பராந்தகன் மகள் - கலைமாமணி விக்கிரமன்

பராந்தகன் மகள் - கலைமாமணி விக்கிரமன்

நந்திபுரத்து நாயகி நாவலை (1959-64 )எழுதிய பிறகு கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எழுதிய நாவல் பராந்தகன் மகள். ஆனால் இந்த நாவல் 40 ஆண்டுகள் கழித்து 2018 அன்று முதல் பதிப்பு வெளிவருகிறது.

பராந்தகன் மகள் சோழ வம்சத்தைப் பற்றி கூறுகிறது. தஞ்சையை வென்று, பிற்காலச் சோழர்களின் பரம்பரையைத் தோற்றுவித்தவர் விஜயாலய சோழன்(கி.பி.846-881). இவருடைய திருக்குமரன் ஆதித்த சோழன் (871-907). இவருக்கு இரு புதல்வர்கள். மூத்தவரே பராந்தக சோழன். பரகேசரி என்ற பட்டப்பெயர் இவருக்கு உண்டு. 907-953 வரை அரசாண்டவர். இவருக்கு இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சய சோழன், உத்தமசீலி என நான்கு புதல்வர்களும் வீரமாதேவி, அனுபமா என்ற இரண்டு மகள்களும் உண்டு. இப்புதினத்தில் உத்தம சீலியைத் தவிர மற்ற எல்லோரும் வருகிறார்கள். மேலும் இதில் பழுவூர் சிற்றரசர் பழுவேட்டரையர் கண்டனர் அமுதன் மற்றும் இராசாதித்தன் நண்பனாக வெள்ளங்குமரன் ஆகியோர் வருகின்றனர்.

இக்கதை பராந்தக சோழ மன்னனையும் மற்றும் அவன் தன் மகள் மீது கொண்ட பாசத்தையும் கூறும் நாவல்.

இந்நாவலில் வரும் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் கோவிந்தன். இவன் இராட்டிரகூட(குந்தள) நாட்டு மன்னன். இராசாதித்தன் பாட்டனார் ஆதித்த சோழர் இராட்டிரகூட நாட்டு மன்னர் கிருஷ்ணன் மகள் இளங்கோப்பிச்சியை மணந்தவர். இளங்கோப்பிச்சியின் வயிற்றில் பிறந்தவர் தான் பராந்தகன்.  கிருஷ்ணனுக்குப் பிறகு அவருடைய மகன் இந்திரன் பட்டத்துக்கு வந்தான்.  இந்திரன் மகனே கோவிந்தன். இவன் மது மயக்கத்திலும், காம போதையிலும் எப்போதும் இருப்பவன். இவன் சோழ நாட்டு இளவரசி வீரமாதேவியின் வனப்பு பற்றி கேள்விப்பட்டு தன் நாட்டை விட்டு மாறுவேடத்தில் சோழநாடு வருகிறான். இவனுடைய சித்திரத்தைக் கண்டு வீரமாதேவியும் மயங்குகிறாள்.  அதே நேரத்தில் வெள்ளங்குமரனை வீரமாதேவியின் தங்கை அனுபமா விரும்புகிறாள். இராசாதித்தனும் தன் உயிர் நண்பன் வெள்ளங்குமரனை இளவரசன் ஆக்குவதற்கு திட்டமிடுகிறான்.

ஆனால் வீரமா தேவியை கொடும்பாளூராரும், திருக்கோயிலூராரும் கேட்பதாக பழுவேட்டரையர் கூற மகள் விருப்பத்தை மற்றவருக்காக மாற்ற முடியாது என்று பராந்தகன் கூறுகிறார்.  ஆனால் பழுவேட்டரையரோ, "இளவரசியின் திருமணம் சோழ நாட்டின் பெருமையைப் பொறுத்தது என்றும் வீரமாதேவி கோவிந்தனை திருமணம் செய்தால் பல குறுநில மன்னர்களை விரோதித்துக் கொள்ள நேரிடும்" என்றும் கூறுகிறார். அதே நேரத்தில் தன் சகோதரி வீரமாதேவியின் முடிவை இராசாதித்தனும் ஆதரிக்கிறான்.

இந்நிலையில் மேலைக் கங்க நாட்டில் சோழ நாட்டு தோழனான விக்கியண்ணனை கொன்று இரண்டாம் பூதுகன் என்பவன் அரியணை ஏறுகிறான். அவன் கங்க நாட்டில் சோழர்களின் நண்பர்களை ஒழித்து விட வேண்டும் என்று திட்டம் கொண்டவன்.

திருமணம் முடிந்த வீரமாதேவி தனது கணவன் கோவிந்தனுடன் இராட்டிடகூடம் திரும்புகிறாள். ஆனால் அங்கு மன்னனுக்கு மக்கள் சரியான வரவேற்பளிக்கவில்லை. காரணம் கோவிந்தனால் மாசுபடுத்தப்பட்ட மாதங்கி என்னும் பெண் தற்கொலை மற்றும் நல்ல குடும்பப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கோவிந்தன் மீது மக்களுக்கு அதிருப்தியை உண்டு பண்ணியது.

கோவிந்தன் தந்தை இந்திரன் இறந்தவுடன் அவருடைய சிறிய தந்தை அமோகவர்ஷன் இராஷ்டிரகூட நாட்டு மன்னனாக பட்டமேறினான். ஆனால் சிறிது காலத்தில் கோவிந்தன் தன் சிறிய தந்தையை சிறைப்படுத்தி அரியணையில் அமர்ந்து விட்டான். மேலும் வீரமா தேவியை திருமணம் செய்த பின்பும் கோவிந்தனின் சபலம் மாறவில்லை. இதற்கிடையில் அவனுடைய சிறிய தந்தை அமோகவர்ஷனை அவருடைய மகன் கன்னரத் தேவன் சிறையில் இருந்து மீட்டுச் சென்றான். ஆனாலும் கோவிந்தன் இதைப் பற்றி கவலை எதுவும் கொள்ளாமல் கீழைச் சாளுக்கிய நாட்டில் பெண்களுடன் உல்லாசமாக இருந்தான்.

கோவிந்தன் கீழைச் சாளுக்கிய நாட்டில் இருக்கும் பொழுது அவனுடைய சிறிய தந்தை அமோகவர்ஷன்  இராட்டிரகூட கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். இந்நிலையில் பெரும் சாம்ராஜ்யத்துச் சக்கரவர்த்தியான பராந்தகன் மகள் அந்தப்புரத்தில் உள்ளவர்களை விடுதலை செய்தவுடன் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவளும் சாதாரண பணிப்பெண் போல வேடமணிந்து தப்பினாள். கீழைச் சாளுக்கிய நாட்டில் மன்னனாக அரியணை ஏற ஆசைப்பட்டவனும் போரில் இறக்க இப்போது கோவிந்தன் தன் தவறை உணர்ந்து திடுக்கிடுகிறான்.

பராந்தகருக்கு இச்செய்தி தெரிய வருகிறது. இராட்டிரகூட மன்னர் கோவிந்தன் நாடிழந்து விட்டார் என்ற செய்தி பழுவேட்டரையருக்கு தெரிந்ததும், அலட்சிய மனப்பான்மையும் கர்வமும் கொண்ட வீரமாதேவிக்குத் தக்க தண்டனை கிடைத்தது என்று மகிழ்ந்தார். மேலும் கோவிந்தனுக்கு பராந்தகன் அடைக்கலம் அளிப்பது தொடர்பாக சோழ நாட்டு குறுநில மன்னர்களுக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை. பழுவேட்டரையரும் மன்னனைக் காண வரமுடியாது என்று கூறிவிட்டார். பராந்தகரும் தன் மகளின் பிடிவாதத்தால் எத்தகைய பிழையை செய்து விட்டோம் என்று வேதனைப்படுகிறார்

இந்நிலையில் கங்க நாட்டின் மன்னன் பூதுகன் சோழ நாட்டை தாக்க பெரும் படை எடுத்து வருகிறான் என்ற செய்தி வருகிறது.

போரில்  பழுவேட்டரையரும், குறுநில மன்னர்களும் இணைந்தார்களா? போரில் சோழ நாடு முதன்முதலாக தோல்வியைத் தழுவியதா? இல்லை வெற்றி அடைந்ததா?  இராசாதித்தன், வெள்ளங்குமரன், கண்டராதித்தன், அரிஞ்சய சோழன் நிலை என்ன ஆனது என்பது மீதிக்கதை.

இக்கதையின் மூலம் குறுநில மன்னர்களும் இவர்களுக்கு தலைமை தாங்கும் அரசும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றனர். மேலும் ஒரு பேரரசு தன் குடும்பம் சார்ந்தோ அல்லது தன் நலம் சார்ந்தோ தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதும் தெளிவாக தெரிகிறது. மேலும் அரசர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்ய நிர்பந்திக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.

இதில் வீரமாதேவி தன் விருப்பப்பட்டு தன் ஆசையை நிறைவேற்ற அதற்கு மன்னரும் தன் மகளின் மேல் கொண்ட பாசத்தால் உடன் பட ஒரு பெரிய சாம்ராஜ்யமே எவ்வாறு தள்ளாடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்..

 

No of users in online: 132