பெருவலி
பெருவலி - சுகுமாரன்

பெருவலி - சுகுமாரன்

ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பும் ஆவலும் குறையா வண்ணம் எழுதியிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. முகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் ஷாஜகான் மற்றும் அவருடைய வாரிசுகளைப் பற்றிய முக்கிய நிகழ்வுகள் இடம் பெறும் வகையில் இப்புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரமாக மையம் கொண்டிருப்பது ஷாஜகானின் அன்பிற்குரிய மகளான ஜஹனாரா பேகம்.

அப்பெண்ணிற்கு அழகு, அறிவு, ஆடைகள், அணிகலன்கள், மாளிகைகள், செல்வாக்கு, விதவிதமான உணவு வகைகள் என ஆடம்பர வாழ்க்கைக்கான அனைத்தும் இருந்தும் தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு பறவை போல் உணர்கிறாள். ஆம்! பேகம் சாஹிபாவான ஜஹனாரா பேகம், கல்வியறிவு, மார்க்க அறிவு, நடனம், எழுத்தறிவு, ஏன் தன் தந்தைக்கே அரசியல் ஆலோசனைகள் கூறும் நுண்ணறிவைப் பெற்றிருந்தாலும், பெண் என்ற ஒரு காரணத்தினால் இவையனைத்தையும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் தன்னிடம் இல்லையென்பதைப் பெருவலியுடன் உணர்கிறாள்.

இந்நூலில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமான ஔரங்கசீப், தன் தந்தைக்கு அடுத்தபடியாக மகடம் சூட்டவிருக்கும் தாரா ஷூக்கோவை, தன் சூழ்ச்சியாலும் நம்பிக்கைத் துரோகத்தாலும் வீழ்த்தி, முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னனாக அரியாசனத்தில் அமர்கிறார். காதலின் சின்னமான தாஜ்மஹாலைப் பற்றியும், அச்சின்னம் உருவாகக் காரணமான ஷாஜகான்- மும்தாஜ் ஆகியோரும்  இந்நூலின் சில இடங்களில் இடம் பெறுகின்றனர்.

அன்பு, பாசம், காதல், கோபம், வெறுப்பு, நட்பு, துரோகம், சூழ்ச்சி, வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் நிறைந்ததுதான் அரசனின் வாழ்க்கை என்பது உணர முடிகிறது. ஆனாலும், அரியாசனத்தின் மேல்  உள்ள மோகத்தில் தன் உடன் பிறந்த சகோதரர்களை கொல்லத் துணிந்திருக்கும் சம்பவங்கள், வேதனையைத் தருவதாக உள்ளது. இப்புத்தகத்தைப் படித்து முடித்த பின்பும் இதன் பெயரைப் போன்றே என் மனதில் பெருவலியை உணர்கிறேன். இருப்பினும் இதற்கு முன்பும், பின்பும் முகலாயர்களின் ஆட்சி காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஆவல் கூடுகிறது.