வஞ்சி மாநகரம் - நா.பார்த்தசாரதி

வஞ்சி மாநகரம் - நா.பார்த்தசாரதி

சேரர்களின் தலைநகரமாக விளங்கிய "வஞ்சி மாநகரம்" பற்றிய நாவல் இது. முற்காலத்தில் சேரநாட்டை ஆட்சி செய்த "செங்குட்டுவ வேந்த"ரும், படைக்கோட்டைத் தலைவருமான "வில்லவன் கோதை"யும் தன் படைகளுடன் வடதிசை நோக்கி படையெடுத்துச் செல்கிறார்கள். இதுவே தக்க சமயம் எனக் கருதி, வஞ்சி மாநகரத்தின் செல்வ வளங்களை கொள்ளையடிக்க, கடற்கொள்ளையர்களின் தலைவனான கடம்பன் குறுநில மன்னன் "ஆந்தைக்கண்ணன்" திட்டம் தீட்டுகிறான் என்ற செய்தி மக்களுடைய பரவி பீதியைக் கிளப்புகிறது.

இந்நிலைமையை சமாளிக்க அமைச்சர் "அழும்பிள் வேள்" கொடுங்கோளூர் படைத்தலைவன் "குமரன் நம்பி"யை அழைத்து வர ஏற்பாடு செய்கிறார். அவ்வாறே, குமரன் அமைச்சரை சந்தித்த பின் கொடுங்கோளூரை பாதுகாக்கவும், கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட இரத்தின வணிகரின் மகளான "அமுதவல்லி"யை மீட்கவும் மேலும் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும் ஆணையிடுகிறார்.

அவ்வண்ணமே அமைச்சரின் ஆணையை ஏற்றுக்கொண்டு திரும்பிய குமரனுக்கு, தன் ஆருயிர் காதலியான அமுதவல்லி கடத்தப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்ற சிந்தனையுடன், காதலியை நினைத்தும் மனம் கலங்கினான். ஆனாலும், நேற்று இரவு தான் தன் பூந்தோட்டத்தில் அமுதவல்லியுடன் பேசி விட்டு விடைபெற்ற குமரனுக்கு ஒரு பக்கம் சந்தேகமும் எழாமலில்லை.

சிறிது காலதாமதம் செய்தாலும், எந்நேரத்திலும் கடம்பர்கள் கொடுங்கோளூரில் புகுந்து விடலாம் என்ற அச்சத்துடன், தன் படைவீரர்களுடன் எதிரிகளை எதிர்த்துப் போரிட தயார் நிலைகளை செய்யலானான். படைப்பலத்திலும், உடல் பலத்திலும் வலிமை மிக்கவர்களான கடம்பர்களை எப்படியாவது கவிழ்க்க, துணியுடன் பல முயற்சிகளை மேற்கொள்கிறான். முதலாவதாக, கடம்பர்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள அவர்களின் கலங்களை ஆராய முற்படுகிறான். நள்ளிரவில் துணிவுடன், அவன் எடுக்கும் முயற்சிகள் ஆபத்தானது என்றாலும் தன் காதலி இங்குள்ள ஏதோ ஒரு கலத்தில் சிறைப்பட்டிருக்கக் கூடும் என்றெண்ணி ஒவ்வொரு கலமாக தேடும் இடங்களில் காதலின் வேகத்தை உணர முடிகிறது.

எந்தக் கலத்திலும் அமுதவல்லி இல்லையே என்ற குழப்பம் ஒருபுறம் இருந்தாலும் மறுநாள் எப்படியாவது கடம்பர்களை தோற்கடிக்க தன் படை வீரர்களுடன் ஆயத்தமாகிறான். எண்ணிக்கையில் குறைந்த படை வீரர்களை கொண்டிருந்தாலும் "இளங்கன்று பயமறியாது" என்பதற்கிணங்க "மித்திரபேதம்" என்ற சூழ்ச்சி முறையையும் மேற்கொள்ளத் துணிகிறான் குமரன் நம்பி.

இதில் ஒரு திருப்புமுனையாக கடம்பர்களின் சூழ்ச்சியால், தான் சென்ற வீரர்களுடன் குமரன் அகப்பட்டுக் கொள்ள நேரிடுகிறது. இதிலிருந்து கதை சூடு பிடிக்கிறது. வீரத்தையும், காதலையும் இரு கண்களாக எண்ணி துணிச்சலுடன் சென்ற குமரனின் நிலை என்ன? எவ்வாறு தப்பி தன் நாட்டைக் காப்பாற்றினான்? படைவீரர்கள் என்ன ஆனார்கள்? அமுதவல்லியை யார்தான் கடத்தினார்கள்? குமரன் நம்பி - அமுதவல்லி காதல் கைகூடியதா? வடதிசைப் படையெடுப்பு செங்குட்டுவ வேந்தருக்கு வெற்றியை தந்ததா? இதுவே மீதிக்கதை.

அடுத்தது என்ன? என்ற பரபரப்புடன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிப்பவர்களுக்கு சோர்வு ஏற்படா வண்ணம் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள் சிறப்பாக கதையை நகர்த்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மன்னர் நாட்டில் இல்லாத சமயத்தில் தன் அறிவுத்திறனால் தாய்நாட்டைக் காப்பாற்ற திட்டமிடும் மதியூகியான அமைச்சர் அழும்பில் வேளின் செயல்பாடுகள் பாராட்டிற்குரியதாக உள்ளது அக்காலத்தில் மன்னர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசிக்கும்போது, அமைச்சரின் கருத்துகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

No of users in online: 105