தொ.பரமசிவன் நேர்காணல்கள்

தொ.பரமசிவன் நேர்காணல்கள்

தொ.ப என்று பெருமக்களால் அழைக்கப்பட்ட தொ.பரமசிவன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களுக்கு அளித்த நேர்காணல்கள் காலச்சுவடு பதிப்பகத்தால் "தொ.பரமசிவன் நேர்காணல்கள்" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. ஏற்கனவே "செவ்வி" என்ற பெயரில் வெளிவந்த புத்தகத்தில் உள்ள நேர்காணல்களுடன், விகடன் தடம், தீராநதி, தமிழ் ஒப்புரவு, கூட்டாஞ்சோறு, பிள்ளைத் தமிழ்  ஆகிய இதழ்களில் வெளியான நேர்காணல்களும் சேர்ந்து  "தொ.பரமசிவன் நேர்காணல்கள்" என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

தொ.ப.வின் சிறப்பு என்பது அவர் நேரடியாக மனிதர்களைச் சென்று சந்தித்து உரையாடல் வழியாக அவர்கள் வழங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகளை மீட்டு தந்தவர். இவருடைய நேர்காணல்கள் கீழ்க்கண்ட தலைப்பில் இப்புத்தகத்தில் வந்துள்ளது.

1. பார்ப்பனர்களுக்கு அதிகாரமே உணவு(நேர்காணல் செய்தவர்: ஆர்.ஆர்.சீனிவாசன் - தலித் முரசு: டிசம்பர் 2001)

2. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதத் சித்தாந்தம்(மணி - தீராநதி: ஜூன் 2002)

3. மறுபடியும் மறுபடியும் பெரியாரிடம்(ஷோபாசக்தி - காலம்)

4. சாதி - வர்ணம் - நடைமுறை(தமிழ் ஒப்புரவு - அக்டோபர்-நவம்பர் 2004)

5. காஞ்சி மடமும் கைதான மடாதிபதியும்(ச.தமிழ்ச்செல்வன் - கூட்டாஞ்சோறு)

6. கால்டுவெல் என்ற மனிதர்(ஆ.தனஞ்செயன் - மாற்றுவெளி: நவம்பர் 2008)

7. சாதிகள் உண்மையுமல்ல... பொய்மையுமல்ல...(அப்பணசாமி - தீராநதி: ஜூன் 2010)

8.  திராவிடம் - பண்பாட்டு அடையாளம்(சங்கர ராமசுப்பிரமணியன் - சண்டே இண்டியன்: 2010) 9. இருட்டறையில் வெளிச்சம் வரவேண்டும்(அ. முத்துலிங்கம் -  தமிழினி: 2004)

10. திராவிடக் கருத்தியல் ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை(கீற்று.காம் - 20.05.2012)

11. பன்முக அடையாளம்(விகடன் தடம்)

12. மொழிக்கல்வியும் மதிப்பீடுகளும்(வ.கீதா, கோ.பழனி - பிள்ளைத்தமிழ்)

நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் மரபு, சிறு தெய்வ வழிபாடு இவற்றை ஆய்வு செய்த தொ.பரமசிவன் அவர்கள் தன்னை 95% "பெரியாரிஸ்ட்" என்றும் தனக்குத் தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லை. அவற்றை வணங்குகிற மக்கள் மீது கவர்ச்சி இருக்கிறது; நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் அழகை நான் ரசிக்கிறேன் என்கிறார். "பெரியாரை, கம்யூனிஸ்டுகள் எப்படி புரிந்து கொண்டனர்"? என்ற கேள்விக்கு, "சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடிய பெரியாரை "பாசிஸ்ட்" என்று முத்திரை குத்தினார்கள். பார்ப்பனீயத்தைச் சரியாக புரிந்து கொள்ளாமல் பெரியாரை எதிர்த்தார்கள்" என்றும் 'பிராமண துவேஷம்' என்ற சொல்லை கம்யூனிஸ்டுகள்தான் உருவாக்கினார்கள் என்றும் அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் 1857இல் தொடங்கிய சென்னை பல்கலைக்கழகத்தில் 1914 வரைக்கும் தமிழ்ப் பாடத்திட்டக் குழுவே கிடையாது என்றும் முதன்முதலாக தமிழில் பட்டம் வந்ததும் 1929இல் என்றும் கூறுகிறார். அறிவு என்பதும் ஆராய்ச்சி என்பதும் புத்தகங்களுக்குள்ளாகவும் நூலகங்களுக்குள்ளாகவும் மட்டுமே இருக்க முடியாது. எளிய மக்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன? அவர்களுக்கு எழுதத் தெரியாவிட்டாலும், அவர்கள் அறிஞர்கள் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது என்று கூறுகிறார்.

"இருந்தாலும் இன்றைக்கு நாட்டார் தெய்வங்களுக்கான மரபு, அதற்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறதே? அதற்கான தேவை இப்போதிருக்கிறதா?" என்ற கேள்விக்கு, "இருக்கிறது. ஒரே தெய்வக் கோட்பாடு என்பது அரச உருவாக்கத்திற்குத் தேவையானது.

"ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பதெல்லாம் மக்கள் விரோதச் சித்தாந்தம்" என்றே நான் கருதுகிறேன். இந்துத்துவவாதிகளைக் கேட்டால் ஒன்றே குலம் எல்லோரும் இந்தியர் என்கிறார்கள். ஒருவனே தேவன் என்றால் இராமன் என்கிறார்கள். ஆனால் பன்முகத் தன்மையுள்ள கலாச்சாரத்தைப் பேணிக் காப்பவை இந்த நாட்டார் தெய்வங்கள். இந்தப் பன்முகத்தன்மையை எதிரொலிக்கிற வரைக்குமே சமூகம் ஜனநாயகத் தன்மையுடன் இயங்கும். ஒரே கடவுளை எப்போது கொண்டு வந்து நிறுத்துகிறீர்களோ, அப்போது பலதரப்பட்ட தெய்வங்களை நிராகரிக்கிறீர்கள். ஏனென்றால் நூறுவகைப்பட்ட மனிதர்களை, நூறுவகைப்பட்ட நம்பிக்கைகளை, நூறுவகைப்பட்ட வழிபாட்டு முறைகளை நாம் அங்கீகாரம் செய்தாக வேண்டும். அப்படியிருந்தால் தான் நாம் ஜனநாயக ரீதியாக இயங்குகிறோம் என்று பொருள்"  என்கிறார்.

உலகமயமாக்கல் கேள்விக்கு, "உலகமயமாக்கல் என்பது ஒரு கொடுமையான பொருளாதாரச் சுரண்டல் மட்டுமல்ல அதைவிடப் பன்மடங்கு மோசமான கலாச்சாரச் சுரண்டல் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் சுயமான பொருளுற்பத்தி, சுயமான அறிவுற்பத்தி இவை இரண்டும் தங்களைத் தவிர வேறு எவரிடமும் இருக்கக்கூடாது என்று ஏகாதிபத்தியம் கருதுகிறது. ஆனால் உலகமயமாக்கலிலே வேறு சில விளைவுகளும் உண்டு.

குறிப்பாக இந்தியாவினுள்ளே கணிப்பொறியியல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் அது ஒரு பயனுறு அறிவியல். வெள்ளைக்காரன் கொண்டு வந்த சூத்திரங்களை மனனம் செய்யும் பார்ப்பனர்களுக்குச் சாதகமான கல்வி முறையைக் கணிப்பொறி உடைத்துள்ளது. உனக்கு என்ன மனப்பாடம் செய்யத் தெரியும் என்ற கேள்வியைத் தவிர்த்து உனக்கு என்ன செய்யத் தெரியும் என்ற கேள்வி கல்வித் துறையிலே கேட்கப்படும் நிலை தோன்றியுள்ளது. இது நமக்குச் சாதகமாக சில பின்விளைவுகளை உண்டாக்கும்"

மேலும் தொ.ப அவர்கள் எல்லா நேர்காணலிலும் திராவிடப் பண்பாடு என, "தாய்மாமன் மரியாதை", "இறந்தவரின் உடலுக்கான மரியாதை", "பெண்கள் மீதான வன்முறைக்கு எதிர்ப்பு" ஆகியவற்றை தொட்டுக் காட்டுகிறார். காஞ்சிமடம் பற்றிய கேள்விக்கு, காஞ்சி மடமே கடந்த 75 ஆண்டுகளில் பத்திரிகைகள் கட்டி உருவாக்கி எழுப்பிய மணற்கோட்டை என்றும் இது சிருங்கேரி மடத்தின் கும்பகோணம் கிளை மடம் தான் என்றும் பதிலளிக்கிறார்.

கால்டுவெல் பற்றி கூறும்பொழுது அவரைப் பற்றிய ஒரு புதிய பாதையை காட்டுவதோடு அந்த மக்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார் என்றும் கூறுகிறார். அதேபோல் கடவுள்/தெய்வம் என்று வரும்போது தொ.பா. அவர்கள் கடவுள் என்பது வேறு தெய்வம் என்பது வேறு என்றும் கடவுள் என்பது எஜமானன் என்றும் தெய்வம் என்பது தன்னோடு சமதளத்தில் பழகிக் கொண்டிருப்பது என்றும் வேறுபடுத்தி காட்டுகிறார். சாதி பற்றிய கேள்விக்கு சாதி அழிவதற்கான வாய்ப்புகள் இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டிலே இல்லை என்று பதிலளிக்கிறார். மேலும் இப்படித்தான் இதனால்தான் சாதி தோன்றியது என்பதை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடிக்க முடியாததாலேயே அது அழிக்க முடியாததாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

மேலும் ஈழத் தமிழர் இனப்படுகொலையை பற்றி கூறும்பொழுது கலைஞர் அவர்கள் 50 ஆண்டுகால உழைப்பை பாழாக்கிவிட்டார் என்றும் இந்த படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள் மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும் என்றும் கூறியதோடு இலங்கையில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்கமாத்திரை போட்டுக் கொண்டுதான் தூங்கினோம். எங்களால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

தமிழ்த் தேசியர்கள் (சீமான் போன்றவர்கள்) பெரியாரை விமர்சிக்கிறார்களே? என்ற கேள்விக்கு, தத்துவார்த்தத் தெளிவற்ற வெறும் அரசியல் காரணங்களால் அவர்கள் பெரியாரை நிராகரிப்பதாக சொல்லும் தொ.ப. அவர்கள் "திராவிடம் என்ற கருத்தாக்கம் வேறு; தமிழ்த் தேசியம் வேறு. பெரியார் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவரல்ல" என்கிறார்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அதனால் ஏற்படுகிற பண்பாட்டுச் சரிவுகள், பண்பாட்டு மரபுகளை மீட்டெடுப்பது, வருணாசிரமக் கோட்பாடு, தமிழ்த் தேசியம், திராவிடப் பண்பாடு, ஆங்கிலேயர் காலம்,பெரியாரின் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலை, களப்பிரர்கள் காலம், நாட்டார் தெய்வங்கள், சிறுதெய்வ வழிபாடு, மொழிக்கல்வி, வட்டாரம் சார்ந்த சொற்கள் என தொ.ப. அவர்கள் பதில் அளித்துள்ளார். இவருடைய ஒரு புத்தகத்தை படித்தால் மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இல்லை.

No of users in online: 104