காஞ்சிக் கதிரவன் - கோவி.மணிசேகரன்

காஞ்சிக் கதிரவன் - கோவி.மணிசேகரன்

இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன் அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்த "காஞ்சிக் கதிரவன்" என்ற இந்த வரலாற்றுப் புதினம் காஞ்சி மாநகரை மையமாகக் கொண்டு வந்துள்ளது. காஞ்சி மாநகரை ஆட்சி செய்த பல்லவர்களுக்கும் வாதாபியை ஆட்சி செய்த சாளுக்கியர்களுக்கும் இடையேயான பகையே இந்த நாவலின் கதை. கதையின் நாயகனான பல்லவ இளவரசன் "மகேந்திரவர்மன்" வீரத்திலும் விவேகத்திலும் மட்டுமல்லாது இசை, ஓவியம் மற்றும் பல்வேறு வேதங்களையும் கற்று சகலகலாவல்லவனாகவும் மிகச் சிறந்த கலாரசிகனாகவும் வலம் வருகிறான்.

"அஜந்தா" என்பவள் கற்பனை கதாபாத்திரமாகவே இருந்தாலும், கதையின் முக்கியமான அங்கமாக பங்கேற்கிறாள். வீரம், கம்பீரம், சாதுரியம், கலைத்திறன், தர்மம், காதல், அன்பு, நட்பு, இராஜதந்திரம், சூழ்ச்சி, துரோகம் ஆகிய அனைத்தையும் இப்புதினத்தில் காண முடிகிறது.

கதையின் நடுவே வரும் அஜந்தா குகை மற்றும் பேய்க்கணவாய் ஆகிய இடங்களை விவரிக்கும் விதம் சிறப்பு. படிக்கும்போதே காட்சிகள் யாவும் கண்முன் வந்து நிற்பது போல் எழுதியிருக்கிறார் ஆசிரியர். வரலாற்றுப் புதினம் படிக்கும்போது எல்லாம் "தமிழ் இவ்வளவு அழகானதா" என்றே வியக்கிறேன்.

காஞ்சி மாநகரை அடைய வாதபியின் வருங்கால மன்னனான புலிகேசியும் அவனது தம்பி விஷ்ணுவர்தனும் திட்டம் போடுகிற வேளையில் எதிர்பாராத விதமாக மகேந்திரவர்மனை போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபரை காண்கிறார்கள். அடுத்த கட்டமாக, போலி மகேந்திரவர்மனை உருவாக்குகிறார்கள். இந்த இடத்தில் கதை வேகம் எடுக்கிறது. இறுதியில் போலி மகேந்திரவர்மன் எப்படி காஞ்சியில் நுழைந்தான்? புலிகேசியின் திட்டம் நிறைவேறியதா? அல்லது போலி மகேந்திரவர்மன் மாட்டிக்கொண்டானா? என்பதே மீதிக் கதை.

No of users in online: 136