அரூப நர்த்தனம்
அரூப நர்த்தனம் - வசந்தகுமரன்

அரூப நர்த்தனம் - வசந்தகுமரன்

30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் கவிதை உலகில் கவிஞராக உலா வருபவர் கோ.வசந்தகுமார் அவர்கள். இத்தொகுப்பு இவருடைய ஏழாவது படைப்பாகும். இப்புத்தகத்தின் பெயருக்கு ஏற்றாற் போலவே இதிலுள்ள கவிதைகளில் சொற்கள் அனைத்தும் அரூப நர்த்தனம் புரிகின்றன. அழுத்தமான கருத்துக்களை பதிவிட்டதோடல்லாமல் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு.

கோ.வசந்தகுமார் அவர்கள் தேநீர் விரும்பியாக இருப்பார் என்று நினைக்கிறேன். தேநீர் பற்றி இவர் எழுதி இருக்கும் கவிதைகள் அனைத்திலும் தேநீரின் மனம் சொட்டுகிறது. ஏனெனில் நானும் ஒரு தேநீர் விரும்பியே.

இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கவிதைகள்:

தோற்றே போகும்
பொய் சொல்லத்
தெரியாதவன்
காதல்.

இவ்வாறு காதல் பற்றிய உண்மையை உடைத்துள்ளார் என்றே கூறலாம்.

இறந்தவர்கள் தான்
இரங்கல் தெரிவிக்க வேண்டும்
வாழ்கிறவர்களுக்கு.

என்று வாழ்க்கையின் சூட்சுமத்தை நகைச்சுவை உணர்வோடு எடுத்துரைக்கும் இடம் சிறப்பு.

எழுதிய கவிதையிலிருந்து
வெளியேறிவிடுகிறான் கவிஞன்
உள்ளே நுழைகிறான் வாசகன்.

இவ்வாறு கவிஞனுக்கும் வாசகனுக்குமான உறவை வலுப்பெறச் செய்கிறது இக்கவிதை.

போதி மரத்தில்
தூக்கிட்டுக் கொள்ளத்
துணிந்தவன்
கிளை முறிந்து
புத்தன் மடியில்
விழுந்தான்.

இக்கவிதையை வாசித்த பிறகு அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. வெகு நேரம் என்னை சிந்தனையில் ஆழ்த்தியது. பல கேள்விகள் என்னுள் எழுந்தன. பத்தன் மடியில் விழுந்தவன் என்ன ஆனான்? சாவைத் தேடிச் சென்றவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே! வாய்ப்புகளைத் தேடிச் செல்லும்போது தோல்வியை மட்டுமே சந்தித்தானோ என்னவோ? மரணத்தைத் தேடிச் செல்லும் பொழுது நல்ல வாய்ப்பை கொடுத்துவிட்டார் கடவுள். யாருக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு! இவ்வறெல்லாம் தோன்றியது.

பூக்களின்
உயரம் வரைதான்
வண்ணத்துப் பூச்சிகளின்
ஆகாயம்.

இனி வண்ணத்துப்பூச்சிகளைப் பார்த்தாலே இவரின் கவிதைகளே நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு பட்டாம்பூச்சியை மையப்படுத்தி கவிதைகளை வடித்துள்ளார்.