எழுதியுள்ளார்.

செம்புலப் பெயனீரார் பாடிய குறுந்தொகைப் பாடல் ஒன்று எல்லோரும் அறிந்ததே. அப்பாடல்,

"யாயும் ஞாயும் யாரா கியரோ?/ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?" எனும் பாடலுக்கு "அவள் நிலமானாள்; அவன் மழையானான்!" என்ற தலைப்பில் கவிதை கொடுத்துள்ளார் கலைஞர் அவர்கள்.

மற்றொரு நற்றினை கவிதை ஒன்று காதலியை காதலன் கொஞ்சும் பொழுது தன் தங்கை ஒருத்தி பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறுகிறாள். எங்கே? என்று கேட்ட பொழுது புன்னை மரத்தை காட்டி இவள் தான் என் தங்கை என்று காட்டுகிறாள். இதனை கலைஞர், "இங்கே வேண்டாம்.. தங்கை இருக்கின்றாள்!" என்ற தலைப்பில் கவிதையாத்துள்ளார்.


"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்;
இவற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!"

என பாரி மகளிர் பாடிய புறநானூற்றுப் பாடலுக்கு கலைஞர் அவர்கள் "பாரி மகளிர் பாடிய செய்யுள்" என்ற தலைப்பில் கவிதை பாடியுள்ளார்.

போர்க்களத்தில் மகன் முதுகில் காயம்பட்டு இறந்தான் என கேள்விப்பட்டு போர்க்களம் நோக்கி செல்கிறாள் தாய். அப்பொழுது அவன் மகன் ஈட்டிக்கு மார்பு காட்டி தான் இறந்தான் என்பதை காண்கிறாள். அதனை கலைஞர் இவ்வாறு கவிதை பாடுகிறார்.
"இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி! / இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள்! / "எதைக் கண்டாலும் இனிக்கவலை இல்லை / என் மகன் வீரனாய் இறந்தான்" என்றாள். / அறுத்தெறிய இருந்தேன்/ அவன் குடித்த மார்பை - அடடா! / கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே? / வாளிங்கே! அவன் நாக் கெங்கே?"

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப்பாண்டியன் அரசி கோப்பெருந்தேவி எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்வதாய் ஒரு பாடல் புறநானூற்றில் உள்ளது. அப்பாடல்,

பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும், / சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; / ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும், / 'மூத்தோன் வருக' என்னாது, அவருள் / அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; / வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், / கீழ்ப்பால் ஒருவன் கற்பின், / மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே".

இப்பாடலுக்கு கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை வரிகள், அன்னையொருத்திக்குப் பிறந்த பிள்ளைகளில், /கல்வி கற்ற பிள்ளை- கல்லாப் பிள்ளை இவையிரண்டும் அவளுக்கு / கண்கள் இரண்டைப்போல்தானே?" என கேட்டாள்! / "பிறந்தார்கள் இருவர், ஒரு தாய் வயிற்றில் என்றாலும் / சிறந்தோனாய்த் தாய் எண்ணிச் சிந்தை குளிர்வதெல்லாம் / அறம்,திறம் உணர்த்துகின்ற கல்வி நீரோடையிலே/ அன்றலர்ந்த மலராக இருக்கின்ற அறிவார்ந்த மகனைத்தான்!" / என்று கூறிக்கொண்டே மன்னன் எழிலரசிமேல் சாய்ந்து / எண்ணத்தை ஓடவிட்டு மேலும் எழுதினான் ஓலையிலே!/ தாய்க்கு மட்டுமல்ல இந்த நிலை / தரணியாளும் அரசுக்கும் பொருந்தும்! / முன்வரிசைக்கு மதிப்பளிக்க வேண்டி, / மூடனாயிருந்தாலும் பரவாயில்லையென்று; / வீட்டுக்கு மூத்தோனை அழைத்து அறிவுரைகள் கேளாமல்; நாட்டுக்கு நலம் பயக்கும் செயல்கள் குறித்து - /இளையவனாய் இருப்பினும், கல்வி கேள்வியில் யார்க்கும் / இளையாதவனாய்த் திகழ்பவனையே அரசும் அழைத்துப் பேசும் / நாலுவகை மனிதர்களும் வாழுகின்ற நமது நாட்டில் / மேல்நிலை வாழ்வோரெல்லாம் மேலோர் அல்ல - அன்றிக் கீழ்நிலை வாழ்வோர் கீழோருமல்லர்! ஒரு / சூழ்நிலையாலே வந்தது இந்த தீவினையெனினும், / கீழிருப்போன் கல்வி கேள்வியிற் சிறந்தோனாயின் மேலிருப்போன், அவன்கீழ் இருப்பவனேஆவான்!"

இவ்வாறு மொத்தம் நூறு சங்க காலக் கவிதைகளுக்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் மிக எளிய நடையில் கவிதை வரியில் விளக்கம் தந்துள்ளார். இப்புத்தகம் முதன்முதலாக சங்க கால கவிதை படிப்பவர்களுக்கு மிகச்சிறந்த நூலாக அமையும்.

No of users in online: 93