வனரஞ்சனி - பழநிபாரதி

வனரஞ்சனி - பழநிபாரதி

"சாதிகள் மட்டுமே சமுதாயம் என்றால் வீசும் காற்றிலும் விஷம் கலக்கட்டும்..." என்று அறம் சார்ந்த கோபம் கொண்ட பழநிபாரதி அவர்களின் கவிதை நூல் வனரஞ்சனி. 112 பக்கங்களுடன் 84 கவிதைகளைக் கொண்ட இக்கவிதை நூல் காதலை மட்டுமல்ல; சமூகத்தில் நடந்த அநியாயங்களையும் சுட்டிக் காட்டுகிறது.

பெண்ணைப் பாடுவதும் அவளை உயர்த்திச் சொல்வதும் கவிஞர்களுக்கு என்றும் ஒரு இன்பம் தான். நமது கவிஞரும் அவளைப் பற்றி 'அவளால்தான்' என்று தலைப்பில் ஒரு கவிதை பாடுகிறார்.
ஆறெங்கும் வெள்ளம்
ஆனாலும்
அவளால்தான்
நிறையவேண்டியிருக்கிறது
அந்தக் குடம்

ஆண், பெண் பற்றி ஒரு ஒப்புமை கவிதை "அப்படியே" என்ற தலைப்பில்,

அவள்
அப்படியே வரைந்திருக்கிறாள்
ஒரு ஆப்பிளை

அவன் அழித்தழித்து
வரைந்துகொண்டிருக்கிறான்
ஒரு கத்தியை.

நாம் எல்லோரும் நிலவிற்கு கீழே தூங்குவோம். ஆனால் நிலவு எங்கு தூங்குகிறது என்பதை கவிஞர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

நகரத்திற்கு வெளியே
நிலவு
பூமியில்
பாய்விரித்துப் படுத்துத் தூங்குகிறது.

அய்லான் - துருக்கியில் கடலோரம் கரை ஒதுங்கிக் கிடந்த மூன்று வயதுக் குழந்தை. அய்லானை முதன் முதலில் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் டெமிரை பார்த்து இவ்வாறு கேட்கிறார்.

கடலும்கூட
அவர்களை ஏற்றுக்கொள்ளாமல்
ஏன்
கரையில் வீசிவிட்டுப் போகிறது.

அத்துடன் டெமிரைப் பார்த்து மற்றொரு கேள்வியையும்  வீசுகிறார்.

வன்முறையாளர்களுக்கு
கடவுள் இருக்கிறாரா டெமிர்?

இதை ஒரு கவிஞனின் அறம் சார்ந்த கோபம் என்று தான் பார்க்க வேண்டும். இறுதியில் இக்கவிதையை இவ்வாறு முடிக்கிறார்.

இந்த உலகைப் பார்க்கப் பிடிக்காமல்
தலைகவிழ்ந்து
படுத்துக்கிடக்கிறான்.

கிராமத்தில் மரத்திற்கு கீழே கட்டிலை போட்டு வயதானவர்கள்  உறங்கியோ அமர்ந்தோ

ஓய்வெடுப்பார்கள். அவர்கள் இல்லாத நேரத்தில் வேப்பமரம் படுத்திருப்பதாக கற்பனை செய்து பார்க்கிறார் கவிஞர்.

சொல் நிழல்
பனைநார்க் கட்டிலில் படுத்திருக்கும்
வேப்ப மர நிழலுக்கு
சொற்கள் இல்லை
ஆனாலும்
சொல்லிக்கொண்டிருக்கிறது
ஒரு காதல் கதை.

காதல் கவிதை மட்டுமல்ல. இத்தமிழ்ச் சமூகத்தில் நாம் நடந்து கொண்டிருக்கும் அழகைப்/அவலங்களைப் பற்றியும் கவிதைகளில் சாடுகிறார் "கரைதல்" எனும் தலைப்பில்,

மரக்காணம்
சித்ரா பௌர்ணமி
நிலவில் தெறித்தது
யாருடைய ரத்தம்.

இன்றைய கார்ப்பரேட் உலகில் விவசாயி, விவசாயம் மட்டுமல்ல; மொத்த இளைஞர்களும் எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தெரியப்படுத்துகிறது கவிஞரின் கடைசி கவிதையான "நான் எந்திரமாகிவிட்டேன்".

கவிஞன் காதலை மட்டுமல்ல , சமூகத்தில் நடக்கும் அநியாயங்களையும் சுட்டிக் காட்ட வேண்டும். இக்கவிதைத் தொகுப்பில் இரண்டையும் கொடுத்துள்ளார்.

No of users in online: 116