கருவாச்சி காவியம் - வைரமுத்து

கருவாச்சி காவியம் - வைரமுத்து

வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட இந்நாவலை படித்து முடித்த பின், ஒரு விறுவிறுப்பான கிராமத்து பின்னணி கொண்ட ஒரு திரைப்படம் பார்த்தது போல் உனர்ந்தேன். தகப்பன் இல்லாமல் வளர்க்கப்படும் ஒரு பெண் குழந்தை, தாயின் அரவணைப்பில் எவ்வாறு வளர்கிறாள் என்பதையும், திருமணம் முடிந்த பத்து நாட்களிலேயே கணவனால் துரத்தியடிக்கப்பட்டு, வாழ்க்கையில் அவள்படும் துன்பங்கள் பற்றிய கதை. தனக்கென்று துணையாகவும், ஆறுதலாகவும் வரும் ஒவ்வொரு நபரும் அடுத்தடுத்து தன்னைவிட்டு நிரந்தரமாகப் பிரிவது என்று புத்தகம் முழுவதும் ஒரு பெண்படக்கூடாத துன்ப துயரங்களை அனுபவிப்பதாக கருவாச்சி காவியம் எழுதப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு நிகழ்வுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து காவியமாகவே படைத்துள்ளார் ஆசிரியர். கிராமப் பஞ்சாயத்து, மழையில்லாத கிராமத்தில் ஏற்படுகின்ற பஞ்சம், ஒரு பெண் தனக்குத்தானே சுயமாக பேறுகாலம் பார்த்துக் கொள்வது, நிற்கதியான ஒரு பெண்ணிற்கு ஏற்படுகின்ற வைராக்கியம், கருவாட்டுக் குழம்பு வைப்பது, பாம்பு சட்டையை உரிப்பது, பேன் பார்ப்பது, பாறைக்கறி சமையல், பொன்னாசாரிகள் தங்க மோதிரம் செய்யும் விதம் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் காட்சிகளை கண்முன் வந்து நிறுத்துவது போல் உள்ளது.

கருவாச்சி மகிழ்ச்சியாக இருந்த தருணங்களாக, தன் கருவில் குழந்தையை சுமந்த தருணம், கிடையை விட்டு ஒதுங்கி வந்த ஒரு கெடாக்குட்டியை பூலித்தேவன் என்று பெயர் வைத்து அதை அவள் ஆசை ஆசையாய் வளர்த்த தருணம், பாம்பு சட்டை உரிப்பதைப் பார்க்க வேண்டுமென்று அவள் சிறுவயதிலிருந்தே சேர்த்து வைத்த ஆசை நிறைவேறிய தருணம் என்று இவைகளை கூறலாம். மற்றபடி அவள் வாழ்க்கையில் துரோகம், பழிவாங்குதல், ஏமாற்றம், பஞ்சம், பிரிவு, வருத்தம், அழுகை என்று முற்றிலும் வலி மிகுந்த வாழ்க்கையை அனுபவிக்கிறாள்.

இறுதியில், தன் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய கட்டையன் என்ற தன் கணவன் தொழுநோயால் பாதிக்கப்படுகிறான். அவனை தன் கைகளால் தூக்கி சுமந்து வந்து பார்த்துக் கொள்வது போன்ற இடத்தில் படிப்பவர்களுக்கு கண்களில் கண்ணீர் வராமல் இருக்காது. இல்வாழ்க்கையில் அவள் கற்றுக்கொண்ட பாடங்கள் எவ்வாறெனில், இறுதியில் ஒரு சாமியாராக வரும் நபரிடம் அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், கருவாச்சி தரும் எதார்த்தமான பதில்கள் யாவும் ஞானியையே வியக்க வைப்பதாக உள்ளது. "அனுபவமே ஆசான்" என்பார்கள். கருவாச்சின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஒவ்வொரு அனுபவமும் அவளை ஒரு ஞானியாகவே மாற்றி விட்டது என்று கூறலாம்.

ஞானம் என்பது அறிவா? அனுபவமா? என்று தேடியலைந்து இமயமலை வரை சென்ற ஒரு சாமியாரின் கேள்விக்கு கருவாச்சி தரும் பதில்கள் அவ்வளவு எளிதாக அதை கடந்து செல்ல முடியவில்லை. இப்புத்தகத்தில் உள்ள சில வரிகள் சிந்திக்க வைக்கின்றன. அவை,

"பொழைக்கிறது லேசு; சாகுறதுதான் கடுசோ?".

"காலம்  தான் ஞானம், காலத்தைப் போல மனசு வச்சிருக்கிறவன் ஞானி".

"எதை மறக்காம இருக்கப் பார்க்கிறீர்களோ அது நல்லதையே நினைச்சு வாங்க; லேசுல மறக்காது. எதை மறக்க நினைக்கிறீர்களோ அதுல கெட்டதையே நெனைச்சு வாங்க; பொட்டுன்னு மறந்து போயிடும்."

இவ்வாறாக வாழ்க்கையின் தத்துவங்கள், அறிவுரைகளை கருவாச்சியின் வாழ்க்கை வழியே உணர்வு பூர்வமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

நான் படித்த மற்ற புத்தகங்களை விட இந்த "கருவாச்சி காவியம்" என்னை சற்று அதிகமாகவே சிந்திக்க வைத்து விட்டது. என் மனதை உலுக்கிய புத்தகம் என்று கூட கூறலாம். "பெண் தானே" என்று எகத்தாளம் பேசுபவர்களை இப்புத்தகத்தை படிக்க வைக்க வேண்டும். இப்புத்தகத்தை படித்து முடித்த பின் என் நினைவில் வந்த பாடல்,

"ஆறும் அது ஆழமில்ல..
அது சேரும் கடலும் ஆழமில்ல..
ஆழம் எது ஐயா
அது பொம்பள மனசுதாயா!"

No of users in online: 94