பொங்கி வரும் புது வெள்ளம்
பொங்கி வரும் புது வெள்ளம் - கருணாநிதி

பொங்கி வரும் புது வெள்ளம் - கருணாநிதி

1988-ஆம் ஆண்டில் கலைஞர் அவர்கள் பல்வேறு கல்லூரி மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய சொற்பொழிவுகள் "பொங்கி வரும் புது வெள்ளம்" என்ற சிறு புத்தகமாக வெளிவந்துள்ளது. மொத்தம் ஐந்து சொற்பொழிவுகள்; 88 பக்கங்கள்.

முதல் சொற்பொழிவு 18.6.88 அன்று மணவை முஸ்தபா அவர்களின் "காலம் தேடும் தமிழ்" நூல் வெளியீட்டு விழாவில் மணவை முஸ்தபா அவர்களுக்கு "அறிவியல் தமிழ்ச் சிற்பி" என்கிற பட்டத்தை அளித்து பேசிய உரை "பொங்கி வரும் புது வெள்ளம்" என்ற தலைப்பில் வந்துள்ளது. மணவை முஸ்தபா அவர்கள் தனது புத்தகத்தின் முன்னுரையில், "தமிழ் வரி வடிவங்களில்,  குறியீடுகளில் செய்ய விழையும் மாற்றங்களால் தமிழ் ஒலி வடிவமோ எழுத்துக்களோ பாதிக்கப்படப் போவதில்லை. தேவையற்ற குறியீடுகள் குறைக்கப்படுகின்றன. எழுத்துக்கள் குறைக்கப்படவில்லை" என்று குறிப்பிடுகிறார். அதனை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இது எனக்கு மிக மிக மன நிறைவை அளிக்கக்கூடிய ஒன்று என்று குறிப்பிடுகிறார்.

மேலும் மொழிபெயர்ப்பைப் பற்றி பேசும்பொழுது, 'சில பெயர்கள் வேறு மொழியில் அது ஆங்கிலத்திலோ வடமொழியிலோ அல்லது வேறு எந்த மொழியிலோ வழக்கத்திற்கு வந்து விடுமேயானால் மக்களிடத்திலே பரவி நிலைத்து விடுமேயானால் அவைகளை எப்படியும் மாற்றியே தீர வேண்டும் என்கிற பிடிவாதப் போக்கு இருத்தல் ஆகாது என்பது என்னுடைய எண்ணம். கூடுமானவரையில் அந்தச் சொற்களையே பயன்படுத்தலாம்" என்று கூறி அதற்கு உதாரணமாக உதயசூரியன், சாக்ரடீஸ் என்று பயன்படுத்தலாமே தவிர அதை விடுத்து ஞாயிறு, சோக்ரதர் என்று பிடிவாதமாக மொழிபெயர்ப்பு செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கூடாது என்று குறிப்பிடுகிறார்.

இரண்டாவது சொற்பொழிவு சென்னை புதுக் கல்லூரியில் 18.2.2004 அன்று உமறுப் புலவர் தமிழ்ப் பேரவையின் சார்பில் நடந்த "தமிழுக்கு ஒரு விழா" என்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், "அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தாக, பல இடங்களில் பல பாடல்களை பாடி கொண்டிருந்தார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து என்று நிரந்தரமாக ஒரு வாழ்த்துப் பாடல் தேவை. அது அரசு விழாக்கள் அனைத்திலும் பாடப்பட வேண்டும். விழா இறுதியில் தேசிய கீதம் பாடுவதைப் போல, தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். அதற்கு எந்தப் பாடலைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்த்து, மனோன்மணீயம் சுந்தரனார் பாடிய 'நீராரும் கடலுடுத்த' என்ற பாடல் தமிழகத்தில் நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தபோது அதை பாடலாக பாட வேண்டும்" என்று முடிவு எடுத்ததை குறிப்பிடுகிறார்.

மேலும் அப்பாடலில், "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீர் இளமை" என்ற வரிகளை அகற்றி விடலாம் என்று முடிவு செய்தபோது புலவர்கள் 'அந்த வரிகள் இருப்பது சரிதானே, ஆரியம் என்றால் வடமொழி தானே, அது உலக வழக்கு அழிந்து ஒழிந்த மொழி தானே, அந்த வரியை ஏன் நீக்க வேண்டும்' என்று கேட்டதாகவும் அதற்கு கலைஞர் அவர்கள், 'இந்த வாழ்த்துப் பாடலில் "அழிந்து", "ஒழிந்து" போன்ற அமங்கலச் சொற்கள் இல்லாமல் இருந்தால் எல்லா விழாக்களிலும் இதனைப் பாட வசதியாக இருக்கும் அல்லவா. எனவே அந்த வரிகளை அகற்றி விடலாம்" என்று தான் சொன்னதாகவும் கூறியுள்ளார்.

இதிலிருந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஆரம்பத்தில் இருந்தே இன்றைய கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் சீமான் வரை ஒரு பிரச்சினையாகவே உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் அந்த உரையில், "சங்க இலக்கியத்தில் பாலைக்கலியில் அன்பைப் பொழிகின்ற இரண்டு மான்களைப் பற்றியும் சீறாப்புராணத்தில் உமறுப்புலவர் சுட்டிக்காட்டுகின்ற நாணயமான மானைப் பற்றியும் இதிகாசத்தில் (கம்பராமாயணம்) வருகின்ற மாய மான்; வஞ்சக மான்; சூது நிறைந்த மான் என மூன்று மான்களை ஒப்பிட்டு தமிழும் தமிழனும் விழுந்து விடாமல் காப்பாற்ற வேண்டுமேயானால் நாணயமான மான் தேவை" என குறிப்பிடுகிறார்.

இந்த சொற்பொழிவில் அவர் எம்ஜிஆரை  ராமச்சந்திர மூர்த்தியாகவும் ஜெயலலிதாவை மாரீசனாகவும் ஜானகியை சீதாதேவியாகவும் உருவாகப்படுத்தி இவர்களோடு மேற்கண்ட மான்களையும் ஒப்பிடுகிறார்.

மூன்றாவது சொற்பொழிவு சென்னை மாநில வணிகக் கல்வி பயிலகத்தில் 21.3.88 அன்று கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை "புதுவெள்ளம்" என்ற தலைப்பில் உள்ளது.

கற்பனைகள் ஊர்வதும் கருத்துக்கள் ததும்புவதும் கடமையாற்றுகின்ற துணிவு ஏற்படுவதும் இளமையிலே தான்; அந்த இளமையை நாம் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும் என்று கூறி நம்முடைய பழைய நூல் சீவக சிந்தாமணி அன்றைக்கு மயில் பொறி அமைத்து ஆகாயத்தில் பறந்தான் என்கிற செய்தியை நமக்கு சொல்கின்ற போது நாம் புத்தகத்தோடு நிற்க, மேல்நாட்டுக்காரன் புத்தகத்தில் தெரிந்து கொண்டதை செயல்படுத்த தொடங்கினான். நாம் செயல்படுத்த தொடங்கவில்லை. மேலும் நாம் வரலாறு அற்றவர்கள் அல்ல. இலக்கியச் செறிவு அற்றவர்கள் அல்ல; எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவும் இல்லை என்ற நிலையில் உள்ளவர்கள் நாம். எனவே நாம் நம்மால் முடியும் என்ற மன உறுதியோடு பணியாற்ற வேண்டும்; முன்னேற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

நான்காவது சொற்பொழிவு "சமுதாயமும் அரசியலும்" என்ற தலைப்பில் நந்தனம் கல்லூரியில் நடைபெற்ற உரையாகும்.

வேதாரணியத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் ராஜாஜியைப் பற்றி  குறிப்பிட்ட தினமணி வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரின் பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்? என்று இந்த உரையிலே கேள்வி எழுப்புகிறார். மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சென்னை ராஜ்ஜியம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று கூறி சிலப்பதிகாரத்தில், ‌"இமிழ் கடல் வரப்பில் தமிழகம்" என்று இருக்கிறது என்று கூறியதற்கு காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் சிலப்பதிகாரத்தில் இருக்கலாம் இலக்கியத்தில் இருக்கிறதா என்று பழைய கதையை நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார்.

ஐந்தாவது சொற்பொழிவு "தேசியம் என்றால் என்ன?" என்ற தலைப்பில் சென்னை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் 30.3.88 அன்று ஆற்றிய உரையின் பகுதியாகும்.

இந்த உரையில், இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து அதுவும் காவேரிக் கரையிலிருந்து தொடங்கப்பட வேண்டும்; அது கங்கை நதிக் கரையில் இருந்து தொடங்கக்கூடாது என்று வரலாற்று ஆய்வறிஞர்கள் கூறுவார்கள். அதனை கலைஞரும் குறிப்பிட்டு ஆனால் அதுதொடங்கப்படவில்லை என்று வருத்தப்படுகிறார்.  மேலும் ராமாயணம் மகாபாரதம் மற்றும் சிலப்பதிகாரம் இந்த மூன்றைப் பற்றியும் இந்த உரையில் குறிப்பிடுகிறார். அந்த உரையில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களும் பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்தவர்கள் ராஜ குடும்பத்தை பற்றியும்; ராஜ குடும்பத்தில் பிறந்த செங்குட்டுவன் தம்பி இளங்கோ நடுத்தர மக்களின் கதையான கோவலன் கண்ணகி கதையை எழுதியதையும் ஒப்பிட்டு பேசுகிறார்.

இந்த ஒப்பீடு நமக்கு ஒரு புதிய அனுபவத்தை தருகிறது. ஒப்பிட்டை அவர் கூறுவதற்கு காரணம் சிலப்பதிகாரம் ஒரு நாட்டினுடைய கலாச்சாரம், பண்பாடு அந்த நாட்டினுடைய மன்னனின் வாழ்வு, அந்த நாட்டினுடைய சிறப்பு இவைகளின் பற்றி பேசுகிறது. மேலும் இந்த சிலப்பதிகாரம் நம்முடைய வாழ்வோடு ஒன்றிவிட்ட வரலாறு ஆகும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

தேசியம் என்று குறிப்பிடும் பொழுது தேசம் + இயம், தேசியம்; காந்தி + இயம், காந்தியம். தேசத்தின் மீது கொண்டுள்ள பற்று; காந்தியின் மீது கொண்டுள்ள பற்று. அதே நேரத்தில் தேசியம் வடமொழிச் சொல். நாம் அதை நாடு + இயம் என்று சொல்ல முடியுமா? என்று ஒரு கேள்வி எழுப்புகிறார்.

இந்தக் கேள்வியை கலைஞர் கருணாநிதி எழுப்புவதற்கு காரணம், தேசியம் என்ற ஒரு வடமொழிச் சொல்லை சிலர் பயன்படுத்துகின்ற காரணத்தினாலேயே அந்த சொல்லை நாம் பயன்படுத்தாத காரணத்தாலேயோ நாம் நாட்டுப்பற்று அற்றவர்களாக ஆகிவிட முடியுமா என்று கூறுகிறார்.

கலைஞர் கருணாநிதியின் பேச்சு என்பது எல்லோருக்கும் கேட்க கேட்க இனிமையான ஒரு நிகழ்வாக அமையும். அது மேலுள்ள இடங்களில் அவர் பேசிய பேச்சைக் கேட்டு நாம் உணரலாம். எப்போதுமே எந்த ஒரு நிகழ்வை பற்றிக் குறிப்பிடும்போதும் தற்போதைய நிகழ்வையும் அதனுடன் ஒப்பிட்டு பேசுவதில் வல்லவர் கலைஞர் அவர்கள்.

சிறிய புத்தகமாக இருப்பினும் வளரும் பேச்சாளர்களுக்கு ஒரு சிறப்பான புத்தகமாக அமையும் என்பது எனது எண்ணம்.