ஏழாம் சுவை
ஏழாம் சுவை - மருத்துவர் சிவராமன்

ஏழாம் சுவை - மருத்துவர் சிவராமன்

"ஏழாம் சுவை" - மருத்துவர் கு.சிவராமன் அவர்களால் ஆனந்த விகடன் இதழில் எழுதி தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இப்போது புத்தக வடிவமாக வந்திருக்கிறது. 25 தலைப்புகளில் பல்வேறு உணவுகளைப் பற்றி வாசகர்களுக்கு பிடித்தமான வரிகளில் நகைச்சுவையுடன் பரிமாறி உள்ளார்.

எழுத்து சிலருக்கு வரம். மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு அது கை கூடியுள்ளது சிறப்பு. பல்வேறு தலைப்புகளில் வந்துள்ள இக்கட்டுரைகள் எளிமையானது மட்டுமல்ல; நாம் அதில் சொல்லியபடி பயன்படுத்தவும் எளிதாக உள்ளது.

மரபணுவை பற்றி பேசுகிறார். தாத்தா-பாட்டிகள் நம் மேல் கொண்ட அக்கறையை, கரிசனத்தை உணவின் வழியாக வந்தடைந்ததைப்  பற்றி பேசுகிறார். வாதம் - பித்தம் பற்றி சொல்லிவிட்டு அழகுக்கான உணவு பற்றியும் பேசுகிறார். சளி, இருமலைப் பற்றி சொல்லிவிட்டு காதல் தரும் உணவு பற்றியும் மற்றொரு கட்டுரையில் சொல்கிறார்.

ஒவ்வொரு கட்டுரையும் தாத்தா - பாட்டிகள் பேரப்பிள்ளைகளோடு கைகோர்த்து செல்வதைப் போல, காதலன் - காதலி ஆழ்ந்த பிணைப்பில் இருப்பதைப் போல நமக்கும் அவ்வளவு வாஞ்சையுடன் உணவிலும், வாழ்க்கையிலும் என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது எனச் சொல்கிறார். ஆக மொத்தம் இப்புத்தகம் புத்தக அலமாரியில் அழகுக்கு, படிப்பதற்கோ வைப்பதை விட நமது உணவுக்காக நமது உடல் நலனுக்காக அடுப்பங்கரையில் இருப்பது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்லது.