கறிச்சோறு - சி.எம்.முத்து

கறிச்சோறு - சி.எம்.முத்து

சி.எம்.முத்து அவர்களால் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்து எழுதப்பட்ட ஒரு குறுநாவல். ஒரு மனிதனுக்கு மதம் பிடித்தால் என்ன ஆகும்? சாதி பிடித்தால் என்ன ஆகும்? சாதிக்குள் சாதி பார்ப்பவன் அந்த ஊரில் இருந்தால் அந்த ஊர் என்ன ஆகும்? அதுதான் கறிச்சோறு.

சாதிக்குள் சாதி பார்க்கும் வாகர கள்ளன் சாதியை சேர்ந்த கூட்டத்தார் வாழும் ஒரு பகுதியில் வசிப்பவர் முத்துக்கண்ணு விசுவராயர். விசுவராயர், அவர் மனைவி பூரணி, மகள் கமலா, மகன் தங்கவேலு, அதே ஊரில் பெரிய மனுஷனாகவும் ஒரு நல்லது கெட்டதுக்கு முன்னுக்கு பேசுற மனிதனாகவும் சாதியை பெருமையாக கருதும்  தருமையா நாட்டார், நாட்டரோடு சேர்ந்து குளிர்காய்கிற மனுஷன் கோபால் குச்சிராயர் மற்றும் பெரிய வீட்டு நாயக்கர் ரங்கப்பிள்ளை.

அதே ஊரில் வடுவக்குடி என்னும் அறுத்துக்கட்ற ஊரைச் சேர்ந்த வந்தாரு குடியை சேர்ந்த சாம்பசிவம் வாழ்ந்து வருகிறான்.

இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் இவர்கள். இக்கதையில் உள்ள ஆண் கதாபாத்திரங்களான தங்கவேலு, சாம்பசிவம் தவிர மற்ற எல்லோரும் சாதியை கௌரவமாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஒரு பெண் வயதுக்கு வந்த பிறகு திருமணம் ஆகும் வரை வெளி உலகத்தை பார்க்க கூடாது என்பது ஊர் சம்பிரதாயம்.

இச்சூழ்நிலையில் முத்துக்கண்ணு விசுவராயர் தன் பெண்ணிற்கு தெற்கு சீமையிலே ஒரு மாப்பிள்ளை தேடுகிறார். ஆனால் தருமையா நாட்டாருக்கும், கோபால் குச்சிராயிருக்கும் விசுவராயர் அங்கு செல்வது பிடிக்கவில்லை. ஆனாலும் முத்துக்கண்ணு விசுவராயர் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்க தன் மனைவியுடன் தெற்கு சீமை செல்கிறார்.

பூரணிக்கு இவ்வூரில் வாழ்ந்து வரும் சாம்பசிவம் மீது காதல். இருவரும் யாருக்கும் தெரியாமல் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கோபால் குச்சிராயிடுவின் மூத்த மகள் மூலம் பூரணி - சாம்பசிவம் காதல் கொஞ்சம் தெரிய வருகிறது. ஆனால் எல்லோரும் அதே ஊரில் வசித்தாலும் அறுத்துக்கட்ற ஊரைச் சேர்ந்த சாம்பசிவத்துக்கு பெண் தர மறுக்கிறார்கள்.

அதே நேரத்தில் பூரணி சாம்பசிவம் காதல் தெரிந்தும் தருமையா நாட்டார் உடன் சேர்ந்து  மாப்பிளை பார்க்கிறார் பூரணியின் தந்தை விசுவராயர். ஆனால் தனது தங்கையின் காதலை அறிந்த தங்கவேலு அதற்கு தடை போடுகிறார். இறுதியில் பூரணி சாம்பசிவம் காதல் என்னானது? ஊர் பெரிய மனிதர்கள் என்ன செய்தார்கள் என்பது மீதிக்கதை.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு மைனர் மாப்பிள்ளை அல்லது அடுத்த வீட்டில் எதுவும் நடக்காதா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மனுசன் வாழ்ந்து கொண்டிருப்பான். அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவன் எப்போதும் ஊர் பெரிய மனுசனை அண்டியே வாழ்ந்து கொண்டிருப்பான். இருக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும் இம்மனிதன் எல்லோரிடமும் ஏதாவது ஒன்று சொல்லி அக்குடும்பத்தை எந்த அளவிற்கு தரம் தாழ்த்தி தன்னை உயர்வாக  காட்ட முடியுமோ அதை தவறாமல் செய்து கொண்டிருப்பான். இதே வேலையை தான் கோபால் குச்சிராயர் செய்கிறார் தருமையா நாட்டார் உடன் சேர்ந்து. ஆனா எல்லா காலங்களிலும் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அந்த ஊரில் நலமாக வளமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் இக்கதையில் காலம் கோபால் குச்சிராயர் வீட்டை விட்டே வெளியே வராத முடியாத சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆம்! தான் செய்த பாவங்களுக்கு அவருக்கு அந்த தண்டனை கிடைக்கிறது.

சி.எம்.முத்து இக்குறுநாவலை மிகச் சிறிய கதாபாத்திரங்களோடு ஒரு அழுத்தமான கதையோடு கொண்டு செல்கிறார். சாதி சார்ந்த தஞ்சை பகுதியை, சாதியே பிரதானமாக கொண்டிருக்கும் அந்த ஊரில் சாதிக்குள் சாதி பார்க்கும் அந்த ஊரில் வேற்று சாதி சேர்ந்தவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது மிகப்பெரிய சிக்கல். இந்த சிக்கலை  சி.எம்.முத்து எப்படி கையாண்டிருக்கிறார் என்பது தான் கதையின் போக்கு.

சாதியா? குடும்பமா? என்ற பார்வையில் சிலர் சாதியை உயர்ந்த உச்சபட்ச கௌரவமாகவும் சிலர்  குடும்பத்தின் பொருட்டு அல்லது வாழ்க்கையின் போக்கோடு சேர்ந்து கொண்டு தன்னுடைய சாதி கௌரவத்தை சற்று விட்டுக் கொடுத்து வாழ்வதும் உண்டு. ஒரு சிலர் தங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட பின்பே மனம் மாறுதல் அடைவதும் உண்டு. மனிதன் என்பவன் எப்போதுமே ஒரு சூழ்நிலைக்கைதி. தனக்கு அல்லது தன் குடும்பத்திற்கு ஏற்றவாறே முடிவை எடுக்கிறான். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அதற்கு நேர் எதிரான ஒரு முடிவையே எடுப்பார்கள். அது இக்கதையிலும் உண்டு.

கறிச்சோறு - சாம்பசிவம் தனது கல்யாணத்துக்கு ஊரு விருந்து போட(கறிச்சோறு) ஆடு வளர்க்கிறான். ஆனால் அவனுக்கு பூரணி இல்லை என்றவுடன் திருவிழா அன்று கிடா வெட்டி ஊருக்கு கறிச்சோறு போட போவதாக சொல்கிறான். ஆனால் ஊர் பெரியவர்கள் இரண்டு கடாவுக்கு பதில் இன்னும் இரண்டு கடாவை சேர்த்து வெட்ட சொல்கிறார்கள். சுவாமி புறப்பாடு முடிந்து மறுநாள் சாம்பசிவம் வீட்டு முன்பு கறி சோறு சாப்பிட ஊர் ஜனமே திரள்கிறது. பந்தியில் கை வைக்கும் முன்பே சாம்பசிவம் கேட்கும் கேள்விகள் தகராறாக மாறுகிறது.

தஞ்சையின் பேச்சு வழக்கை கதாபாத்திரங்களின் வழியாக உயிரோடு உலாவவிட்டிருப்பது மிகவும் அருமை. அவர்கள் நாவில் சாதாரணமாகவே சில கெட்ட வார்த்தைகளும் வருவது உண்டு. தஞ்சை வட்டார வழக்கை முதல் முதலாக படிப்பவர்களுக்கு சற்று புதுமையாகவும் மீண்டும் ஒருதடவை அந்த வார்த்தையை படிக்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். சி.எம்.முத்து  அவர்கள் நாவலில் மேளக்காரர், நாகஸ்வரம் வாசிப்பவர், சிஞ்சக்கா போடுபவர் (கிராமங்களில் ஆமாம் சாமி என்று சொல்பவனை சிஞ்சக்கா போடுபவன் என்று அழைப்பர்), ஹார்மோனி வாசிப்பவர் இவர்களையும் வர்ணித்திருப்பது ரசனையான இடம்.

சாதியும், மதமும் எப்போதும் மனிதனை பக்குவப்படுத்தாது. சில உயிர்ப் பலிகளை வாங்கிக் கொண்டுதான் செல்லும். அது கறிச்சோறு நாவலிலும் நடந்திருக்கிறது.

 

No of users in online: 106