ஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்- விக்கிரமன்

ஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்- விக்கிரமன்

"ஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்" - என்னும் இக்கதை 88 பக்கங்களை கொண்ட ஒரு சரித்திர குறும் புதினம். இக்கதையில் சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் போசள நாட்டு அரசகுமாரன் வீரநரசிம்மன் ஆகியோர் கதை மாந்தர்களாக வருகிறார்கள்.

பாண்டிய நாட்டின் அரசன் மாறவர்மன் சுந்தரபாண்டியன், "சோழர்கள் எந்தப் புனிதமான பாண்டிய மகுடத்திற்காகவும் பாண்டிய வீர வாளுக்காகவும்  போரிட்டார்களோ அந்த பாண்டிய மகுடத்தை சோழர்களிடம் போரிட்டு வென்று அவர்கள் நாட்டிலேயே வைத்து சூடிக்கொள்ள" ஆசைப்படுகிறான்.  எனவே சோழ நாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தங்களை செய்கிறான். மேலும் சிதம்பரம் ஆனித் திருமஞ்சன விழாவில் சோழ மன்னன் இராசராசனின் மகள் சந்திரவதனாவை பார்த்ததும் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் திட்டத்தை மிக வேகமாக செயலாற்றுகிறான்.

சோழ நாட்டில் "குலோத்துங்கச் சோழன்" தான் இருக்கும் பொழுதே இராசராசனை தனது அடுத்த வாரிசு என்று உறுதிப்படுத்தி இளவரசானாகப் பட்டம் சூட்டுகிறான். குலோத்துங்கச் சோழன் இறந்த பிறகு இராசராசன் அரியணையில் அமர்கிறான். முடிசூடும் விழா எதிர்பார்த்தபடி கோலாகலமாக அமையவில்லை. காரணம் இராசராசனின் மாமனார் "மகத நாட்டரசன் வாண கோவரையர்" பட்டமேற்பு விழாவுக்கு வராதது, "சேதி நாட்டுக் குறுநில மன்னர் சேதிராயன்"(மகுடாபிஷேக நாளை முன்பாகவே தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு), "சேந்தமங்கலத்துக் காடவராயர்"(சோழ மகளை மணம் புரிந்து கொள்ள வேண்டி ஓலை அனுப்பியதற்குச் சோழ அரசன் இதுவரை மறுமொழி கூறாதது), மற்றும் "கோப்பெருஞ்சிங்கன்"(முறை மாப்பிள்ளை)  ஆகியோர் விழா நாளன்று கங்கைகொண்ட சோழபுரத்திற்க்குத் தாமதமாகவே முகூர்த்த நேரம் முடியும் சமயத்தில் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் இராசராசனோ நெல்லூரில் தனது நண்பன் விஜயகண்ட கோபாலனின் மகனுக்கு "சந்திரவதனா"வை மணம் புரிவிக்க  விரும்புகிறான். எனவே ஓலையுடன் தனது மகளின் சித்திரத்தை வரைந்து நண்பனுக்கு அனுப்ப எண்ணி ஓவியன் ஒருவனை அமர்த்துகிறான்.

இந்நிலையில் ஓவியத்துடன் ஓவியர் காணாமல் போகிறான். இராசராசன் மன வேதனை அடைகிறான். இந்நிலையில் பாண்டியர் படைகள் உறையூரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. பாண்டியர் படைகள் புறப்பட்ட மூன்றாவது நாள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அந்த செய்தி எட்டுகிறது. இராசராசன் அதனை ஓர் அவசர செய்தியாகவோ, முக்கியமானதாகவோ கருதாமல், புரட்சி மனப்பான்மை கொண்ட சில பாண்டிய வீரர்களின் செயலாக இருக்கும் என அமைதியாக இருக்கிறான்.

மேலும் இராசராசன் தன் மகளிடம் அவளை வரைந்த ஓவியனைப் பற்றி பேசும் பொழுது, ஓவியராக வந்தவன் "போசள நாட்டு இளவரசன் வீரநரசிம்மன்" என்பதை அவள் கொடுத்த முத்திரை மோதிரம் மூலம் கண்டு கொள்கிறான். ஆனால் இராசராசன் தனது மகளை தெலுங்கு நாட்டுச் சோழர் விஜயகண்ட கோபாலன் குடும்பத்திற்கு மருமகளாக அனுப்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் சந்திரவதனா ஓவியனை(போசள நாட்டு இளவரசன் வீரநரசிம்மன்) திருமணம் செய்ய நினைக்கிறாள். மன்னர் மறுக்கிறார். தனது வேதனையை இணை பிரியாத தோழி கல்யாணியிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறாள். ஆனால் தோழி அவளது சொந்த ஊரில் இருப்பதால் அவளைத் தேடி யாருக்கும் தெரியாமல் அரண்மனை விட்டு வெளியேறுகிறாள். செல்லும் வழியில் கோப்பெருஞ்சிங்கனின் ஆட்கள் அவளை தூக்கி செல்கிறார்கள்.

இதற்கிடையில் பாண்டியப் படைகள் தஞ்சையை வீழ்த்துகிறது. அதே நேரத்தில், சோழ நாட்டில் போசள இளவரசர் இளவரசியை கோப்பெருஞ்சிங்கனின் ஆட்களிடமிருந்து காப்பாற்றி அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார். இச்சூழ்நிலையில் பாண்டியப் படைகள் கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்று செய்தி மக்களிடம் பரவி அரண்மனை வாயிலை  நோக்கி மக்கள் வர ஆரம்பிக்கின்றனர். இராசராசன் அமைச்சர் குழுவை இரவு வேளையில் கூட்ட கடைசி நொடியில் அமைச்சர்கள் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் திகைக்கின்றனர். மேலும் இராசராசன் பாண்டியருடன் சமாதானம் செய்து கொள்வதையும், போசள இளவரசன் உதவியையும் கேட்க மறுக்கிறான்.

இறுதியில் பாண்டிய வீரர்கள் கங்காபுரியில் நுழைந்து தன்னை சிறை பிடிக்க வருவதை அறிந்து மனைவி மகளுடன் சுரங்கப்பாதை வழியே தப்பிச் செல்கிறான். சோழ மன்னன் தப்பி ஓடி விட்டதை அறிந்து மக்கள் அரசனின் கையாலாகாத்தனத்தைச்  சாடுகின்றனர். இதற்கிடையில் சோழ  இளவரசி சந்திரவதனா சிறைப் பிடிக்கப்படுகிறாள். சிறை பிடிக்கப்பட்ட சந்திரவதனா பாண்டியனை மணக்க மறுக்கிறாள். சோழ மன்னனும் சுந்தரபாண்டியனிடம் வந்து அடிபணிகிறான்.

ஆனால் சுந்தர பாண்டியன், "ஒரு வீரன் தனக்கு சமமாக உள்ள மற்றொரு வீரனுடன் தான் மோத வேண்டும். அந்த மோதலில் கிடைக்கும் வெற்றி தோல்வியைத்தான் மதிப்பிட வேண்டும்" என்று கூறி இராசராசன், அவன் மனைவி மற்றும் மகள் மூவரையும் விடுவிக்கிறான்.

இந்த நாவலின் மூலம் சோழ மன்னன் இராசராசன் மீது ஒரு ஈர்ப்போ, ஒரு அரசனுக்குள்ள குணாதிசயங்களோ இல்லாதவாறு கலைமாமணி விக்கிரமன் படைத்துள்ளார். ஒருவேளை தமிழகத்தில் மூவேந்தர்களின் அரசாட்சி  இராசராசனைப் போல் உள்ள மன்னர்களால் முடிவுக்கு வந்ததோ என்னவோ?.

No of users in online: 75