வெள்ளிக்கிழமை - கலைஞர் மு.கருணாநிதி

வெள்ளிக்கிழமை - கலைஞர் மு.கருணாநிதி

ஒரு வெள்ளிக்கிழமை அன்று பொழுது விடிந்து அடைவதற்குள், ஒரு பெண்ணிற்கும் அவள் சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஏற்படும் நிகழ்வுகளும், பிரச்சனைகளும் என்றே இக்கதையே சொல்லலாம்.

சூழ்நிலைதான் ஒரு மனிதனை மிருகமாக மாற்றுகிறது என்பார்கள். ஆம்! உண்மைதான். சிவநேசர் - சிவகாமி தம்பதியினரின் மகளாக; கதையின் நாயகியாக வரும் சிந்தாமணி ஆரம்பத்தில் எதிர்காலக் கனவுடன் மென்மையான உள்ளம் கொண்டவளாக காட்டப்படுகிறாள். ஆனால், அவளுக்கு ஏற்படுகின்ற ஒவ்வொரு சூழ்நிலையும், சந்தர்ப்பமும் கொலை செய்யும் எண்ணத்தை தூண்டும் அளவு கதை நகர்கிறது.

அழகப்பன் - நயினா முஹம்மது ஆகிய இருவரும் நட்பிற்கு இலக்கணமாக வருகிறார்கள். அதிலும் அழகப்பனின் ஆருயிர் நண்பனாக வரும் நயினா, சாதி, மதம் பாராமல் ஒரு பெண்ணை அவள் குணமறிந்து நேசிக்க ஆரம்பிக்கிறார். எப்படியாவது தன் காதலை சொல்லத் துடித்து அதை வெளிப்படுத்திய பின், அப்பெண் ஏற்கனவே கற்பு இழந்தது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னும் தன் காதலை விட்டுக் கொடுக்காமல் தன் காதலியுடன் வாழ்க்கையை தொடங்க எண்ணுகிறார்.

ஆனால், விதியின் விளையாட்டோ தான் விரும்பும் பெண்ணைத் தான் தன் நண்பன் நண்பனும் விரும்புகிறான் என்று அறிந்த நயினா, தன் மனதை திடப்படுத்திக் கொண்டு தன் காதலையே தியாகம் செய்யும் அளவிற்கு நட்பு பாராட்டுகிறார். இந்நாவலின் மனம் கவர்ந்த நபராக நயினா முஹம்மது என்பவர் வலம் வருகிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பெரிய இடத்துப் பிள்ளையாக அலைபாயும் மனதோடு, கல்யாணக் கனவுடன் பெங்களூரிலிருந்து பெண் பார்க்க வரும் அழகப்பன், எதையும் சிந்தித்து செயல்படாமல் உடனுக்குடன் முடிவெடுக்கிறார். இது எவ்வாறு ஒரு பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பதையும் பார்க்க முடிகிறது. மருத்துவராக வரும் ஆனந்தி, என்னதான் படித்த பெண்ணாக இருந்தாலும் பெண் என்பதால் தன் கற்பை இழந்த பிறகு அதை வெளி உலகத்திற்கு மறைக்க டைகர் என்ற மனித மிருகத்துடன் சிக்கித் தவிக்கிறாள்.

டைகர் என்பவன் பெயருக்கேற்றாற்போல், கொடூர எண்ணம் கொண்டவனாக மட்டுமல்லாமல் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிறான். வீட்டு வாசலை விட்டு தாண்டுவதற்குக் கூட நல்ல நேரம், காலம், பஞ்சாங்கம் பார்க்கும் நபராக வரும் சிவநேசர் இறுதியில் பைத்தியம் பிடித்து தற்கொலை செய்து கொள்கிறார். இதில் மூடநம்பிக்கைகளின் அவலம் சுட்டிக் காட்டப்படுகிறது.

இறுதியில் அழகப்பனின் கல்யாணக் கனவு நிறைவேறியதா? தன்னை நிரபராதி என்று நிரூபிக்க துடிக்கும் சிந்தாமணியின் நிலை என்னவானது? நயினா - ஆனந்தியின் காதல் கைகூடியதா? டைகரின் சூழ்ச்சி திட்டம் முறியடிக்கப்பட்டதா என்பதே மீதிக்கதை.

கலைஞர் அவர்கள் அரசியலில் சிறந்த தலைவராக மட்டுமல்லாமல் தான் எழுதும் ஒவ்வொரு புத்தகத்திலும் தன் தடம் பதிக்க தவறியதில்லை. அதுபோலவே இக்கதையின் ஒவ்வொரு எழுத்திலும் மக்களிடம் விழிப்புணர்வையும், மூடநம்பிக்கைகளின் அவலத்தையும் சுட்டிக்காட்டி சிறப்பாக தன் பணியை செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் 192 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகமேயாயினும் "வெள்ளிக்கிழமை" என்னும் இந்நாவலில் காதல், நட்பு, மூடநம்பிக்கை, விட்டுக்கொடுத்தல், கருணை, விரோதம், பழிவாங்குதல், உதவும் மனப்பான்மை, குற்ற உணர்ச்சி என்று பலதரப்பட்ட விஷயங்களையும் கலந்து படிப்பவர்களுக்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.

No of users in online: 103