கண்மணி கமலாவுக்கு - புதுமைப்பித்தன்

கண்மணி கமலாவுக்கு - புதுமைப்பித்தன்

தமிழ்ச் சிறுகதை உலகில் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த புதுமைப்பித்தன் அவர்கள் தனது மனைவி கமலாவிற்கு 1938இலிருந்து 1948 வரை எழுதிய 88 கடிதங்கள்  இளைய பாரதி அவர்களால் தொகுக்கப்பட்டு "கண்மணி கமலாவுக்கு... புதுமைப்பித்தன்" என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.

தமிழ்ச் சூழலில் ஒரு ஆண் தன் மனைவியிடம் சிரித்து பேசுவது என்பது பெரியோர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு நிகழ்வாகும். எப்போதுமே பெரியவர்கள் தன் மனைவியையோ அல்லது தன் பிள்ளைகளின் மனைவியையோ மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது ஒரு அரிதான ஒரு நிகழ்வாகும். இன்றைய சூழல் இப்படி இருக்கும் பட்சத்தில் 1938 - 1948 என்பது கனவாகவே நினைக்க வேண்டிய ஒரு சூழல். ஆனால் புதுமைப்பித்தன் அவர்கள் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் ஒரு கலைஞன் ஒரு கலைஞனாக இல்லாமல் ஒரு மனிதனாக, கணவனாக தன் மனைவி மேல் அவன் கொண்டிருக்கும் ஆத்மார்த்த காதலை எந்த அளவுக்கு வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறான்.

கண்ணா, கண்ணம்மா, கண்ணாளுக்கு, எனது ஆருயிர்க் கண்ணாளுக்கு, எனது கட்டிக் கரும்பான கண்ணாளுக்கு, கண்ணான எனது உயிருக்கு, எனது கண்ணுக்குக் கண்ணான கட்டிக் கரும்புக்கு, எனது உயிருக்கு உயிரான கட்டிக் கரும்புக்கு...

இவையெல்லாம் புதுமைப்பித்தன் அவர்கள் தனது மனைவிக்கு கடிதம் எழுதும்போது ஆரம்பிக்கும் முதல் வரிகள்.

முத்தமிட்டு முடித்துக் கொள்ளும், உனக்கு ஆயிரம் முத்தம், இங்கிருந்தே உன்னைத் தழுவி ஆலிங்கனம் செய்து முத்தமிடும் உனது, எனது ஆருயிர் குஞ்சுவுக்கும் உனக்கும் ஆயிரம் முத்தங்கள், உன்னையே நம்பி வாழும், உன்னுடன் தவிக்கும், இத்துடன் துன்ப முத்தங்களுடன் உன் அன்பின் பலத்தால் ஆறுதல் பெற நம்பும், உன்னையே நினைத்துத் தவிக்கும்....

இவையெல்லாம் புதுமைப்பித்தன் அவர்கள் தன் மனைவிக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்தின் கடைசி வரிகள்... இவையெல்லாம் புதுமைப்பித்தன் தன் மனைவி மீது எந்த அளவிற்கு காதல்  கொண்டிருக்கிறார் என்பதற்கான ஒரு சில வரிகள்.

புதுமைப்பித்தன் என்ற இந்த மகாகலைஞன் தனது காதலை தன் மனைவி மீது கொண்ட பாசத்தை தனது கடிதங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொருவரும் தனது மனைவிக்கு மாதத்திற்கு ஒன்று  அல்லது இரண்டு கடிதங்களை எழுதுவார்கள். ஆனால் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுகிறார்.

புதுமைப்பித்தன் தனது கடிதங்கள் வழியாக தனது மனைவிக்கு ஆறுதலையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். காரணம், அவரது உடல்நிலை, பணக்கஷ்டம் மற்றும் தனது மனைவியின் தேக சுகம். ஒரு கடிதத்தில் தன் மனைவிக்கு எழுதும்போது கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். "உனக்கு பணம் அனுப்புவதற்குள் நான் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது; குஞ்சுவைக் காட்டி பிச்சை எடுத்த மாதிரி தான். இந்த நிலைக்கு உன்னை கொண்டு வந்து விட்டேனே என்று என் மீதே எனக்கு வெறுப்புத் தோன்றி விட்டது. கண்ணம்மா, ஆறுதல் அளிக்கும் என்ற நம்பிக்கையில் நான் அங்கு வரும் வரை, தினசரி ஒரு கடிதம் எழுதுகிறேன், கண்ணம்மா உனக்கு." என்று எழுதுகிறார். இதற்கிடையில் தன் மனைவியை சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்கிறார். ஆனால் அதுவும் தள்ளி தள்ளிப் போகிறது.

வாழ்வே போராட்டம் என்ற நிலையில் இருக்கும் புதுமைப்பித்தன் அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறக்கிறது. அக்குழந்தைக்கு குஞ்சு என்று பெயரிட்டு தன் மனைவிக்கு கடிதம் எழுதுகிறார். இதற்கிடையே பிறந்த குழந்தை சில நாட்களுக்குப் பிறகு இறந்து விடுகிறது. இதில் புதுமைப்பித்தனும் அவர் மனைவியும் மிகவும் துயரம் அடைகிறார்கள். அத்துயரத்தை தன் மனைவிக்கு, "என் மனச் சங்கடத்திலேயே பிறந்து, என் மனச் சங்கடத்திலேயே வளர்ந்து, என் மனச் சங்கடத்தை முடிவில்லாததாக்கி விட்டுப் போனவளுக்கு உளைச்சலால் வதங்கிப் போன என் நெஞ்சைத்தான் அள்ளிக் கொடுக்கிறேன்" என்று எழுதுகிறார்.

அதே நேரத்தில் தன் மனைவிக்கு உடம்பு சரி இல்லை எனில், உன் உடம்பு குணமாகி சீக்கிரம் நடமாட வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை உன் பிரார்த்தனையுமாக இருக்கட்டும் என்றும் உடம்பைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள். கண்ணே! வேறு என்ன எழுத? நீதான் என் உயிர் என்றும் உன் உடலும் மனமும் குணப்பட்டால் எனக்கும் அதில் உள்ள இன்பம் எத்தனையோ ஆயிரம் மடங்கு பெருகும் என்றும் எழுதுகிறார்.

இடையிலேயே தன் மனைவிக்கு நீயும் கதை எழுது;(குழந்தை மீனாள், காசு மாலை  கதைகளை புதுமைப்பித்தன் மனைவி எழுதியுள்ளார்)புத்தகங்கள் படி; உனக்கு தேவையானவற்றை சொல் நான் வாங்கி அனுப்புகிறேன் என்று தனது மனைவியையும் கதை எழுத ஊக்கப்படுத்துகிறார். கடிதங்களை தூக்கமில்லாமல் அர்த்த ராத்திரியில் எழுதி இருக்கிறார் அதை தன் மனைவியிடமும் கூறுகிறார். அதே நேரத்தில் உனக்கு கடுதாசியைப் எழுதினால் மனம் கொஞ்சம் நிம்மதியாகும் என்று எழுதுகிறார் மேலும் உன்னை ராஜாத்தி மாதிரி வைத்திருக்க ஆசை. விதி என் கால்களை தட்டி விடுகிறது என்றும் எழுதுகிறார்.

புதுமைப்பித்தன் அவர்கள் தன் மனைவிக்கு கடிதம் எழுதிய இந்த காலகட்டம் யுத்த காலம். யுத்த நிலைமையை சென்னையில் எவ்வாறு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒரு சில கடிதங்களில் தெரியப்படுத்தியுள்ளார் அதில் சர்க்கார் தோற்றுவிடும் என்று வங்கியில் போட்ட பணத்தை ஜனங்கள் எடுப்பதாகவும் சர்க்கார் மக்களிடம் பயப்பட வேண்டாம் என்று நோட்டீஸ் கொடுப்பதையும் சுட்டி காட்டியுள்ளார். மேலும் யுத்தத்தின் காரணமாக நகையின் விலை விஷம் போல் ஏறுவதாகவும் எழுதி உள்ளார்.

கடைசிக் கடிதம் மட்டும் சிதம்பரம் என்பவருக்கு எழுதியது. அந்த கடிதத்தில், "இரண்டு சுவாசப்பையிலும் துவாரம் விழுந்துவிட்டதனால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டுக் கிழித்து விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம் தான் முடிவு" என்று பகடியாக எழுதியுள்ளார்.

மனைவி மற்றும் குழந்தைகளின் மீது அபரிதமான அன்பை கொண்டிருந்த புதுமைப்பித்தன் தன் வாழ்நாள் முழுவதும் பணக்கஷ்டம், இருமல், வயிற்று வலி, கை வலிகளுடன் நிம்மதியற்ற மனநிலையில் வாழ்ந்ததுடன் ஒவ்வொரு கடிதத்திலும் இந்த விதி நம்மை விட்டு விலகிச் செல்லும்; இனி நாம் வாழ்க்கையில் நிம்மதியான சூழ்நிலையில் வாழ முடியும் என்று நம்பிக்கை ஒன்றையே தன் மனைவிக்கு கொடுத்துள்ளார். நம்பிக்கை ஒன்றையே கொண்டிருந்த எழுத்துலகின் முடிசூடா மன்னனான புதுமைப்பித்தன் அதன் பலனைக் காணாமலேயே சென்றது இலக்கிய உலகின் பேரிழப்பாகும்.

No of users in online: 101