குறிஞ்சிப் பாட்டு - இன்குலாப்

குறிஞ்சிப் பாட்டு - இன்குலாப்

சங்க காலத்தில் கபிலரால் இயற்றப்பட்ட குறிஞ்சிப்பாட்டை இன்குலாப் அவர்கள் நாடகமாக ஆக்கியுள்ளார். இந்த நாடகத்தில் கபிலர், பாரி, அங்கவை, சங்கவை, தொகுசொற் கோடியன், மற்றும் விறலியர் வருகின்றனர்.

குறிஞ்சிப்பாட்டின் ஒரு பகுதி, இப்புத்தகத்தில் நாடகமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் உரைநடையாகவும் மற்ற இடங்களில் பாடல்களாகவும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த நாடகம் பாரி-கபிலர் கதையை தொகுசொற் கோடியன் தன் கலைஞருடன் நிகழ்த்திக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஏன் தொகுசொற் கோடியன் என்ற கேள்விக்கு முன்னுரையில் இன்குலாப் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"கூத்து வடிவங்களில் கட்டியங்காரன், கோமாளி, விதூஷகன், போன்றோர் கதையைச் சொல்லிக்காட்டுவதாக வருதல் மரபு. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் நாடகம் குறித்த ஆய்வு நூலில், தொகுசொற் கோடியன் கதை நிகழ்ச்சிகளை தொகுத்து சொல்பவனாக இருக்கக் கூடும் என்ற ஒரு குறிப்பைத் தந்து செல்கிறார். கோட்டுக் கருவியை  இசைப்பவனாகவும் அறியப்படுகிறான். எனக்கு அந்தக் கருத்துகள் ஏற்கத்தகுந்ததாய் இருந்தன. கோடியர் என்ற சொல்லுக்கு நாடகவியலாளர் என்ற பொருளும் இருந்ததால் அந்தப் பாத்திரத்தை முன்னிறுத்துவது பொருத்தமாக இருந்தது" என்று குறிப்பிடுகிறார்.

இந்நாடகம் தொகுசொல், கபிலக்கல், பறம்புமலை, குறிஞ்சிக்கூத்து, மகட்கொடை மறுத்தல், பாயம்பாட்டு, மண்மனம், குன்றக் குறத்தி, கிளிவிளி  மற்றும் அற்றைத்திங்கள் ஆகிய 10 சிறு அத்தியாயங்களுடன் 96 பக்கங்களுடனும் இந்நூல் வந்துள்ளது.

பறம்புமலை அத்தியாயம் பாரி, அங்கவை, சங்கவை, மற்றும் கபிலர் ஆகியோர் உரையாடுவதாக அமைந்துள்ளது. பாயம்பாட்டு அங்கவை, சங்கவை ஆகிய இருவர் மட்டும் உரையாடுவதாக அமைந்துள்ளது.

பணமும் புகழும் அதிகாரமும் பேராசையும் கொண்டவர்கள் எல்லா காலங்களிலும் பழங்குடியினர் வாழும் நிலப்பகுதியை பிடுங்கி  அவர்களையும் அங்கிருந்து விரட்டுகிறார்கள். இது குறிஞ்சிப் பாட்டிலும் நடக்கிறது.

மூவேந்தர்கள் ஏன் பறம்புமலையின் மீது போர் தொடுத்தனார் என்ற கேள்விக்கு மன்னர்களின் பேராசை என்றே கூறலாம். ‌ தொகுசொற் கோடியன் ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகிறான். "மூவேந்தர்களின் உலகம் அருவி பாடாதது; குறிஞ்சி பூக்காதது; அன்பும் அருளுமல்ல; காதலும் அல்ல, பொன்னும் பொருளும், வாளும் வன்முறையும். ஆனால் பறம்புமலை வளமான பறம்புமலை, சமமான திணை வாழ்க்கை; அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்ட மூவேந்தர்களுக்கு முன்பு அறை கூவலாய் நின்றது" என்கிறான்.

பாரியை சந்திக்கின்ற மூவேந்தர்களின் தூதுவர்கள், "மாறிக் கொண்டிருக்கிற உலக நிலைமைக்கு ஏற்ப நீங்கள் அரசருக்கு திறை கட்ட வேண்டும் மற்றும் உங்கள் இரு மகள்களையும் காமக்கிழத்தியராக வேந்தர்களுக்கு கொடுக்க வேண்டும்.  இதன் மூலம் பேரரசுக்கு இசைவான... உங்களுக்கும் மதிப்பா ஒரு அரசியல் செய்யலாம் " என சொல்வதாக ஓரிடத்தில் கூறுகிறார் இன்குலாப். மேலும் ஒரு பழங்குடிக்கு இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதைக் கேட்கும் கபிலர், "எல்லா விழுமியங்களையும் அழிச்சித் துடைக்கிற ஒரு காலம் வந்துக் கிட்டிருக்குது. ஒரு இனத்தோட மண்... அதனுடைய எல்லை... அவ்வளவையும் பேரரசுகள் விழுங்குறாங்க... அந்த மக்களுடைய மகிழ்ச்சி, காதல் எல்லாத்தையும் சிதைக்கிறாங்க" என்று கூறுவார்.

ஏகாதிபத்திய அரசுகள் தனக்கு கீழுள்ள சிறு நாடுகளை வஞ்சிக்கின்றன. நாடுகள் தங்களின் மக்களை வஞ்சிக்கின்றன. தன் மக்களை அந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கின்றனர். வரலாறு நெடுகிலும் இது நடந்து கொண்டே இருக்கிறது. அன்று பறம்புமலை. இன்று பாலஸ்தீனியர்கள், குர்துக்கள், கறுப்பர்கள் மற்றும் தமிழீழ மக்கள். இவற்றையும் இந்நாடகத்தில் கொண்டு வந்திருக்கிறார் இன்குலாப் அவர்கள். நாடகத்தின் இறுதியில் மேலே சொல்லப்பட்ட அந்நாட்டின் கவிஞர்கள் பாடிய பாடல்களை கொடுத்துள்ளார். இறுதியில் பாரி மகளிர் பாடிய பாடலுடன் ஏக்கப்பாடலுடன் இந்நாடகம் முடிவடைகிறது.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும்
பிறர் கொள்ளார்.
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்று எறிமுரசின் வேந்தர்
எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே.

இந்த குறிஞ்சிப்பாட்டு, பாரி-கபிலர் நட்பு, பாரி மகளிர், மூவேந்தர் போர் மற்றும் பறம்பு மலை இவற்றைக் கொண்டு சற்று செம்மைப்படுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.ஆனால் அவர் எப்பொழுதுமே எளியவர்களின் பக்கமே நின்றிருக்கிறார். எனவே தனது படைப்புகளிலும் எளியவர்களுக்கே குரல் கொடுத்துள்ளார்.

 

No of users in online: 68