பெருவலி - சுகுமாரன்

பெருவலி - சுகுமாரன்

"பெருவலி" என்ற தலைப்பைக் கொண்டுள்ள இப்புத்தகமானது தெரிந்தோ, தெரியாமலோ ஒரு அப்பாவி பெண்ணான ஜஹனாராவின் பெரும் வலியை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஷாஜகான் என்ற சக்கரவர்த்தியின் பெயரைக் கேட்டாலே நினைவுக்கு வருவது, மும்தாஜ் என்ற மனைவிக்காக அவர் கட்டிய "தாஜ்மஹால்". ஆனால் அச்சக்கரவர்த்தியின்  பெயருக்குப் பின்னால் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் வலி, வெறுமை, துக்கம், துரோகம், இழப்பு என அனைத்துமே வருத்தம் கொள்ளச் செய்கிறது.

ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் கதாபாத்திரமான "பானிபட்" மிகவும் அற்புதமான ஒன்று. எதையும் நேர்மறையாக என்னும் கதாபாத்திரம். மேலும், இதில் பானிபட் கூறியிருக்கும் துணிச்சலுக்கான அர்த்தம் நன்றாகவே இருந்தது. அது,

நுண்ணறிவு + அடங்காமை + பயம் = துணிச்சல்"

ஆசிரியர் அவர்கள் இக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார். ஆனால் முடிவு ஏமாற்றத்தை அளிக்கிறது.

"அதிகாரம் கேட்காமலே பறித்துக் கொள்ளும், சொல்லாமலே பணிய வைக்கும்" என்ற வார்த்தைகள் மூலம் அசாதாரண மக்களின் மனநிலையையும், இயலாமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நம் முன்னோர்கள் 10, 12 என பல பிரசவத்தை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் நம்மால் அதை உடலளவில் ஏன் மனதளவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. சொல்லப்போனால் அவர்களின் வாழ்க்கை எனும் பயணம் குறுகிய வட்டத்தில் வலியுடன் முடிந்திருக்கிறது. அதுதான் ஜஹனாரா தாயின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

ஜஹனாரா அறிவு, அழகு, அரசியல் நுண்ணறிவு, ஆன்மீக ஞானம், குர்ஆன் ஓதுதல் என அனைத்திலும் சிறந்து விளங்கினாலும் அவளுடைய வாழ்க்கையை பாலைவனத்தில் கண்ட கானல் நீர் போல குறிப்பிட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

இதில் கூறப்பட்டிருக்கும் இயற்கையின் அழகு, யமுனை நதியின் ஓட்டம், பறவைகளின் சிறகடிப்பு, மலர்களின் வாசனை என அனைத்தும் கண்முன்னே விரித்துக் காட்டுவதாக உள்ளது.

படிக்கப் படிக்க சுவாரஸ்யத்தை தந்த இச்சரித்திர கதையின் முடிவு முற்றற்றதாக அமைந்துள்ளது.

 

No of users in online: 118