சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது - விஜயசங்கர்

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது - விஜயசங்கர்

இந்திய சுதந்திர வரலாற்றில் தென்னிந்திய மக்கள் எப்பொழுதுமே நிம்மதியுடனும், பாதுகாப்பு டனும் வாழ்ந்து வருபவர்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தென்னிந்திய மக்கள் மட்டுமல்லாமல் மொத்த இந்திய மக்களும் நம்பிக்கையின்மையுடனும், பீதியுடனும் வாழ்ந்து வருவது என்பது மோடியின் பி.ஜே.பி சாதனை. காரணம் சிறுபான்மையினரை ஒடுக்குதல், அல்லது அழித்தல்; இந்திய ஜனநாயக தன்மையை அழித்தல்; மக்களை பீதியில் வைத்தல்; வரலாற்றை திரித்தல் போன்றவையே.

இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கத்தின் 100 ஆண்டு கனவான கலாச்சார தேசியத்தை இந்தியாவிற்குள் திணித்து எல்லாவற்றையும், எல்லோரையும் இந்து என்ற ஒற்றை புள்ளியில் கொண்டு வருவது தான். இந்த கனவோடு வாழ்ந்தவர்தான் சாவர்க்கர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த எம்.எஸ்.கோல்வால்கர் ஆகியோர். சுதந்திரப் போராட்ட த்தில் கலந்து கொள்ளாத வெள்ளையர்களுக்கு அடிமை சேவகம் செய்த இந்த ஆர்எஸ்எஸ் அல்லது சாவர்க்கர் பிரிவினரை அவர்களின் வழிவந்த பிஜேபியினர் சாவர்க்கரை ஒரு விடுதலை வீரராக, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதாக மக்களை நம்ப வைத்து அரசியல் செய்கின்றனர்

இந்த துரோக வரலாற்றையும், ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் ஏற்பட்டிருக்கும் கேடுகளையும் மக்களிடம் கொண்டு சென்று இவர்களின் பொய் முகத்தை அம்பலப்படுத்த பலரும் பல பல வழிகளில் முயன்று வருகின்றனர். இவ்வரிசையில் ஆர்.விஜயசங்கர் அவர்கள் உயிர்மை இதழில் எழுதிய இரண்டு கட்டுரைகளை சற்று விரிவு படுத்தி "சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது" என்ற சிறு நூலாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சார்ந்த சங்கிகள், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், கம்யூனிஸ்ட்களையும் இந்துக்களின் எதிரிகள் என அடையாளப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் மார்ச் 20 ,1940-இல் ராம்கார்கில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அப்துல் கலாம் ஆசாத் ஆற்றிய தலைமை உரையை குறிப்பிட்டுள்ளார். "ஒரு முசல்மானாக இஸ்லாமிய மதம், கலாச்சாரம் மீது எனக்கு சிறப்பு ஆர்வம் இருக்கிறது. அவற்றில் எந்த தலையீட்டையும் நான் சகித்துக் கொள்ள மாட்டேன். ஒரு இந்தியனாக இருப்பதில் எனக்கு பெருமை இருக்கிறது. இந்திய தேசம் எனப்படும் பிரிக்க முடியாத ஒற்றுமையின் ஒரு பாகம் நான்."

இஸ்லாமியர்களை வெறுத்த சாவர்க்கர் முன்னர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டி உள்ளார். கீழ்க்கண்ட வரிகள் 1908ல் மராத்தி மொழியில் சவார்க்கர் எழுதிய "1857இல் நடந்த முதல் சுதந்திரப் போர்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

"1857 ல் நடந்த போரில் பங்கேற்ற முஸ்லிம் ராணுவ வீரர்களை குறித்து சாவர்க்கர் இப்படி எழுதுகிறார். மவுல்விகளின் போதனையைப் பெற்று, கற்றறிந்த பிராமணர்களின் ஆசி பெற்று, டெல்லியின் மசூதிகளிலிருந்தும், பனாரஸின் கோவில்களிலிருந்தும் சொர்க்கம் வரை சென்ற பிரார்த்தனைகளின் பலனிகளான இவர்கள்  யார்? சுயதர்மமும் சுயராஜ்யமும்தான் அவர்களின் பெரும் கொள்கைகள். உயிரினும் மேலான மதத்தின்மீது சூழ்ச்சிமிகு, அபாயகரமான, அழிவுமிக்க தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்த பிறகு, சுயராஜ்யத்தை அடைவது என்கிற புனிதமான விருப்பத்துடன் அடிமைச் சங்கிலிமீது ஆவேச அடிகள் விழுந்தபோது ’தீன், தீன்’ என்ற கோஷம் இடியாக எழுந்தது. சுயதர்மம், சுயராஜ்யம் ஆகிய கொள்கைகள் இந்துஸ்தானத்தின் புதல்வர்களின் எலும்பிலும் மஜ்ஜையிலும் பதிக்கப்படும்."

இது மட்டும் இல்லாமல் சாவர்க்கர், கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷா சஃபரையும், ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் பெருமைகளையும், ”இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அபாயத்தை முதன்முதலில் உணர்ந்தவர்கள் பூனாவைச் சேர்ந்த நானா ஃபத்னாவிஸும், மைசூரின் ஹைதர் சாஹிபும்தான். நம் கண்முன் விரிந்த நாடகத்தில் தஞ்சாவூர், மைசூர், ராஜ்கார், டெல்லி போன்ற சமஸ்தானத்தை ஆண்டவர்கள் முக்கியமான பாத்திரங்களாயிருந்தனர்” என்கிறார் சவார்க்கர்.

இவ்வாறு எழுதிய, பேசிய சாவர்க்கர் படிப்படியாக எவ்வாறு முஸ்லிம் விரோதியாக மாறினார் என்று சில இடங்களில் ஆசிரியர் தொட்டு காட்டுகிறார்.

ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி மற்றும் சங்கிகள் கூட்டம், சாவர்க்கரின் அந்தமான் சிறை அனுபவங்களை வைத்து அவரை வீரராகவும், தியாகியாகவும் புகழ்கின்றன. ஆனால் அதே அந்தமான் சிறையில் இளைஞர்களும், முதியவர்களும் எந்த அளவுக்கு தண்டிக்கப்பட்டனர்; எவ்வளவு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று பல்வேறு தரவுகளைக் கொண்டு நிறுவியதுடன் சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளரிடம் அளித்த கருணை மனுக்களையும், அவர்கள் மூலம் பெற்ற சலுகைகளையும் விவரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு அளிக்க கருணை மனுக்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

"சிறைக்கு வந்து ஒரு ஆண்டு முடியும் முன்னரே பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு கருணை மனுவை அனுப்பினார் சாவர்க்கர். ஆனால் அதில் என்ன எழுதியிருந்தார் என்கிற விவரஙகள் கிடைக்கவில்லை. இப்படி ஒரு மனுவை அவர் எழுதிய விவரமே நவம்பர் 14, 1913 அன்று எழுதிய மனுவிலிருந்துதான் தெரிய வந்தது. இரண்டாவது மனு இப்படிச் செல்கிறது:

“இறுதியாக, நான் 1911இல் அனுப்பிய மன்னிப்பு மனுவை நல்ல மனது வைத்துப் படித்துப் பார்க்க வேண்டுமென்று மேன்மை தாங்கிய உங்களுக்கு நினைவுபடுத்தி அந்த மனுவை இந்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளலாமா? இந்திய அரசியலின் இன்றைய நிகழ்ச்சிப் போக்கில் அரசியலமைப்புச் சட்டரீதியான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. 1906–07இல் நிலவிய பதட்டமான, நம்பிக்கையற்ற இந்தியச் சூழலினால் ஏமாந்துபோய் நாங்கள் அமைதியான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகி  முட்கள் மண்டிய பாதைகளில் சென்றது போல் இன்று, இந்தியா மற்றும் மனிதகுலத்தின் நன்மையை மனதில் கொண்ட யாரும் கண்ணை மூடிக் கொண்டு செல்ல மாட்டார்கள்.  எனவே, அரசாங்கம் அளவில்லாத அறத்தையும் கருணையையும் காட்டி என்னை விடுதலை செய்தால்  நான் அரசியலமைப்பு சட்டரீதியான முன்னேற்றத்துக்காகவும், அந்த முன்னேற்றத்துக்கு முன்நிபந்தனையான ஆங்கிலேய அரசின்பால் காட்ட வேண்டிய விசுவாத்துக்காகவும் தீவிரமாக வாதிடுபவனாக இருப்பேன். நான் என் சக்திக்கு உட்பட்ட வகையில் எந்த விதத்தில் வேண்டுமானாலும் அரசுக்குச் சேவகம் செய்யத் தயாராயிருக்கிறேன். பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதைத் தவிர ஊதாரி மகனுக்கு என்ன வழி?”

மார்ச் 30, அன்று மீண்டும் ஒரு கருணை மனுவை அளித்தார் சவார்க்கர். அதில்,

“காலம் கடப்பதற்கு முன் என்னுடைய கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு இறுதி வாய்ப்பைத் தருமாறு” கெஞ்சினார். அரவிந்த கோஷின் சகோதரர் உட்பட தன் சக சிறைவாசிகளைக் காட்டிக் கொடுக்கும் வகையிலும் அதில் ஒரு வாசகம் இருந்தது. “போர்ட்பிளேரில் இருக்கும்போதே அவர்கள் தீவிரமான சதி செய்ததாக ஒரு சந்தேகம் இருந்தது. அந்த வகையான தீவிரவாத சிந்தனையிலிருந்து நான் வெகுதூரம் தள்ளியிருக்கிறேன். கடந்த காலத்தில் என்னிடமிருந்த புரட்சிகர மன நிலையைப் பொறுத்த வரையில் நான் கூறுவது இதுதான். இப்போது மன்னிப்புக்காக மட்டுமின்றி, பல ஆண்டுகளுக்கு முன்பே நான்  அரசுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்களில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை திரு மாண்டேகு தொடங்கியவுடனே  அச்சட்டத்திற்கு ஆதரவாக இருக்கவும், அதற்கு  இணங்கி நடக்கவும் உறுதியான எண்ணத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறேன். மாண்டேகு சீர்திருத்தங்களும் அது குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் செய்யப்பட்ட பிரகடனமும் என்னுடைய கருத்துகளை உறுதி செய்திருக்கின்றன; இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப் படியான முன்னேற்றத்தை முறையாகச் செய்யும் முயற்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்றும் அதற்கு நான் ஆதரவாக இருப்பேனென்றும் பகிரங்கமாக உறுதியளித்திருக்கிறேன்.”

மேலும், “அரசியலமைப்புச் சட்டரீதியான பாதையில் நடப்பேன் என்கிற என் சீரிய நோக்கத்தை உண்மையுடன் வெளிப்படுத்துகிறேன்; என் அன்பையும், மரியாதையையும், பரஸ்பர உதவியையும் காட்டும் வகையில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு கை கொடுக்க எளியவனான நான் அனைத்து முயற்சிகளையும் செய்வேன். பிரகடனத்தில் கூறப்பட்டிருப்பது போல் அமையப் போகும் ஒரு பேரரசுடன் மனப்பூர்வமாக இணங்கி நடப்பேன்.” 

"பகத்சிங் மனு" என்ற பகுதியில் பகத்சிங்  மற்றும் சாவர்க்கர் இருவரும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் நடந்து கொண்ட விதங்களைப் பற்றி மிகத் தெளிவாக பின் வருமாறு கூறியுள்ளார்.

பகத்சிங்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஒரு மனுவை அளித்தார். அது கருணை மனு அல்ல. இரக்கமற்று என்னைச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறும் விருப்ப மனு.

கருணைக்காக மன்றாடிய சாவர்க்கர் ஒருபுறம். சுட்டுக் கொல்லப்படுவதற்காக மனு அளித்த பகத்சிங்கும், எனக்கு அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என்று கேட்ட காந்தியும் மறுபுறம்.

மற்றவர்களின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கொலை செய்யத் தூண்டிய சாவர்க்கர் ஒருபுறம். தானே கையில் ஆயுதம் தாங்கிச் சென்று அரசாங்கத்தை அதிர வைத்த பகத்சிங்கும், அகிம்சையே என் ஆயுதம் என்ற காந்தி மறுபுறம்.

விடுதலை அளித்தால் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவேன் என்ற சாவர்க்கர் ஒருபுறம். உயிரே போனாலும் என் போர் தொடரும் என்ற பகத்சிங்கும், நீங்கள் நடத்துவது தீமையான நிர்வாகம் என்று கூறிய காந்தியும்  மறுபுறம்.

உங்கள் போருக்கு உதவுவேன் என்ற சாவர்க்கர் ஒருபுறம். உழைக்கும் மக்களையும் இயற்கை வளங்களையும் காப்பதற்காக எங்களின் போர் நிற்காது என்ற பகத்சிங்கும், தீமையுடன் ஒத்துழையாமல் இருப்பது, நன்மையுடன் ஒத்துழைப்பதற்கு இணையான கடமையாகும் என்ற காந்தி மறுபுறம்.

இந்துக்களின் ராஷ்டிரத்தை உருவாக்குவதே லட்சியம் என்றிருந்த சாவர்க்கர் ஒருபுறம். சோஷலிசக் குடியரசை உருவாக்குவோம் என்ற பகத்சிங்கும், மதச்சார்பின்மையை காக்க உயிர் தியாகம் செய்த காந்தி மறுபுறம்.

இவர்களுள் வீரர் யார்? கோழை யார்?

அது மட்டுமில்லாமல் ஆசிரியர் ஆர். விஜயசங்கர், சாவர்க்கர் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை சாவர்க்கர் மேற்கொண்டார் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர் மற்றவர்களின் கைகளில் ஆயுதங்களை கொடுத்து தான் தப்பிக்கும் வகையில் செயல்பட்டார் என்பது தான் அவர் மீது குற்றச்சாட்டு. பகத்சிங், குதிராம் போஸ் போன்றோர் அவர்களே நேரடியாக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதை ஒப்பிடும்போதுதான் சாவர்க்கரின் தந்திரம் தெளிவாகப் புரியும்". இதே தந்திரத்தை தான் சாவர்க்கர் அந்தமான் சிறையிலும் செய்ததாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மேலும் காந்தி படுகொலையிலும் இதைவிட கேவலமாக நடந்து கொண்டார் சாவர்க்கர் என்று பல்வேறு நபர்களின் வாக்குமூலங்களை வைத்து சுட்டிக்காட்டியள்ளார்.

இறுதியாக ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், "சாவர்க்கர் உருவப் படமாகவும் குறியீடாகவும் மட்டுமே இப்போது இல்லை. இந்துத்துவம் என்கிற அவர் கொள்கை 'பரிணாம' வளர்ச்சியடைந்து அரசின் கொள்கைகளாகவும் நடைமுறைக்கு வரத் துவங்கின. அந்தக் கொள்கையை இன்னும் வீரியமாக மனித மாண்புகளையெல்லாம் சிதைத்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்த கட்ட நகர்வுதான் புஜத்ராட் குஜராத் படுகொலைகளும் நரேந்திர மோடியின் எழுச்சியும்" என்று கூறுகிறார்.

முன்னுரையில் ஆசிரியர் ஆ.விஜயசங்கர், "வரலாறு என்னையும் அவரையும் விடுதலை செய்யும் என்கிற நம்பிக்கையில்." என்று முடித்திருப்பார். உண்மையில் வரலாறு உங்களையும் மனுஷ்ய புத்திரன் அவர்களையும் நிச்சயமாக மாலையுடன் வரவேற்கும்.

 

No of users in online: 129