புத்தனாவது சுலபம் - ராமகிருஷ்ணன்

புத்தனாவது சுலபம் - ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 16 சிறுகதைகள் கொண்ட புத்தகம் புத்தனாவது சுலபம். எஸ்.ரா. அவர்கள் தனது முன்னுரையில் மனித வேதனைகள் தான் எல்லாக் கதைகளின் மையப் பொருள் என்று கூறி பெரும்பான்மை கதைகளில் பெண்களே முக்கிய பாத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்லி இருப்பார். இக்கதைகளில் பெண்களை மட்டும் அல்ல; ஆண்களின் அக மற்றும் புறச்சிக்கல்களையும் சில கதைகளில் வெளிப்படுத்தி இருப்பார் எஸ்ரா அவர்கள்.

முதல் சிறுகதை இரண்டு குமிழ்கள். இரண்டு வெவ்வேறு தளங்களில் உள்ள பெண்களைப் பற்றிய சிறுகதை இது. 20 வயது உட்பட்ட எந்த ஒரு பெண்ணும் தனது தாய் தந்தையின் அரவணைப்பில் பாதுகாப்பில் இருக்க வேண்டிய காலச் சூழல் இது. ஆனால் ஒரு பெண் இச்சமூகத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் பொழுது அவளுக்கு நேர்கின்ற துயரங்கள் ஏராளம். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவள் சபீனா.

குற்றவாளியாக்கப்பட்ட சபீனாவும், சபீனாவை குற்ற விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பெண் காவலரான நிர்மலாவைப் பற்றியுமான கதை இது. சபீனாவை நீதிமன்றத்திற்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் பொழுது சதா பேசிக்கொண்டும், இவ்வுலகையே பரிகசித்தும் வரும்பொழுது முகத்தில் கடுகுடுப்பை காட்டுகிறார் நிர்மலா. ஒரு கட்டத்தில் சபீனாவின் குரல் ஒடுங்குகிறது. ஒரு கட்டத்தில் அவள் மேல் ஓர் ஒட்டுதல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஒரு பெண் காவலராக தனக்கு நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் நினைத்து பார்க்கிறார். இருவரும் வெவ்வேறு துருவம் என்றாலும் அவர்கள் இருவரும் ஒரு ஒற்றைப் பள்ளியில் சந்திக்கிறார்கள். அது இருவரையும் ஓர் இடத்தில் ஒன்று சேர்கிறது. பெண் என்பவள் தாய்மை குணம் கொண்டவள். சமூகம் அவளை குற்றவாளியாக பார்த்தாலும் அவளுக்குள்ளும் ஒரு தாய்மை ஓடுகிறது.

எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் எந்த ஒரு மனிதனுக்கும் தன் மகன் மீது கரிசனமும் சில நேரங்களில் அவர்கள் மீது ஒரு அயற்சியும் உண்டாகும். சிறுவயதிலிருந்து தன் கழுத்தைக் கட்டிக் கொண்டும் தன் கையை பிடித்துக் கொண்டும் தன் தோல் மீது சாய்ந்து கொண்டும் இரவு நேரங்களில் கதை கேட்டுக் கொண்டு தன் மேல் படுத்துக் கொண்டு இருக்கும் குழந்தை ஒரு வயதில் தந்தையிடம் இருந்து பிரிந்து செல்கிறது. அப்படி பிரிந்து வேறொரு உலகில் செல்லும் குழந்தையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் சதா தன் மகனை நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு தகப்பனைப் பற்றிய கதைதான் புத்தனாவது சுலபம்.

வேறு ஒரு உலகில் நுழையும் பிள்ளைகள் தன் தந்தையை முற்றிலும் புறக்கணிப்பது அல்லது அவர்களிடமிருந்து திடீரென பிரிந்து செல்வது ஒரு தந்தைக்கு ஏற்படும் மிகப்பெரிய மன உளைச்சல். இதனை பிள்ளைகள் புரிந்து கொள்ளாதிப்பது இக்காலகட்டத்தில் எல்லா வீட்டில் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம். ஒரு தகப்பனின் ஏக்கத்தை கவலையை மன உளைச்சலை கீழ்க்கண்டவாறு எஸ்.ரா. அவர்கள் இவ்வாறு கூறியிருப்பார்.

"என் வீட்டில் நான் பார்க்கவே வளர்ந்து, நான் பார்க்காத ஆளாக ஆகிக் கொண்டிருக்கிறான்"

"வயதால் இரண்டு பேரின் உறவை துண்டித்து விட முடியுமா என்ன?"

"இலவம்பஞ்சு ஒருபோதும் பள்ளத்தாக்கைக் கண்டு பயப்படுவதில்லை. பாறைகளைக் கண்டு ஒதுங்கிக் கொள்வதுமில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டுப் பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. அதுதான் உண்மை. எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு தகப்பனாக அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள்" என்று கதையின் இறுதியில் அந்த தகப்பன் கூறுவதாக கூறியிருப்பார்.

காலச்சூழ்நிலைகள் மாற மாற ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளேயும் சிந்தனைகளும் செயல்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் தவறு என்று சொல்லப்பட்டவைகள் சரி என்று இப்போது நிரூபிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் படிப்பதும் கேட்பதும் மிகப்பெரிய சமூகம் குற்றம் என்றும் அவ்வாறு படிப்பதால் கேட்பதால் அவர்களுக்கு வழங்க வேண்டிய தண்டனைகளைப் பற்றியும் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்ததைப் போலவே வெளிநாட்டிலும் பல  சிந்தனையாளர்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானி புருனோ அவர்களும் சிந்தித்ததின் காரணமாக மதவாதிகளால் குற்றம் சாட்டப்பட்டு உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டதை ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே என்ற சிறுகதை எடுத்துச் சொல்கிறது.

இவ்வுலகில் நாம் பல்வேறுபட்ட மக்களை தினமும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். சில நபர்களை நம்மால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவனை ஒரு கதையாக உலாவ விட்டுள்ளார் எஸ்ரா அவர்கள். அவனைப் பற்றி அவனே சொல்லிக் கொள்வதை கூறுகிறபோது நமக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

"இந்த ஊரில் எனக்குத் தெரிந்த அத்தனை பேரும் நிம்மதியாக இருக்கிறீர்கள். நான் ஒரு ஆள் நிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். இதுக்கு நீங்கள் அத்தனை பேரும் காரணமில்லையா? எதுக்கு என்னை ஒதுக்கி வைக்கப் பாக்குறீர்கள்?" என்றும் "உங்களுக்காக நான் என்னை மாற்றிக் கொள்ள முடியாது. என்னைச் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஏன் நீங்கள் தரம் தாழ்ந்து போயிருக்கிறீர்கள்? அதை நான் தெரிந்து கொள்ள வேணும்" என்றும் "ஒன்றும் செய்யாத ஒருவனை வைத்துக் காப்பாற்ற ஏன் ஆள் கூட முன்வருவதில்லை. இந்த உலகத்தில் உதவாத எத்தனையோ பொருள்கள் இருக்கத்தானே செய்கின்றன. அதை அனுமதிக்கும் உங்களுக்கு என்னோடு மட்டும் என்ன பிரச்சனை" என்றும் "காசு கொடுங்கள் என்று மண்டி போட்டு யாசகம் கேட்டு வாங்கினால் உங்களுக்குத் திருப்தி. அதை நானாக எடுத்துக் கொண்டால் அது திருட்டுத்தனமா?" என்றும் "ஒவ்வொரு மனிதனையும் அவன் குடும்பம் மட்டுமே பராமரிக்க வேண்டும் என்று யார் சொன்னது. யார் வேண்டுமானாலும் யாரையும் பராமரிக்கலாம். நீங்கள் எல்லாம் வீட்டு நாய்களுக்கு மட்டுமே சாப்பாடு போடுவீர்கள்; காரணம், அது உங்களுக்கு வாலாட்டும். நான் தெருநாய். அதனால் என்னை துரத்துகிறீர்கள். என்றும் தன்னைப் பற்றி கூறும் ஒரு மனிதனின் கதை தான் "ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்" என்ற சிறுகதை.

நடுவில் உள்ளவள் என்ற சிறுகதை ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளேயும் ஏற்படும் சிக்கல்களை எடுத்துச் சொல்கிறது.  ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்படும் பிரச்சினையை விட அக்கா தங்கைகளுக்குள் ஏற்படும் பிரச்சனை மிகப்பெரியது. அதைவிட அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகள் என்று மொத்தமாக இருக்கும் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை அதுவும் தாய் தந்தை இறந்த பிறகு ஏற்படும் பிரச்சனையானது குடும்பத்திற்குள் பிரிவையே உண்டு பண்ண கூடியது. உறவுகள் கசகந்து போனபிறகு மனிதர்களுக்குள் ஏற்படும் போட்டி பொறாமை, வலி, வேதனை மிகப்பெரியது. கிராமங்களில் நடுவுலவன் என்பவனை நல்லவன் என்றும் அழைப்பதுண்டு. அந்த நல்லவனுக்கு ஏற்படும் மன (அ) உளச்சிக்கல்கள் ஏராளம். அதை யாரும் கண்டும் கொள்வதில்லை.

ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பதில்லை, இச்சிறுகதையின் தலைப்பை பார்த்தவுடன்  அல்லது கேட்டவுடன் எங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை பிடிப்பதில்லை என்று பெண்கள் கூறுவார்கள். ஞாயிற்றுக்கிழமை எனில் ஆண்களுக்கு அதுவும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுக்கு மிகவும் விசேஷமான தினம். ஆனால் பெண்களுக்கோ மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை மிகவும் சுமையான ஒரு தினம். சைவம் சாப்பிடுகின்ற ஒரு பெண் காதலித்து திருமணம் முடித்து பிறகு அவனுடைய வீட்டில் அசைவமும் உண்டு என்று கண்ட பிறகு அவள் படும் அவஸ்தைகளை எடுத்துச் சொல்கிறது.

சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிந்கைப் பிடிக்காது. இத்தலைப்பே கதையைச் சொல்லும். ஆச்சி டிவியை பார்த்த பிறகு அதுவும் செய்திகளைப் பார்த்த பிறகு அவருடைய சிந்தனைப் போக்கே மாறுகிறது. ஆச்சி ஓரிடத்தில் இவ்வாறு சொல்கிறார், "நமக்குத்தான் அரசியல் பிடிக்கிறதே. அதை ஏன் ஒருவரும் அனுமதிக்க மறுக்கிறார்கள். எப்போதும் ஆண்கள் மட்டுமே ஏன் அரசியல் பேசுகிறார்கள்".  இது காலங்காலமாக பெண்களுக்கு நடக்கும் மற்றொரு வன்முறை என்று கூட சொல்லலாம். அரசியலையும், மன்மோகன் சிங்கையும் தெரிந்த பாட்டிக்கு இலங்கைத் தமிழர்களைப் பற்றிய செய்தியைப் பார்த்ததும் கோபம் பொங்குகிறது. இப்போது பாட்டியும் அரசியலைப் புரிந்து கொண்டாள். ஆனால் அது அவளுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

இக்கதையில் எஸ்.ரா. அவர்கள் தமிழர்களுக்கு இலங்கையில் நடந்த கொடூரத்தை ஒரு பாட்டியுடன் இணைத்து ஒரு இனத்திற்கு ஏற்பட்ட வரலாற்று உண்மையை ஒரு கதையின் வாயிலாக கொண்டு சென்றது மிக சிறப்பான ஒன்றாகும்.

பேசும் கற்கள் மற்றும் சிறுமீன் இரண்டும் குழந்தைகளுக்கான கதை என்று கூட சொல்லலாம். சொந்தக் குரல்,  கோகிலாவாணியை யாருக்கும் நினைவிருக்காது இந்த இரண்டு கதைகளும் மனதில் கூடிய கதைகள். காலம் காலமாக பெண்களுக்கு நடக்கும் மோசமான அவர்களே மறக்க முடியாத நிகழ்வுகள் என்று கூடச் சொல்லலாம். சிற்றறிவு சிறுகதை நமக்கும் இப்படி ஒரு மகாராணி இருந்திருக்கலாமோ என்று நினைக்கக்கூடிய அளவிற்கான ஒரு சிறுகதை. ஆனால் அறிவோ, அறிவியல் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு செல்வது என்று யோசிக்க வைக்க கூடிய கதை. மனிதர்களுக்குள் இக்கதை ஒரு விவாதத்தை ஏற்படுத்த கூட செய்யலாம்.

ஒரு சில சிறுகதைகளைத் தவிர மற்ற எல்லாக் கதைகளும் மனதைக் கவரக் கூடியவைகளே. ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் இப்புத்தகத்தை வாசிக்கலாம்.

No of users in online: 114