வில்லோடு வா நிலவே - வைரமுத்து

வில்லோடு வா நிலவே - வைரமுத்து

வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட. "வில்லோடு வா நிலவே" என்ற இச்சரித்திர நாவல் மன்னன் ஒருவனுக்கும் பெண்பாற் புலவர் ஒருவருக்கும் இடையே அழுத்தந்திருத்தமாக இருந்த உண்மைக் காதலையும், "கீழ்க்குடி மங்கை பட்டத்தரசியின் சிம்மாசனத்தை அழுக்குப் படுத்திவிடக் கூடாது; குல ஒழுங்கு குலைந்து விடக்கூடாது" என்று அதை தடுக்க வர்ண பேதத்தை எடுக்கும் ஆசான் மற்றும் நிமித்திகன் ஆகியோர் போடும் தடுப்பாட்டமும் அதனால் காதலர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளையும் எடுத்துக் கூறுகிறது.

சேரர் வரலாறு படிக்கையில், "சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கை பாடினியார் நச்செள்ளை என்னும் புலவர் பெருமாட்டியைப் பொன்னும் பொருளும் தந்து தன் பக்கத்துக் கொண்டான்" என்றும் "சேரன் வஞ்சி" என்ற நூலில் எஸ்.கே.ஐயங்கார் அவர்கள் "இப்புலவர் பெருமாட்டியைத் தன் பக்கத்துக் கொண்டான் என்று கூறப்பட்டிருப்பதால் அரசன் அவரைப் பட்டத்துத் தேவியாகக் கொண்டான் என்று கொள்க" என்று கூறியதை வைத்தும் இந்நாவலைப் படைத்திருப்பதாக முன்னுரையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் கூறியுள்ளார்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் நற்சோணைக்கும் பிறந்தவர்கள் செங்குட்டுவனும் இளங்கோவும். இமயவரம்பனின் இரண்டாம் மனைவி வேண்மாளுக்குப் பிறந்தவர்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் சேரலாதனும். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இமயவரம்பன் கீழ் மாந்தையைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டபோது சிலரால் கொல்லப்படுகிறான். அவன் தம்பி சேரலாதன் தன் அண்ணன் செங்குட்டுவனின் கீழ் தொண்டியைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வருகிறான்.

தமிழ்க் காதல் கொண்டு கவிகளோடு காலம் கழித்த சேரலாதன் பெண்பாற்புலவர் நச்செள்ளை பற்றிக் கேள்விப்பட்டு ஒரு படை வீரன் போல் அவளைச் சந்திக்கிறான். ஆனால் அவளும் அவளுடைய அண்ணனும் அரசகுடியை வெறுக்கின்றனர். இருப்பினும் சேரலாதனின் மேல் சில நாட்களுக்குப் பிறகு காதல் கொள்கிறாள் நச்செள்ளை. சேரலாதன் மேல் காதல் வயப்பட்ட நேரத்தில் அவன் அரச குடும்பத்தவன் எனத் தெரிய வருகிறது. அவளுடைய அண்ணன் இவர்கள் காதலை ஏற்க மறுக்கிறான். இவள் மறுக்கவே தன் தங்கையின் முன்பே தன்னை மாய்த்துக் கொள்கிறான்.

இதற்கிடையில் கடம்பர்களின் தொல்லையை தடுக்க தனது அண்ணன் செங்குட்டுவனின் ஆணையின் பேரில் சேரலாதன் போருக்கு தயாராகிறான். அப்பொழுது புலவர் ஒருவர் சேரலாதனோடு களப்போர் கண்டு கவி பாட வேண்டும் என்று கூறி சொல்கிறான். இந்நிலையில் சேரலாதனுக்கு நச்செள்ளை இறந்து விட்டாள் என்ற செய்தி கிடைக்கிறது. மனதளவில் உடைந்த சேரலாதனை புலவரின் துணையோடு போருக்கு அழைத்துச் செல்கிறார்கள். எதிர்பாராதவிதமாக கடம்பர்கள் புலவரையும் சேரலாதனின் படைத்தலைவனையும் கடத்தி சென்றுவிட்டதாக செய்தி வருகிறது.

இதனைக் கேள்விப்பட்ட சேரலாதன் என்ன முடிவெடுக்கிறான்? புலவரும், படைத்தலைவனும் மீட்க்கப்பட்டார்களா? நச்செள்ளை எப்படி இறந்தாள்? களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் கொன்றது யார்? என்ற பல கேள்விகளுக்கு விறுவிறுப்பாக இப்புதினத்தை படைத்துள்ளார் வைரமுத்து அவர்கள்.

"பெண்பாற் புலவரைத் தன் பக்கத்துக் கொண்டான்' என்ற கருவை வைத்துக்கொண்டு கவிஞர் வைரமுத்து அவர்கள் இச்சரித்திர நாவலைப் படைத்துள்ளதோடு, "தமிழ்க்குடியில் அரசர்கள் காலத்திலேயே வருண பேதமும் பிராமணர்களின் ஆதிக்கமும் இருந்திருக்கிறது" என்று இப் புதினத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட புதினத்தை  படைத்த கவிஞர் அவர்களுக்கு நாம் நன்றியை சொல்லலாம். மேலும் புத்தகம் முழுக்க கவிஞர் அவர்களின் கவித்துவம் வெளிப்படுவதுடன் விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்தியிருக்கிறார்.

இருட்டு சிலந்திகள் என்ற 19 ஆவது அத்தியாயத்தில் ஆசான் என்று அழைக்கப்படுபவனும் நிமித்திக்கணும் பேசும் இடங்கள் அவர்களது நால்வர்ண விதியைக் காக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காண்பிக்கிறது. அப்போது ஆசான் நிமித்திகனிடம் பேசுவதாகக் கீழ்கண்ட வரிகளை வைரமுத்து எழுதியிருப்பார்.

"நிமித்திகரே! எமக்கு அக்கறை மன்னர்குல மரபுகளைப் பற்றியல்ல; இந்த மண்ணுக்கு வழங்கப்பட்ட நான்கு வகைப் பகுப்பு இருக்கிறதே அந்தப் பகுப்பின் மேல்தான் எனக்கு அதிக அக்கறை. அந்தப் பகுப்பு இல்லாவிட்டால் என் பருப்பு வேகாது. நாடு இல்லாவிட்டால் அரசன் இல்லை. நம்பிக்கை இல்லாவிட்டால் நிமித்திகன் இல்லை. பிரிவுகள் இல்லாவிட்டால் பேதங்கள் இல்லை. பேதங்கள் இல்லாவிட்டால் வேதங்கள் இல்லை."

புதினத்தில் ஆங்காங்கே வைரமுத்து அவர்கள் தெளித்திருக்கும் சில வரிகள்.
"ஒரு கோட்டையின் கொடி மரத்தில் ஒரு வெற்றிக் கொடி ஏறுகிற போது ஓராயிரம் உடல்கள்
மண்ணுக்குள் இறக்கப்படுகின்றன."

"இது என்னவென்று உங்களுக்குத் தெரியும்; குத்துவாள். நீங்கள் உண்மை சொல்லாவிடில் இவள்
குத்துவாள்."

"போர்க்களத்திலும் பஞ்சணையிலும் மட்டும்தான் மனிதர்கள் உணர்ச்சிவசப்படலாம்."

"காதல் வயப்பட்டவனுக்கெல்லாம் மொழி எப்படியோ வயப்பட்டு விடுகிறது. அறிவு
வயப்படுவதில்லை."

"எல்லா மீறல்களும் குற்றங்கள் அல்ல. மழைத்துளிகள் மேகத்தை மீறினால் பூமிக்கு நன்மை என்று
பொருள்."

"சேரமண்டலத்தைச் செங்குட்டுவ மாமன்னர் வாளால் ஆளுகிறார். நீங்கள் கையிலுள்ள சிறு
கோலால் ஆளுகிறீர்கள். உங்கள் மூளையே மூளை."

"யாம் பிறந்தது ஓருர். வளர்ந்தது வேறூர். நேற்று வரை சீறூர். இன்று முதல் பேரூர். இதில் எந்த
ஊரை யாம் எமதூர் என்று சொல்ல?"

No of users in online: 118