உயிர்ப்புதையல் - கோவை சதாசிவம்

உயிர்ப்புதையல் - கோவை சதாசிவம்

சூழலியர் ஆர்வலர் "கோவை சதாசிவம்" அவர்கள் பல்வேறு இதழ்களில் எழுதியுள்ள 22 கட்டுரைகள் "உயிர்ப்புதையல்" என்னும் நூலாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு கட்டுரைகளும் கார்ப்பரேட்டுகள் மனிதனுக்கும் இயற்கைக்கு செய்யும் கேடுகள்; மனிதர்கள் இயற்கைக்கும் மற்ற உயிரினங்களுக்கும் செய்யும் துரோகங்கள் என பல்வேறு நிகழ்வுகளை பட்டியலிட்டு காட்டியுள்ளார்.

உதாரணமாக மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மனித குடலின் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை கொல்லுதல்; செயற்கையாக உருவாக்கப்பட்ட பிராய்லர் கோழிகள் கொண்டு வந்த பறவை காய்ச்சல்; குட்டைப் பயிர், குறுகிய நாட்களில் அதிக விளைச்சல், பி.டி.பருத்திச் செடி என பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் வேளாண் மற்றும் உணவு உற்பத்தியில் நுழைந்து இந்திய வேளாண் துறையை கபிளீகரம் செய்யத் துடிப்பதை சுட்டிக்காட்டுகிறார். 

அதுமட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஆறுகளில் மணல் எடுக்க தடைச் சட்டம் இருக்கும்பொழுது தமிழ்நாடு மட்டும் ஏன் அதை தடை செய்யவில்லை என்று கேட்கிறார். தமிழ்நாட்டைப் பொருத்தவரை எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா தலைவர்களும் இதில் மட்டும் ஒன்றுபட்டு இருப்பதை நாம் வேடிக்கை மட்டும் பார்க்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடம் சிரபுஞ்சி என்று தெரிந்த நமக்கு தமிழகத்தில் அதிக மழை பெய்யும் இடம் எது என்று நமக்கு தெரிவதில்லை.(நீலகிரி உயிரியக்க மண்டத்திலுள்ள கூடலூருக்கு அருகில் உள்ள "தேவாலா" என்ற இடம் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் இடம்) இப்போது அதனுடைய நிலை என்ன என்று ஆசிரியர் விளக்கும்பொழுது நமக்கு கவலைப்படுவது தவிர வேறு ஏதுமில்லை.

மனிதர்கள் காடுகளை மட்டும் அழிப்பதில்லை. காட்டில் வளரும் மனிதர்களை வதைக்கும் பெரும் நோய்களைக் குணமாக்கும் மூலிகைத் தாவரங்களையும் அழிக்கிறோம். மேலும் காடுகளுடன் சேர்ந்து மலைகள், காட்டு உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள், நீர்நிலை என ஒவ்வொன்றையும் தனது தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக அழித்துக் கொண்டே இருக்கிறான். இது ஒவ்வொன்றையும் மனிதர்களான நாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

மலைகளின் அரசி நீலகிரி தமிழ்நாட்டிற்கொரு கொடை. அங்கே 100-க்கும் மேற்பட்ட கல் குவாரி இயற்கையின் மிக உன்னதமான பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால் மலையே அதிர்கிறது என்கிறார் ஆசிரியர். உண்மையில் நம் உடலும் மனமும் கூட இதை அறிந்து அதிரத்தான் செய்கிறது.

ஒரு காட்டின் வளர்ச்சி என்பது பல்வேறு தாவர விலங்குகளின் வளர்ச்சி. ஆனால் மனிதர்கள் காட்டின் உள்ளேயும் வெளியேயும் செய்யும் செயல்கள் மனித குலத்தையே முற்றிலும் அழிக்கக் கூடியவைகளாக உள்ளன.

புற்றாளி, புற்பதி, போந்து, பெண்ணை, தாளி, தருவிராகன், கரும்புறம், காமம், தாலம், ஓடகம் என பனைமரத்தின் மற்ற பெயர்களை அறிமுகப்படுத்தும் ஆசிரியர் பனைமரம் மனிதர்களுக்கு பனஞ்சாறு, பனஞ்சிராய், பானகம், பனாட்டு, காவோலை, பனை ஈர்க்கு, பனங்கிழங்கு, பனை வெல்லம், பனங்கற்கண்டு, கிலுகிலுப்பை, கூடை, பாய், தூரிகை, தும்பு, விறகு, ஓலை, நார் என அட்சயப்பாத்திரமாய் சற்றேறக்குறைய 843-க்கும் மேற்பட்ட பொருட்களை அள்ளித் தந்த பனைமரம் இன்று செங்கல் சூலைகளில் வெந்து தணிகிறது என்று சுட்டிக் காட்டுகிறார்.

ஒனறு மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆசிரியர் சுட்டிக் காட்டும் வௌவால்கள், இருவாச்சிகள், வரையாடுகள், பனைமரங்கள், யானைகள், பிணந்தின்னிக் கழுகுகள், புலிகள்  என இயற்கை வாழ் உயிரினங்கள் மட்டுமே முற்றாக இப்பிரபஞ்சத்தில் உயிர் வாழ தகுதியானவை.

நிச்சயமாக மனிதர்கள் அல்ல என்பதே.

No of users in online: 95