மக்ஃபி
மக்ஃபி - புதியமாதவி

மக்ஃபி - புதியமாதவி

அவுரங்கசீப் - முஸ்லிம்களுக்கு இந்தியாவை ஆண்டு வந்த மன்னனாகவும் இந்துத்துவவாதிகளுக்கு ஒரு மோசமான மனிதனாகவும் மொத்தத்தில் மக்களுக்கு ஒரு கொடுங்கோலனாகவும் அறியப்பட்டவன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் உலகில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை விடவும் கதைகள் அதிகமாக உள்ளன என்று கூறியிருப்பார்.

ஆனால் இந்திய சரித்திரத்தில் ஔரங்கசீப் என்ற ஒரு மாவீரனை பற்றிய கற்பனைக் கதைகள் எங்கெங்கும்  பரவி இருக்கிறது. அந்த மாவீரன் பற்றிய பொய்கள் பல புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

ஆனால் புதியமாதவி அவர்கள் அந்த மாவீரனைப் பற்றியும் அவனுடைய மூத்த மகள் சைபுன்னிஷா என்ற மக்ஃபியைப் பற்றியும் மக்ஃபி என்ற பெயரில் குறுநாவல் ஒன்றை படைத்துள்ளார். இந்த குறுநாவல் இறந்த காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் மக்ஃபிக்கு நடந்த நிகழ்வையும் நிகழ் காலத்தில் இந்திய அரசியலில் மக்ஃபி போன்ற மற்றொரு பெண்ணிற்கு ஏற்பட்ட நிகழ்வையும் இரண்டு பகுதிகளாக எழுதி உள்ளார்.

இக்குறு நாவலானது மராட்டிய சத்ரபதி சிவாஜியை சைபுன்னிஷா சந்தித்தார் என்ற ஒரு சிறு குறிப்பு அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இந்த சைபுன்னிஷா என்ற மக்ஃபி ஒரு சூஃபி கவிஞரும் கூட.தக்காணத்து வெற்றிக்காக வருடக் கணக்கில் தக்காணத்தில் காத்துக் கொண்டிருக்கும் அவுரங்கசீப் தனது அந்திம காலத்தின் இறுதியில் இருக்கிறார். அவர் டில்லியில் இருக்கும் தனது மூத்த மகள் சைபுன்னிஷாவை பார்க்க விரும்புகிறார். ஆனால் ஏதோ ஒரு அரசியல் காரணமாக கருத்து வேறுபாடு கொண்டு டில்லியில் தனது தோட்டத்திலேயே தன்னைத்தானே சிறை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் சைபுன்னிஷா.  இந்த நாவலானது சைபுன்னிஷா,  அவுரங்கசீப், ஜீனத் மற்றும் சிவாஜி ஆகியோரின் பார்வையில் வருகிறது.

மக்ஃபி-3 என்ற அத்தியாயத்தில் ஜீனத் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் மக்ஃபியை(சைபுன்னிஷா) விட ஜீனத்தின் விசாலமான தெளிந்த ஒரு பார்வையை ஜீனத்திற்கு கொடுத்திருக்கிறார் ஆசிரியர் அவர்கள். மேலும் அவுரங்கசீப் தரப்பு நியாயத்தை ஜீனத் தனது அக்கா சைபுன்னிஷாவிற்கு பட்டியல் போட்டு காண்பிக்கிறார். இந்த அத்தியாயத்தை வாசகர்கள் படிக்காமல் விட்டு விடக்கூடாது.

இக்குறுநாவலில் உள்ள சைபுன்னிஷாவின் கவிதைகள் அவளின் ஏக்கங்களை, வலியை மற்றும் மனக்குமுறல்களை சுட்டிக்காட்டுகிறது.

இக்கதையில் சைபுன்னிஷாவிற்கு அவுரங்கசீப் ஏன், எதற்காக தண்டனை கொடுத்தார் என்று ஏதாவது ஒரு வரியில் சொல்லி இருந்தால் வாசகர்களுக்கு புரிந்திருக்கும்.(ஒருவேளை சிவாஜியை தப்பிக்க விட்டதற்கான தண்டனையா?). மேலும் இந்நாவலில் சத்ரபதி சிவாஜியும் சைபுன்னிஷாவும் ஒருவருக்கொருவர் விரும்பியது போல் படைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஜீனத்தும் சிவாஜியின் மகனான சம்பாஜியை விரும்பியது போல் படைக்கப்பட்டிருக்கிறது இது இந்த குறுநாவலில் எனக்கு முரண்பாடாக தெரிகிறது.

"அறிவார்ந்த" சைபுன்னிஷா மற்றும் கவிதா(இரண்டாம் பாகம்) ஆகியோர் இந்த உலகத்தில்  இன்னும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எப்படி இருப்பினும் இன்றைய காலத்திலும் அவர்கள் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த சமூகம் அவர்களை மீண்டும் தலை எடுக்காதவாறு சுட்டுக்கொன்றே இருக்கிறது. இது பெண்களுக்கும் ஏற்படும் சாபக்கேடு. இரண்டாவது கதை கர்நாடகா கவிஞர் எம்.எம்.கல்புர்கியை ஞாபகப்படுத்துகிறது.

நாவில் பிடித்த சில வரிகள்:

சைபுன்னிஷா பக்கம் நெருங்கி வர வர ஜீனத்துக்கு ஒன்று மட்டும் புரிய ஆரம்பித்தது. அவள்
ரொம்பவும் தூரமாக இருக்கிறாள். தொலைவுகளைக் கடப்பதும் அவளைத் தொடுவதும் இனி
எவருக்கும் சாத்தியமில்லை என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்க, தூரத்தைக்
கடக்க முடியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.


உனக்கு இளவரசியாக இருந்துக்கொண்டே ஏழைகளின் குடிசையில் இளைப்பாற வேண்டும்.


ஆலம்கீர் பேரரசின் கவிதை ரோஜாவே, கவிதைகள் எழுதுவது மட்டுமே போராட்டமல்ல.
கவிதைகள் எந்த நியாயத்தையும் எழுதியவருக்கும் வழங்கியதாக வரலாறு இல்லை.


தன் புருஷன் செத்துப் போயிட்டா மனைவி உடன்கட்டை ஏறித்தான் ஆகவேண்டும் என்ற
ராஜபுத்திரர்களின் பழக்கத்தை பாவா உடைச்சாரே, இனி, மொகலாய சாம்ராஜ்யத்தில்
உடன்கட்டை சட்டப்படி குற்றம் என்று அறிவித்தாரே, அதனால் ஆத்திரப்பட்ட மதவாதிகள்
பாதுஷா ஒரு மதவெறியன் என்று பரப்புரை செய்த அரசியல் உனக்குப் புரியவில்லை.


எல்லா காதலும் மரணத்தில் தான் வாழும் என்றால் அந்தக் காதலை எப்படிக் கொண்டாடுவது?