கலைஞரின் கவிதைகள்

கலைஞரின் கவிதைகள்

கலைஞர் மு கருணாநிதி அவர்கள் 1945ஆம் ஆண்டு முதல் எழுதிய கவிதைகளும் கவியரங்குகளுக்குத் தலைமையேற்றுப் பாடிய கவிதைகளும் என மொத்தம் 77 கவிதைகள் "கலைஞரின் கவிதைகள்" என்ற தலைப்பில் பாரதி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. இக் கவிதை தொகுப்பு ஐந்து பகுதிகளாக வந்துள்ளது.

முதற்பகுதி இதயத்தைக் தந்திடு அண்ணா!. இது ஒரே ஒரு கவிதையை கொண்டது. இரண்டாவது பகுதி இனமான ஏந்தல்கள். இப்பகுதியில், தென்னவன் காதை, இந்திரஜித், இரணியன், வாளி மன்னன்(இராவணன்) ஆகியவர்களை புகழ்ந்து எழுதப்பட்ட கவிதைகள். மூன்றாவது பகுதி கவியரங்கக் கவிதைகள். இக்கவிதைகள் 1967 முதல் 1994 வரை பல்வேறு கவியரங்குகளில் பாடிய கவிதைகள். அடுத்து கண்ணீர்த் துளிகள் என்ற பகுதியில் மறைந்தவர்களுக்கு எழுதப்பட்ட ஆறு கவிதைகள். இறுதியில் மலர் தோட்டம் என்ற பகுதியில் உடன்பிறப்புகளுக்கும் சேர்த்து எழுதிய கவிதைகள்.

கலைஞர் தலைமை தாங்கி நடத்திய கவியரங்குகளில் இணைந்து கவிதைகள் பாடிய முக்கிய கவிஞர்கள் பட்டியல்: கொத்தமங்கலம் சுப்பு, கவிஞர் கண்ணதாசன்,கவிஞர் சுரதா, கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம், கவிஞர் யோகி சுத்தானந்த பாரதியார், தொ.மு.சிதம்பர ரகுநாதன், கவிஞர் தமிழண்ணல், கவிஞர் அப்துல் ரகுமான்,திருமதி சௌந்தரா கைலாசம், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் காவிரிமைந்தன், ஔவை நடராசன், கவிஞர் வைரமுத்து மற்றும் பலர்.

09.02.69 அன்று சென்னை வானொலியில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் அளித்த கண்ணீர் கவிதாஞ்சலி, இதயத்தைக் தந்திடு அண்ணா!. இக் கவிதையின் இறுதியில் கலைஞர் அவர்கள் எழுதிய பிரபலமான வரிகள்:

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்;

இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்!

கடற்கரையில் காற்று

வாங்கியது போதுமண்ணா!

எழுந்து வா எம்மண்ணா!

வரமாட்டாய்; வரமாட்டாய்;

இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா... நீ

இருக்குமிடந் தேடி யான் வரும் வரையில்

இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா....

நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை

உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா....

'இனமான ஏந்தல்கள்' என்ற பகுதியில் தமிழர்களின் எழுச்சிக்கு காரணமானவர்களைப் பாடியுள்ளார். இதில் தென்னவன் காதை கவிதையில் இராவணன் சொல்வதாக இப்பாடல் உள்ளது. இக்கவிதையில் ஒரு இடத்தில் இராவணன் சொல்வதாக கலைஞர் இவ்வாறு எழுதுகிறார்.

எருமைக்குமில்லாத தடித்த தோலன்,

இழி சுக்ரீவன் இவனுக்குத் தோழன்,

அண்ணனுக்கு மரணம் தந்தோன்!

இன்னொருவன், அனுமன் எனும் துரோகியுடன்

இலங்கைக்குத் தீ வைத்த என்றன் தம்பி!

இவர்கள் எல்லாம் எதிர்க்கின்றார் என்னை யென்றால்,

இதிலேதோ மர்மம் இருக்கத்தான் வேண்டுமன்றோ?

நான்,

சீதைக்கோர் மகன் தந்து, இலங்கைச் செங்கோலும்

அந்த மகனுக்கே தந்துவிட வேண்டுமென்று,

தீப்பந்தனைய நிபந்தனைகள் போடுகின்றார்,

தீய இராமனது கூட்டத்தார்!

இப்பகுதியில் இன்னொரு கவிதை இரணியன். நாம், பிரகலாதன் என்பவன் தன் தந்தை இரணியனை கொன்றான் என கேள்விப்பட்டுள்ளோம். இரணியன் கதையை கலைஞர் இக்கவிதையில் இவ்வாறு கவி பாடுகிறார்.

பெற்றோர்கள் இட்ட பெயர் பெருந்தகை வேந்து!

இழிகுணத்தார் ஆரியர்கள் இட்ட பெயர் இரணியனாம்

பொருட்பாலும் அறத்துப்பாலும் ஆட்சிக்கப்பால்

விலகாவண்ணம் காத்து வந்தான்! என்று இரணியனைப் பாடுகிறார்.

இரணியனுக்கு ஒரு குழந்தை பிறக்க அதனை,

பெண்ணழகை மிஞ்சுகின்ற பிறை நெற்றி கொண்டதாலே

பிறைநுதலான் எனச் சொல்லி அழைத்தார் பெற்றோர்;

பிற்போக்கு ஆரியரோ, பிரகலாதன் என்றார்!

இரணியனுக்கு பிரகலாதன் பிறந்ததைக் கண்ட ஆரியர்கள் மறவேந்தர் பரம்பரையில் குலக்கொடியும் முளைத்து விட்டால் மறையோதும் குலத்துக்கு நாசம் என கொதித்தெழுந்தனர். இரணியனை அழிக்க நினைத்த ஆரியர்கள், அதன் ஒரு பகுதியாக அவனது மகன் பிரகலாதனுக்கு வித்தைகள் சொல்லிக் கொடுக்கப் போவதாக சொல்கின்றனர். இரணியன் மறுக்கிறான். ஆனால் அவன் மனைவி குறுக்கே நிற்கிறாள். இறுதியில் ஆரிய ஆசான் ஒருவன் பிரகலாதனை அழைத்துச் சொல்கிறான்.

அங்கு பிரகலாதனை தன் மகளோடு பழக வைக்கிறான். அவள் பிரகலாதனுக்கு காமத்தை சொல்லிக்கொடுக்கிறாள். இறுதியில் இரணியன், "வில்வித்தை, யானையேற்றம்" முடிந்ததா என்று கேட்க, பிரகலாதன் அதற்கு "இன்பவல்லி தந்த சுகம் கண்டேன்... இறைவனது பாதாரவிந்தம் காண வழி கண்டேன்" என உரைக்கிறான். கோபம் கொண்ட இரணியன் நாளை இரவுக்குள் கடவுளை காட்ட வேண்டும் என்கிறான். ஆனால் ஆரியர்கள் இரணியனை சூழ்ச்சியால் கொல்கின்றனர். அதனை கலைஞர் இவ்வாறு பிரதிபலிக்கிறார்.

ஆங்கு மறைந்த சூதனொருவன்

அரிமாக் கோலம் பூண்ட படியால்

ஆரியன் என்று யார்க்கும் தெரியாமல் - தெற்குப்

சூரியன் மார்பில் ஈட்டி நுழைத்தான்!

குபு குபுவெனப் பெருகிற்று உதிரம்!

குடலை அறுத்தனர்; நாவை அறுத்தனர்;

உடலை வெட்டினர், உருவை அழித்தனர்...

நமதாண்டவன் நரசிங்க வடிவில் வந்தான் என

நம்புதற்குக் கதையும் விற்றனர்

மூடிற்று மூடுபனி ஆரியத்தை எதிர்ப்பதற்கு

முழக்கமிட்ட வாயென்று;

ஆடிற்று ஆரியம் திருக்கூத்து!

மேலும் கவியரங்கில், கவியரங்கத் தலைவர் ஒவ்வொரு கவிதை படிப்பவர்களையும் அவர்களின் தலைப்பு குறித்து பாடச் சொல்வார். 14.11.1970 அன்று "நேரு கண்ட ஜனநாயகம்" என்ற தலைப்பில் கவிஞர் கண்ணதாசன் அவர்களை 'சொத்துரிமை' பற்றி பாட அழைக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு கலைஞர் அவர்கள் கண்ணதாசனை அழைக்கிறார்.

வந்தவுடன் சொத்துரிமை கேட்கின்றார் - பாவம்

நொந்த மனம்! இவர்

சொத்துரிமை கேட்பதிலும் நியாயம் உண்டு பிள்ளைகள்

பத்துப் பன்னிரண்டு

போகட்டும் அளித்துவிட்டேன் சொத்துரிமை

பெருக, வருக, தருக

அதேபோல் புதுவை வானொலி நிலையத்தார் ஏற்பாடு செய்த கவியரங்கில் "மாறி வரும் ஊரினிலே" என்ற தலைப்பில் கலைஞர் கீழ்க்கண்டவாறு ஒரு கவிதை பாடுகிறார்.

வெங்காயம் கூடப் பாஞ்சாலி சபதம் செய்யும்

உரிக்க உரிக்கத் தோல் சேலை வருவதாலே

வெங்காயம் கூடப் பாஞ்சாலி சபதம் செய்யும்.

மேலும் 1971-ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆர்லந்தோ ஏரியின் நீரூற்று கண்ட கலைஞர் எழுதிய கவிதை.

நல்ல வேளை -

தனியாக ரசிக்கின்ற வாய்ப்பெனக்கு

தப்பினேன் அதனாலே!

பெண்ணொருத்தி அருகிருந்தால் நீரூற்றின்

வண்ணத்தைக் கணக்கெடுத்து - மறுநாளே

வகைக்கு ஒன்றாய் சேலை கேட்பாள்!

வங்கதேசத்தில் நடந்த அரசியல் சூழ்நிலை கண்டு "சில நாடுகள் இருக்கின்றன" என்று ஒரு கவிதை எழுதுகிறார். அதில் ஜனநாயகம் ஒரு நாட்டிற்கு முக்கியத்துவம் எனக் கூறுகிறார்.

சர்வாதிகாரம்;

அஃதோர் வாழைமரம்

அதன் கன்றே அதனைச் சாய்க்கும்!

No of users in online: 131