தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)

தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)

தந்தை பெரியார் அவர்கள் சென்னை தியாகராயர் நகரில் 19.12.1973 அன்று நடத்திய உரை 20 பக்க அளவில் சிறு புத்தகமாக வெளிவந்துள்ளது.

இந்த புத்தகம் முன்னுரை, அணிந்துரை அல்லது பதிப்புரை என எதுவும் இல்லாமல் வந்துள்ளது. ஒரு புத்தகத்தில் இவை ஏதேனும் ஒன்று இருந்தால் படிக்கும் வாசகர்களுக்கு அந்த புத்தகத்தில் உள்ள உள்ளடக்கத்தை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். இந்த புத்தகத்தின் தலைப்பு "தந்தை பெரியாரின் மரண சாசனம்" என்று சொல்லும் பொழுது தந்தை பெரியாரின் மரணத்திற்கு முன்னும் பின்னும் என்ன நடந்தது என்பதை வாசகர்கள் ஓரளவு தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் தந்தை பெரியார் அவர்கள் பேசிய பேச்சை மட்டும் 20 பக்கங்களுக்கு(16-ஆம் பதிப்பு - 2013) கொடுத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியார் அவர்கள் பேசிய உரை இவ்வாறு ஆரம்பிக்கிறது. "இன்றைய தினம் சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக, சென்னையில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கவே இந்த பொதுக்கூட்டத்தை கூட்டியுள்ளார்கள்." என்று ஆரம்பிக்கிறார்.

இந்த "சமுதாய இழிவு ஒழிப்பு" மாநாடு எப்போது? யாரால்? எங்கே நடந்தது? என்று தெரியவில்லை. எனவேதான் ஒரு புத்தகத்திற்கு முன்னுரை, அணிந்துரை அல்லது பதிப்புரை முக்கியமானதாக இருக்கிறது. இது ஏன் திராவிட கழகம் வெளியீட்டில் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

சரி, இப்போது நாம் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவிற்கு வருவோம். இந்த சொற்பொழிவில் தந்தை பெரியார் அவர்கள் இந்து என்றால் என்ன? என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார். "ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக்கின்றன. நம்ம புலவர்கள் (தமிழ் இலக்கியங்கள்) ஏராளமாக இருக்கிறது பஞ்சகாவியம் ஐந்து இலக்கணம் அது இது என்று ஏராளமாக இருக்கிறது எதிலாவது விந்து என்ற வார்த்தை இருக்கிறதா எந்த புத்தகத்தில் ஆவது இருக்கிறதா இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதில்லை அசிங்கமாக இருக்கிறது சிந்து நதி காரணமாக சிந்துவாகி பிறகு இந்து என்று அழைக்கப்பட்டால் என்கிறான். சிந்து நதிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோது தானே சிந்துநதி இங்கே வந்தது" என்று கூறுகிறார்.

மேலும் தந்தை பெரியார் அவர்கள் பேசும்பொழுது, "இந்து என்றால் இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான் மற்றவன் சூத்திரன். பார்ப்பான் என்றால் மேல் ஜாதி, சூத்திரன் என்றால் கீழ் ஜாதி. சூத்திரன் மனைவி என்றால் பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறதுதான் எப்போது? என்கிறார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்டுகளையும், திராவிட முன்னேற்ற கழகத்தையும் குற்றம் சாட்டுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கூறும் பொழுது அவர்களுக்கு "கோவில் கட்டும் வேலை தான் முக்கியம். அவர்களுக்கு ஓட்டு தான் முக்கியம்" என்று கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், "பெரிய சமுதாயம், எவ்வளவு முன்னுக்கு வர வேண்டியவர்கள்? நாதியற்ற காட்டுமிராண்டியாக அல்லவா வாழ்கிறோம்? வெள்ளைக்காரனைப் பாரய்யா; எவ்வளவு முன்னுக்கு வந்து விட்டான்! மிகவும் காட்டுமிராண்டியாக இருந்தவர்கள் வெள்ளைக்காரர்கள். இன்றைய தினம், ஆகாயத்திற்கு, சந்திரனுக்கு அல்லவா பறக்கிறார்கள்?  என்று கூறுகிறார்.

அதே நேரத்தில், "ஓர் அரசாங்கம் நடக்க வேண்டுமானால் அரசியல் சட்டம் வேண்டும்; ஒத்துக் கொள்கிறேன். அதற்காக அரசாங்கம் நடக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பான் இருக்க வேண்டுமா? அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்காக சூத்திரன் இருக்க வேண்டுமா? மனிதன் தானே இருக்க வேண்டும்? மற்ற நாட்டிலேயும் தான் அரசாங்கம் நடக்கிறது. அங்கு பார்ப்பான், சூத்திரன் இருக்கிறானா?" என்று கேள்வி எழுப்புகிறார் தந்தை பெரியார்.

கடவுளைப் பற்றி  குறிப்பிடும் போது, "நாங்கள் வந்து இந்தப் பிரச்சினையிலே கடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லை! நன்றாக நினைத்துக் கொள்ளுங்கள். கடவுள் என்றால் என்ன? என்று சொல்லுங்கள் என்று தான் கேட்கிறோம்" என்று பேசுகிறார்.

மேலும் " சமுதாய இழிவு ஒழிப்பு" நீங்க ஜனவரி 25 ஆம் தேதி அன்று மறியல் செய்வதோடு சட்டத்தை எரிக்கவும் முடிவு செய்கிறார். அதே நேரத்தில் மறியல் செய்யும் பொழுது கட்டுப்பாடாய்ச் செய்ய வேண்டும். கலகம் செய்யக்கூடாது. யார் அடித்தாலும் பட்டுக்கொள்ள வேண்டும். திருப்பி அடிக்கக் கூடாது. நான், நீ என்று மீசை முறுக்கக்கூடாது என்றும் தம் தொண்டர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

தந்தை பெரியாரின் இந்த இறுதிப் பேருரையில் அவர் ஓரிடத்தில் அம்மா அம்மா என்று வலி தாங்காமல் சிறு சத்தம் போட்டு ஓரிரு நிமிடங்கள் வலியைப் பொறுத்துக்கொண்டு தன் பேச்சை தொடர்கிறார். மேலும் இந்த பேச்சின் ஒலி வடிவம் யூடியூபில் இலவசமாக கிடைக்கிறது.

No of users in online: 141