திராவிட இயக்கமும் திராவிட நாடும் - திருநாவுக்கரசு

திராவிட இயக்கமும் திராவிட நாடும் - திருநாவுக்கரசு

திராவிட இயக்க ஆய்வாளரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவருமான க.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட 'திராவிட இயக்கமும் திராவிட நாடும்"  எனும் இப்புத்தகம் ஒன்பது கட்டுரைகளுடன் 160 பக்கங்களை கொண்டுள்ளது.

இப்புத்தகத்தில் உள்ள "திராவிட இயக்கமும் திராவிட நாடும்" என்ற கட்டுரை, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் "திராவிட இயக்கம் 1942-1948" எனும் தலைப்பில் 27.2.2006 இல் ஆற்றிய ஆய்வுரையாகும்.  இக்கட்டுரையில் உள்ள இரண்டு நிகழ்வுகள் நான் அறிந்திராதவை. ஒன்று, "கிபி 1798-1802 காலகட்டத்தில் சென்னை மாகாணம் ஒரிசாவின் பெர்ஹாம்பூர் வரை இருந்தது. இந்த நிலப்பரப்பைத் தான் பிரிட்டிஷாரிடம் திராவிட இயக்கத்தார் திராவிடநாடு எனக் கோரினர்" என்றும் இரண்டாவது "இராஜாஜி, காங்கிரசின் 'வெள்ளையனே வெளியேறு" தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. அதனால் அவர் காங்கிரசிலிருந்து விலகினார். பெரியாரைச் சந்தித்து திராவிடநாடு கோரிக்கையை அவர் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்" என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும் தந்தை பெரியார் அவர்கள் திராவிடநாடு பிரச்சினைக்காக ஆதரவு கோரி அம்பேத்கார், ஜின்னா ஆகியரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு திராவிட நாடு பெற முழு முயற்சி மேற்கொண்டது பற்றியும் இந்த நிலைப்பாட்டிற்கு அம்பேத்கர், ஜின்னா ஆகியோர் எடுத்த  நிலைப்பாடு மற்றும் அண்ணா 01.05.1962-இல் மாநிலங்கள் அவையில் தனி திராவிட பிரச்சினையை வலியுறுத்தி பேசியது என முக்கிய நிகழ்வுகளை எழுதியுள்ளார்.

"அறிஞர் அண்ணா வாழ்கிறார்" என்ற கட்டுரை தஞ்சை நகரிலுள்ள பெசண்ட் அரங்கத்தில் 27.12.2008 ஆற்றிய சொற்பொழிவாகும். இந்த சொற்பொழிவில் அண்ணா என்ன சாதித்து விட்டார் என்று சிலர் கேட்கும் கேள்விகளுக்கு சில பட்டியல்களை கொடுத்துள்ளார் அதில் முதன்மையாக, "அறிஞர் அண்ணா உருவாக்கிய திமுக தான் இன்றைய தினமும் தமிழர்களுக்கென்று குரல் கொடுக்கிற மக்கள் செல்வாக்கு உள்ள ஒரே அரசியல் கட்சியாக இருக்கிறது. அதுதான் பெரிய கட்சியாகவும் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் அரசியல் களத்தில் இயங்கும் சக்தியாக அரசியலை நிர்ணயிக்கிற அமைப்பாக அறிஞர் அண்ணா உருவாக்கிய திமுகவே இருந்து வருகிறது. இதுவே அறிஞர் அண்ணா நிகழ்ச்சி காட்டிய முதல் மாபெரும் சாதனை. இதுவரை பிறர் நிகழ்த்திக் காட்டாதது ஆகும்." என்று கூறியுள்ளார்.

"அண்ணா ஒரு பத்திரிகையாளராக..." என்ற கட்டுரை தமிழ் ஊடகப் பேரவையின் சார்பில் 20.12.2008 அன்று ஆற்றிய உரையில், "அறிஞர் அண்ணா அவர்கள் மேயர் பாசுதேவ் நடத்திய பாலபாரதி, காஞ்சி மணிமொழியார் நடத்திய நவயுகம்,  தந்தை பெரியாரின் நடத்திய குடிஅரசு மற்றும் விடுதலை, ஜஸ்டிஸ், திராவிட நாடு, காஞ்சி, மாலைமணி, நம்நாடு, ஹோம்லாண்டு, ஹோம்ரூல் ஆகிய பத்திரிகைகளில் துணை ஆசிரியராகவும், ஆசிரியராகவும் இருந்ததையும் திராவிடநாடு, காஞ்சி போன்ற பத்திரிகைகளை தொடர்ந்து நடத்த அவர் பட்ட சிரமங்களையும், திராவிட நாடு இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் "ரோமாபுரி ராணிகள்", "கம்பரசம்",  "பணத்தோட்டம்" பற்றியும் மற்றும் சில புகழ்பெற்ற சொல் தொடர்களையும், திராவிட இயக்க எழுத்தாளர்கள் பலர் உருவாகவும் புகழடையவும் "திராவிட நாடு" இதழ் காரணமாக இருந்ததையும் சுட்டிக்காட்டி உள்ளார். அண்ணா அவர்கள் எழுதியவை என்று கீழ்க்கண்டவற்றை தொகுத்து காட்டியுள்ளார் ஆசிரியர் க.திருநாவுக்கரசு அவர்கள். அவை: தம்பிக்குக் கடிதங்கள் (290), சிறுகதைகள் (14), நாடகங்கள் (12), சிறிய ஓரங்க நாடகங்கள் (48), கவிதைகள் (60), கட்டுரைகள் (1680), புதினங்கள் (29), ஆங்கிலக் கடிதங்கள் (30-க்குள்) திரைப்படங்கள் (10).

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காலச்சுவடில் 2009 செப்டம்பரில் எழுதிய கட்டுரையும் (தாய்க்குப் பெயர் சூட்டிய தனயன்), இக்கட்டுரைக்கு எதிர்வினையாக மலர்மன்னன் அவர்கள் எழுதிய கட்டுரையும், மலர்மன்னன் அவர்களின் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து எழுதிய கட்டுரை ஒன்றும் இப்புத்தகத்தில் உள்ளது. இக்கட்டுரையில் தி.மு.க உருவானதற்குப் பிறகு 300-க்கும் மேற்பட்ட ஏடுகள் வெளிவந்தன என்றும் அத்தனை ஏடுகளும் விற்றுத் தீர்ந்தன. சில ஏடுகளில் திமுக வார ஏடு என்றே போடப்பட்டு வந்தன என்றும் கூறியுள்ளார். மேலும் அறிஞர் அண்ணா மரணப்படுக்கையில் கூட "மாஸ்டர் கிரிஸ்டியன்" என்னும் ஆங்கில நாவலை படித்துக் கொண்டிருந்தார் என்றும் சுட்டிக்காட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக இருந்த 23 மாதங்களில் "தமிழ்நாடு எனத் தாயகத்திற்கு பெயர் சூட்டுதல்; இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்குதல்; சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் செய்தல்" ஆகிய மூன்று சாதனைகளை செய்து காட்டியதையும் கூறியுள்ளார்.

"அறிஞர் அண்ணாவும் சங்க இலக்கியமும்" என்ற கட்டுரை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில்  07.03.2009 அன்று ஆசிரியர் அவர்களால் படிக்கப்பட்ட ஆய்வுரையாகும்.இதில் அண்ணா அவர்கள் தம்பிமார்களுக்கு எழுதும் கடிதங்களில் சங்க இலக்கியங்களில் இருந்து பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டியதை எடுத்துக்காட்டுகிறார்.

மேலும் நக்கீரன் வார ஏட்டில் "மறக்க முடியுமா?" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும், இறுதியாக, "முதல்வர் அறிஞர் அண்ணாவின் சம்பளம் மற்றும் வரவு செலவு விவரங்கள்" என்று தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்களின் வரவு செலவு கணக்கும் வந்துள்ளது

மேலும் பல்வேறு கட்டுரைகளில், "நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம்(1944) செய்யப்பட்டுவிட்டது. திராவிடர் கழகத்தையே அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார் அண்ணா. பெரியாருக்கு அதில் உடன்பாடு இல்லை. இதனால்தான் திமுக தோன்ற முழு முதல் காரணமாயிற்று" என்று பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளார்.

க.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட இந்த சிறிய புத்தகம் திராவிட இயக்கங்கள் பற்றியும் அண்ணா பற்றியும் தெரிந்து கொள்ள மிகச்சிறந்த புத்தகம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

No of users in online: 82