பராந்தகன் மகள் - கலைமாமணி விக்கிரமன்

பராந்தகன் மகள் - கலைமாமணி விக்கிரமன்

கலைமாமணி விக்கிரமன் அவர்களால் எழுதப்பட்ட சரித்திர புதினம் "பராந்தகன் மகள்". சோழர்களின் பெருமையை பறைசாற்றும் மற்றுமொரு நாவல். "பராந்தக சோழ"ரையும் அவரது வாரிசுகளையும் மையமாகக் கொண்ட கதை. மன்னனின் செல்ல மகளாக "வீரமாதேவி", கதை முழுவதும் வருவதால் இப்புத்தகத்தின் தலைப்பை "பராந்தகன் மகள்" என்று இந்நூலின் ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார் என்று நினைக்கிறேன். சோழ மன்னனின் மூத்த மகனாக, அடுத்ததாக நாட்டை ஆளப்போகும் இளவரசனாக "இராசாதித்தன்" வருகிறார். இராசாதித்தனின் உயிர் நண்பராக வரும் சேர நாட்டின் வீரன் "வெள்ளங்குமரன்", "பொன்னியின் செல்வன்" புதினத்தில் வரும் "வந்தியத்தேவனை" நினைவூட்டுகிறான்.

நண்பன் வெள்ளங்குமரனும் தன் இளைய தங்கை "அநுபமா"வும் ஒருவருக்கொருவர் நேசித்து வரும் செய்தியறிந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறான் இராசாதித்தன்.

ஈழத்தையும், மதுரை மண்ணையும் வென்று வெற்றிக் களிப்புடன் தாயகம் திரும்பும் பராந்தக சோழருக்கு, தன் செல்ல மகளான வீரமாதேவியின் வளர்ச்சி சில நாள்களுக்குள்ளே அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டது போல் தோன்றியது. பிறககென்ன, மகளின் கல்யாணப் பேச்சுதான். சோழ நாட்டை சுற்றியுள்ள சிற்றரசர்கள் அனைவரும் சம்பந்தம் வைத்துக்கொள்ளத் துடித்தனர். சோழ மன்னனின் வலக்கரமாக விளங்கும் பழுவேட்டரையரின் எண்ணமும் அவ்வாறாகவே இருந்தது. அப்போதுதான் இராட்டிரகூட மன்னனாக கோவிந்தன் கதைக்குள் நுழைகிறான்.

பெண்கள் விஷயத்தில் பலவீனமான ஆணாக வரும் மன்னன் கோவிந்தனுக்கு சோழ இளவரசியைப் பற்றி தெரியவர மாறுவேடம் பூண்டு தன் ஆலோசகர்கள் சிலருடன் சோழ தேசம் செல்கிறான். இளவரசியைக் காணத் துடிக்கிறான். வேந்தன் கோவிந்தனும் அழகில் குறைந்தவன் அல்ல. ஆகையால், முதல் சந்திப்பிலேயே வீரமாதேவியும், கோவிந்தனும் ஒருவருக்கொருவர் விரும்புகின்றனர். இவர்களின் காதல் விஷயம் பராந்தக சோழருக்கு தெரிய வருகிறது.

மகளின் ஆசையை நிறைவேற்ற எண்ணி சிற்றரசர்கள் அனைவரின் எதிர்ப்பைபும் மீறி, திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடிக்கிறார் மன்னர். இங்கே தான் கதை சூடு பிடிக்கிறது.

மணம்முடித்த தம்பதியினர் இருவரும் இராட்டிரகூடம் சென்ற பிறகு நிலைமை என்னவானது? அநுபமா மற்றும் வெள்ளங்குமரனின் காதல் நிறைவேறியதா?. வீரமாதேவியின் திருமணத்திற்கு பிறகு சுற்றிலும் பகையை சம்பாதித்த சோழ மன்னன் பராந்தகனின் நிலை என்ன? இதுவே மீதிக்கதை.

இந்நாவலைப் படிப்பதற்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. அடுத்தது என்ன? என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக எழுதி உள்ளார் நூலின் ஆசிரியர் கலைமாமணி விக்கிரமன் அவர்கள்.

No of users in online: 77