கலைஞர் எனும் கருணாநிதி - வாஸந்தி

கலைஞர் எனும் கருணாநிதி - வாஸந்தி

தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் உயர்ந்து நின்ற தலைவர். தன் இறுதி காலம் வரையிலும் சாமானியர்களுக்காக எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தவர். எல்லோரும் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று போராடியவர். எந்த திட்டம் என்றாலும் சாமானியர்களுக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்று எண்ணியவர். மற்ற மாநிலங்கள் "மாநில சுயாட்சி" என்னும் கோஷத்தை எழுப்புவதற்கு முன்பே அதைப்பற்றி சிந்தித்தவர். தன் மாநில நலனுக்காகவே எப்போதும் விடாப்பிடியாக இருந்தவர். ஒவ்வொரு திட்டங்களுக்கும் முன்னோடியாய் அமைந்தவர். பல மாநிலங்களுக்கும் முன்னோடியாய் இருந்தவர். சுயமரியாதை, சமத்துவம், சமூக நலன், தமிழர் நலன் என இருந்ததினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்டவர். ஆம்! உலக சரித்திரத்திலும், அரசியலிலும் கூட தேட முடியாத ஒருவர். எழுத்தாளர், கவிஞர், திரைப்பட வசனகர்த்தா, பேச்சாளர், நாடக நடிகர், பத்திரிகையாளர், முதலமைச்சர் என பன்முக ஆளுமை திறன் கொண்ட ஒருவர். அவர் தான் கலைஞர் மு கருணாநிதி.

கலைஞர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கையை, பிறப்பு முதல் இறப்பு வரை 2023 பக்கங்களுக்கு "கலைஞர் எனும் கருணாநிதி" என்ற பெயரில் எழுதியுள்ளார் வாஸந்தி அவர்கள்.

தனது 14 வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலில் நுழைந்த கலைஞர், தனது இறுதிக் காலம் வரை அவர் சந்தித்த சவால்கள், விமர்சனங்கள் ஏராளம். அவற்றை ஒவ்வொன்றாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார் வாஸந்தி அவர்கள். உதாரணமாக எம்ஜிஆர் எப்படி திமுகவிலிருந்து திட்டமிட்டு வெளியேறினார், விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் செய்த உதவிகள் பின் அவை எப்படி அவருக்கு எதிராக ஒன்று திரண்டன, திமுகவை ஒழித்துக் கட்ட எம்ஜிஆர் கொண்ட வெறி, தமிழகத்தில் திமுகவால் காங்கிரஸ் வலுவிழிந்து போதல் மற்றும் மாநில சுயாட்சி கோஷம் இவற்றால் இந்திரா காந்தி அவர்களுக்கு ஏற்பட்ட எரிச்சல், நெருக்கடி காலத்தில் ஜனநாயகத்திற்கு கொடுத்த மரியாதை, கலைஞர் அவர்களை பயமுறுத்த சர்க்காரியா கமிஷன் பின்னர் அதன் தாக்கம் எவ்வளவோ விமர்சனங்களை அவர் மீது வீசினாலும் கடைசிவரை ஈழ தமிழர்களுக்காக உரிமைக்குரல் 2ஜி பிரச்சனை மற்றும் அரசியல் லாபங்களுக்காக அவரின் கைது படலம் வரை ஒவ்வொன்றாக எழுதியுள்ளார்.

நீதியரசர் சந்துரு அவர்கள் சொன்னதாக ஒரு தகவலை வாஸந்தி அவர்கள் இப்படி எழுதுகிறார்.

"கருணாநிதி ஒரு தீய சக்தி, ஊழல்வாதி என்று எம்ஜிஆரும் பிறகு ஜெயலலிதாவும் விடாமல் சொல்லிச் சொல்லி அதுவே மக்களின் அடி மனதில் படிந்து போயிற்று" என்கிறார் நீதியரசர் சந்துரு. "கருணாநிதி மிகச்சிறந்த நிர்வாகி என்பதில் சந்தேகம் இல்லை; சமூக நீதியைப் பற்றி உண்மையான அக்கறையுடன் சிந்தித்து பல சட்டத் திருத்தங்களைக் கோரிக்கை வைத்த உடனேயே நிறைவேற்றியவர். எனது அனுபவத்தில் கண்டு சொல்கிறேன். கருணாநிதியின் நிர்வாகத்திறனுடன் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது."

ஆம்! உண்மையில் படித்தவர்களுக்கும், சுயமரியாதை கொண்டவர்களுக்கும் சத்தியமான, சாத்தியமான வாக்கியம். இனி ஒரு மிகச்சிறந்த தலைவர் இந்திய அரசியலிலோ, அல்லது தமிழக அரசியலிலோ காண்பது என்பது நடக்காத ஒன்று. இப்புத்தகம் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் படிக்க வேண்டிய ஒன்றும் கூட.

No of users in online: 127