வெள்ளை நிறத்தில் ஒரு காதல்
வெள்ளை நிறத்தில் ஒரு காதல் - தமிழ்மகன்

வெள்ளை நிறத்தில் ஒரு காதல் - தமிழ்மகன்

1984 ஆம் ஆண்டு சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்ட இக்காதல் புதினத்தில், காதலை வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர். இதில் முக்கிய கதாபாத்திரமாக வரும் பாரதி என்ற பெண் வாசிப்பை நேசிக்கும் பெண்ணாக தடம் பதித்திருக்கிறார். பொறுமை, அறிவு, துணிச்சல், நிதானம் ஆகிய நற்பண்புகளைக் கொண்டு மகாகவியின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார் என்றே கூறலாம்.

கதையின் நாயகனாக வரும் மாதவன், பாரதியின் மேல் தனக்கிருப்பது காதலா? நட்பா? என்ற குழப்பத்தில் இருக்க, இறுதியில் இதனை நிதானமாக புரிய வைக்கிறார் பாரதி. தெளிவு பெற்ற பின் இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிய இந்நாவல் வாசிப்பவர்களையும் கலங்க வைக்கிறார் தமிழ்மகன் அவர்கள்.

பூங்கா, கடற்கரை, திரையரங்கம், ஏன் கோயில்களில் கூட காதலர்கள் வலம் வந்து கொண்டிருக்க, நூலகத்தில் உலா வரும் இவர்களின் காதல் புனிதமானதே!. ஒரு வேளை கவிதா என்ற பெண் உள்நுழையாமல் இருந்திருந்தால் மாதவன்-பாரதி ஆகிய இருவரும் சேர்ந்திருப்பார்களோ? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

வறுமையில் வாடும் ஒரு இளைஞனுக்கு வாசிப்புதான் தீனி போடுகிறது என கதை தொடங்கும்போதே இந்நாவல் சிறப்படைகிறது. இடையிடையே வரும் கவிதைகள் மனம் கவர்கின்றன. இனிமேல் கன்னிமார நூலகத்திற்கு செல்லும்போதெல்லாம் இந்நூல்தான் நினைவுக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

காதலுக்கு நிறம் கொடுத்து இப்புதினத்தை மெருகேற்றியிருக்கிறார் ஆசிரியர். வெள்ளை நிறத்தில் ஒரு காதல்! வெள்ளை மனம் படைத்த பாரதி! பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கும் தமிழ்மகன் அவர்கள் மென்மேலும் பல படைப்புகளை உருவாக்க வாழ்த்துகள்.