பொன்னிப்புனல் பூம்பாவை - கௌதம நீலாம்பரன்

பொன்னிப்புனல் பூம்பாவை - கௌதம நீலாம்பரன்

2014 - 2015 ஆம் ஆண்டுகளில் 'ஜன்னல்' இதழில் தொடராக வந்த இந்த 'பொன்னிப் புனல் பூம்பாவை' சரித்திர நாவல் கௌதம நீலாம்பரன் அவர்களின் கடைசி நாவல். இந்த நாவல் ராஜராஜ சோழனுக்கும் ஹொய்சாளன்( கன்னட) மன்னன் விஜய் நரசிம்மனுக்கும் இடையே ஏற்படும் உறவைக் குறிக்கிறது. மொத்தம் 24 அத்தியாயங்கள் கொண்டது இந்த நூல்.

காவிரிப்பூம்பட்டினத்தின் காவிரி நதியின் கரை மீது நடந்து கொண்டிருந்த வீரசிம்மன் என்ற இளைஞனின் காதில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்தை அவன் பார்த்தபோது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தன்னை நோக்கி முதலை ஒன்று வருவதை கண்டு அலறிக் கொண்டிருந்தாள். முதலையிடமிருந்து காப்பாற்றப்பட்ட அந்தப் பெண்ணிடம் பவ்யமாகவும் அதே நேரத்தில் தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் கந்தபீமன் மற்றும் ரங்கம்மா ஆகியோர். ஏற்கனவே வீரசிம்மன் அந்த பெண்ணை வேறொரு ஆபத்திலிருந்து காப்பாற்றியவன்.

இதனிடையே வீரசிம்மனிடம், கந்தபீமன் நாங்கள் நாடோடிகள் என்றும் கழைக்கூத்துக்காக இலங்கை சென்ற போது எங்களுடைய வித்தையை கண்ட பெரு வணிகர் இந்திர தத்தர் எங்களுடன் இந்த பெண் மோகினியை சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தார் என்று கூறுகிறான். மேலும் இப்போது மோகினி எங்களைச் சிதம்பரம் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்துகிறாள், எங்களுக்கு வேறு பணி உள்ளது எனவே  மோகினியை சிதம்பரம் அழைத்துச் சென்று, நடராஜரைத் தரிசனம் செய்து வைத்து, பிறகு இங்கேயே அழைத்து வந்து இந்திர தத்தர் மாளிகையில் விட்டுவிடும் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறான்.

வீரசிம்மனை சந்திக்கும் மோகினி, "கந்தபீமன் சோழ இளவரசரை கொல்லத் திட்டமிடுகிறான்" எனறும் என் கவனத்தை திசைதிருப்ப என்னை சிதம்பரம் செல்லுமாறு கூறிகிறான் என்றும் சொல்லி இந்த கொலையை எப்படியும் தடுக்க வேண்டும் என்றும் கூறுகிறாள். ஆனால் வீரசிம்மன் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறான்.

இதற்கிடையில் கங்கை கொண்ட சோழபுரம் அரண்மனையில் அரசரின் அந்தரங்கச் செயலாளர் அநபாய மூவேந்த வேளாரிடம் சோழமாதேவி இளவரசி இராஜராஜன் எங்கே போயிருக்கிறான்? என்று கேட்கிறார். ஆனால் அவரோ தனக்குத் தெரியாது என்றும் விரைவில் இளவரசர் இராஜராஜர் எங்கே போயிருந்தாலும் அவரை அழைத்து வர ஆவணம் செய்கிறேன் என்றும் கூறுகிறார். மேலும் மகாராணி, அநபாய மூவேந்த வேளாரின் மகள் தேன்மொழியை கவிஞர் ஒட்டக்கூத்தரிடம் அனுப்பி இளவரசன் எங்கே போய் இருக்கிறான்? என்று கேட்டு அனுப்புகிறார்.மோகினியை தில்லை அழைத்துச் செல்லும் வழியில் சிலர் அவளை கடத்த முனைகின்றனர். அதனை வீரசிம்மன் முறியடிக்கிறான் எதிர்பாராத விதமாக அவ்வழியில் வரும் அநபாய மூவேந்த வேளாரிடம் மோகினியை ஒப்படைத்து விட்டு வீரசிம்மன் செல்கிறான்.

மேலும் மோகினி என்பவள் ஹொய்சள மாமன்னர் விஷ்ணுவர்த்தனர் பேத்தி என்பதும் அவள் தன் தந்தை நரசிம்மனோடு முரண்பட்டு வீட்டை விட்டு வெளியேறியவள் என்பதும் இரண்டாம் ராஜராஜனை விரும்புகிறாள் என்றும் தெரிய வருகிறது . கழைக்கூத்தாடி கந்தபீமன் என்பவன் தனது அண்ணன் சோழ இளவரசன் இரண்டாம் ராஜராஜனோடு நிகழ்ந்த ஒரு மற்போரில் கொல்லப்பட்டதனால் அதற்கு பழிவாங்க வந்திருப்பவன் என்றும் தெரிய வருகிறது.

இந்நிலையில் மோகினியை சிவானந்த சாகர அடிகளார் என்பவர்  அவளுடைய சித்தியின் கங்கபாடி அரண்மனையில் விட்டுவிடுகிறார். மறுநாள் வீரசிம்மன் தன் மனைவியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கூறுகிறான். ஆனால் அவனை சிறைக் கூடம் நோக்கி அழைத்துச் செல்கின்றனர். இச்செய்தியை அவள் தந்தை நரசிம்மனிடமும் கூறுகின்றனர். ஏற்கனவே சோழதேசம் மேல் படை எடுக்க விரும்பும் நரசிம்மன் தன் தந்தை விஷ்ணுவர்த்தனரிடம் தன் மகளை ஒரு சாதாரண சோழதேசத்தை சேர்ந்தவன் மனம் முடித்து உள்ளான் என்றும் கூறுகிறான். ஆனால் மாமன்னர் சோழதேசத்துடன் நட்புறவுடன் இருக்க விரும்பி  படை எடுப்பதை தடுக்கிறார். எனவே நரசிம்மன் காவிரியில் குறுக்கே அணை ஒன்றைக் கட்டி சோழ தேசத்திற்குள் காவிரி நுழைய விடாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்கிறான்.

தனை அறிந்த இரண்டாம் ராஜராஜன் கன்னட தேசத்தின் மீது போர் தொடுக்கிறான். போரில் இரண்டாம் ராஜராஜன் ஜெயித்தானா? விஜய் நரசிம்மன் நிலை என்ன ஆனது? சிவானந்த சாகர் அடிகளார் யார்? வீரசிம்மன் என்பவன் யார்? வீரசிம்மன் மோகினி திருமணம் நடந்ததா?கந்தபீமன் என்பவன் உண்மையில் யார் அவன் இரண்டாம் ராஜராஜனை சந்தித்தானா? என்பதை இந்த "பொன்னிப் புனல் பூம்பாவை"யின் கடைசி சில அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No of users in online: 131