வாடிவாசல்
சி.சு.செல்லப்பா அவர்களால் எழுதப்பட்ட குறுநாவல் வாடிவாசல். இதனுடைய முதல் பதிப்பு 1959. இக்குறுநாவல் காளையையும் காளை அணைபவனையும் பற்றிய ஜல்லிக்கட்டுக் கதை. ஆம். ஜல்லிக்கட்டில் தனக்கு மரணம் கூட நேரிடலாம் என்று தெரிந்தே வரும் மனிதனுக்கும் என்ன நேரிடுகிறது என்று தெரியாமலே உள்ளே வரும் மிருகத்திற்கும் நடக்கிற கதை. ஆதிகாலத்தில் இருந்து தமிழர்கள் வீரத்தையும் காதலையும் போற்றியவர்கள். தங்களுடைய வீரத்தை தனக்கு உணவளித்த, வாழ்வளித்த மாடுகளிடம் காண்கிறார்கள்.
சல்லிக்கட்டில் காளை அணைபவனுக்கு, ஒவ்வொரு காளைகளின் தந்திரம், அது பார்க்கிற பார்வை, கொம்பலைப்பு, திரும்புகிற விரைவு இவற்றை அறிந்திருக்க வேண்டும். இங்கு சி.சு.செல்லப்பா அதன் நுணுக்கங்களை ஒரு காளையை அணைப்பவனை விட அதிகமாகவே சல்லிக்கட்டு பற்றி தெரிந்துள்ளார்.
மேலும் ஒரு இடத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார். "நல்ல வேலைக்காரன் என்று சொல்லப்படுகிற எந்த மாடு அணைகிறவனும் இடம்பிடிக்கப் பறக்கும் இடம் அவர்கள் காலூன்றி நின்ற இடம் தான். ஒன்று வலப்பக்கம் இல்லாவிட்டால் இடது பக்கம்" என்று மாடு அணைகிறவன் எவ்விடத்தில் இருந்து மாடு அணைக்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
பிச்சி என்னும் வாலிபனும் அவன் சகபாடியும் மச்சானும் ஆன மருதனும் உசிலனூரிலிருந்து பிரசித்தி பெற்ற செல்லாயி சாட்டுக்கு ஜல்லிக்கட்டு பார்க்க வருகிறார்கள். அவர்கள் ஒரு திட்டத்துடனேயே காளைகளை வேடிக்கைப் பார்க்கிறார்கள். அவர்கள் செல்லாயி சல்லிக்கட்டு பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாட்டையா என்னும் பெரியவர் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். மேலும் அவர்களுடன் அவருக்கு ஒரு இணக்கமான நட்பு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் அவர் அங்கு வந்திருக்கும் ஒவ்வொரு காளைகளைப் பற்றியும் அதன் குணங்களையும் அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
இறுதியில் அந்த ஏரியாவில் யாரும் அடக்க முடியாத ஜமீன்தாரின்(மொக்கையத் தேவர்) காரி எனும் மாட்டை பிச்சி அடக்குகிறான். காரணம் அவனுடைய தந்தை(அம்புலி) இதே காரியால் முட்டப்பட்டு மரணம் அடைகிறான். அப்போது இறக்கும் தருவாயில் தன் மகனிடம் நீயாவது காரியை அடக்க வேண்டும் என்று கூறிகிறார். தன் தகப்பனின் கடைசி ஆசையை நிறைவேற்றவே கோதாவில் இறங்கி காரி என்னும் காளையை அடக்கி ஜமீன்தாரிடம் பரிசு பெறுகிறான். இறுதியில் பிச்சி இடம் தோல்வி கண்ட காரியை ஜமீன்தார் என்ன செய்கிறார் என்பது தான் கதை.
செல்லப்பாவின் எழுத்து நடை ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ்பவனின் பேச்சை கொண்டு செல்கிறது.
"ஆமா, நீங்க பேசிக்கிட்டது காதுலே விளுந்திச்சி. நீ ஏதோ சொன்னே, அந்த தம்பி ரெண்டு சொல்லிச்சு."
"ஆனா வாய்விட்டுப் பேசிட்டீங்களே தம்பி, இந்தக் கிளட்டுக் காதுலேகூட சுரீர்னு விளும்படியா"
"தம்பி, கிளவனை அப்படி யெல்லாம் குளுப்பாட்டிப் பேசி மயக்கிறமுடியாது. இளம் புள்ளே நீ. தெரியுதா?"
"ஏண்டா, பசுமாட்டுச் சாணியை மிதிக்க பயந்த பயலே! செல்லியட்டு வேறே பாக்க வந்துட்டியாடா நீ? மாட்டைப் பாருன்னு என்னையா சொல்ற! கண்ணைக் கட்டிக்கிட்டு சலங்கை மாலை சத்தத்தை கேட்டுச் சொல்லட்டுமா எந்தந்த மாடு போகுதுன்னு. நாய்ப்பயலே! பேச வந்துட்டான் ஆளுன்னு! ஊட்டுக்குப் போய் உங்க ஆத்தா சேலைக்குள்ள ஒண்டிக்கடா!"
"இவனுகளும் இருக்கானுங்களே! ஒரு பத்துப் பேர் சுத்திக்கிருவானுங்க. மானாங்காணியா நின்னு காளைக்கு டுர்ர்ரீ காட்டுவானுங்க".
இவையெல்லாம் பாட்டையா பேசுவதாக சி.சு.செல்லப்பா படைத்துள்ள வரிகள்.
பிச்சி, காரி மாட்டை அடக்குவதை சி.சு.செல்லப்பா 13 பக்கங்களுக்கு மேல் விவரித்திருப்பார். அந்த 13 பக்கங்களும் அச்சு அசலாக நேரிலேயே பார்ப்பதாகவும், ஒரு பதட்டம் ஊட்டுவதாகவும் அமைந்திருக்கும்.
இறுதியில் காளையை வெற்றி கொண்டாலும் பிச்சி ஜமீனிடம் பேசும் பொழுது, "மவராசா, செல்லாயி சமீன் மாட்டைப் புடிக்க இந்த நாய் வல்லீங்க. மூச்சுப் போறதுக்கு முந்தி அப்பாரு சொன்னாரு. 'பிச்சி நீயாவது காரிக் களுதையை...' அதை அவர் முடிக்கில்லீங்க. அதுக்குத்தான்..." அவன் கண்களில் நீர் வந்து விட்டது.
என்னதான் ஒருவனிடம் வீரம் இருந்தாலும் அவனுடைய வீரம் என்பது அக்காலத்தில் பணம், புகழ், சுயசாதி இருப்பவர்களிடம் செல்லுபடி ஆகாது என்பதை மேற்கண்ட வரிகளில் இருந்து சி.சு.செல்லப்பா காட்டுகிறார்.