காற்றில் யாரோ நடக்கிறார்கள்-எஸ்.ரா.

காற்றில் யாரோ நடக்கிறார்கள்-எஸ்.ரா.

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள், "இலக்கியம்", "கலை", "திரைப்படம்", "அனுபவம்", "பொது" என்று தலைப்புகளில் "காற்றில் யாரோ நடக்கிறார்கள்". இந்த ஐந்து தலைப்புகளில் மொத்தம் 50 கட்டுரைகள் வெளிவந்துள்ளது.

"சம்பத்தும் தஸ்தாவெஸ்கியும்", "கண்ணில் தெரியாத காட்சிகள்", "திரையில் ஓடிய ரயில்" ஆகிய கட்டுரைகளைத் தவிர  வேறு எந்த கட்டுரைகளும் எங்கு, எப்பொழுது, எந்த பத்திரிகையில், கூட்டத்தில் அல்லது  இணையத்தில் எழுதப்பட்டது என்ற  விபரம் சொல்லப்படவில்லை.

இலக்கியம் பகுதியில் புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றி தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார் ஆசிரியர் எஸ் ராமகிருஷ்ணன். புத்தகங்கள் பகுதியில் வங்காளத்தில் போதி சத்வ மைத்ரேய எழுதிய Jhinuker Peter Mukto நாவல் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த நாவல் தமிழக மக்களின் வாழ்வை குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள பெர்னாந்தோ பிரிவு மீனவர்கள் வாழ்க்கை, கும்பகோணத்தில் வாழ்ந்த தேவதாசிகள் வாழ்க்கை  மற்றும் விருதுநகரின் சூழல் பற்றி சத்வ மைத்ரேய எழுதி உள்ளதாகவும் இந்த நாவல் "சிப்பியின் வயிற்றில் முத்து" என்று தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு  வெளிவந்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலத்தில் 38 வருடங்களுக்கு முன்பு பி.எச்.டேனியலால் எழுதப்பட்ட ரெட் டீ என்ற நாவல் இரா.முருகவேள் அவர்களின் தமிழாக்கத்தில் "எரியும் பனிக்காடு" என்ற புத்தகமாக வெளிவந்தது. அந்த நாவலை பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த நாவலின் மொத்த சாரமும் வில்லியம் ஜேம்ஸின் கீழ்கண்ட மேற்கோளை சுட்டிக்காட்டி உள்ளார் ஆசிரியர்.
உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான்.

"இதிகாசங்களை வாசிப்பது எப்படி?" என்ற பகுதியில் இதிகாசங்களை வாசிப்பதற்கான பத்து அடிப்படை விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். மேலும் இதிகாசம் படிக்க வேண்டிய தேவை என்ன? என்ற கேள்விக்கு, "நமது அன்றாட வாசிப்பு குளத்தில் நீந்துவது போன்றது; இதிகாசம் கடலில் நீந்தும் அனுபவம்" என்கிறார்.

மகாபாரதம் மற்றும் கிரேக்க இதிகாசங்களான ஹோமரின் இலியட், ஓடிசி பற்றியும் அதன் ஒற்றுமை பற்றியும் விவரித்துள்ள ஆசிரியர் மகாபாரதம், "ஆதிபர்வம், சபா பர்வம், ஆரண்ய பர்வம், விராட பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்லிய பர்வம், சப்திக பர்வம், ஸ்ரீபர்வம், சாந்தி பர்வம், அனுசாசன பர்வம், அஸ்வமேதிக பர்வம், ஆச்ர மவாச பர்வம், மௌசால பர்வம், மகாபிரஸ்தானிக் பர்வம், சொர்க்கலோக பர்வம்" என்று 18 பருவங்களாக கிட்டத்தட்ட 15 ஆயிரம் பக்கங்கள் கொண்ட மகாபாரதப் பிரதி 50 வருடங்களுக்கு முன்பாகவே தமிழில் வெளியாகி இருக்கிறது என்று ஒரு ஆச்சரியமான தகவலையும் கொடுத்துள்ளார்.

இதே பகுதியில் மௌனி, நகுலன், சம்பத் தஸ்தாவெஸ்கி, ஐத்மதேவ் ஆகியோர் பற்றியும் எழுதியுள்ள ஆசிரியர் எங்கெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று ஒரு சில இடங்களில் பசியிலும் அவமானத்திலும் சென்று திரும்பியதையும் நண்பர்கள் அறையில் தங்கி இருந்த போது வாங்கி வைத்திருந்த புத்தகங்கள், கையெழுத்து பிரதிகள் குப்பைத்தொட்டிக்கு போனதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"கலை" பகுதியில் தமிழர்களின் இசை, இசைக்கருவிகள், கட்டிடக்கலை மற்றும் கோவில்கள் பற்றி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் திருவாரூர் கோவிலில் 26 வகையான இசைக் கருவிகள் வாசிக்கின்றவர்கள் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்திருக்கிறார்கள் என்றும் ஆழ்வார் திருநகரி கோவிலில் கல்லால் ஆன நாயனம் ஒன்றிருக்கிறது என்றும் தமிழர்களின் இசை கருவிகளான, "பேரிகை, பாடகம், இடக்கை, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடு, தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, துடி, பெரும்பறை, கண்டிகை, டமருகம், தாரணி, படகம், காளம், மேளம், தட்டளி, சங்கு, தாரை, வீணை, யாழ், குழல், கொம்பு, மணி, சகடை, கெண்டை, துடி, துந்துபி, கொடுகட்டி, கொக்கரை, தத்தளகம், தண்டு, சல்லரி கின்னரம் போன்றவை இருந்ததாக வரிசைப்படுத்துகிறார்.

மேலும் 1912 முதல் 1917 வரை தஞ்சையில் ஏழு இசை மாநாடுகள் நடத்திய "ஆபிரகாம் பண்டித"ரின் "கருணாமிர்தசாகரம்" மற்றும் இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் விபுலாநந்த அடிகள் சிலப்பதிகார இசையின் நுட்பத்தினையும் பொருளினையும் ஆராய்ந்து எழுதிய "யாழ் நூல்" என்ற புத்தகத்தையும் இசையில் ஆர்வம் உள்ளவர்கள்  வாசிக்க வேண்டிய இரண்டு முக்கிய நூல்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

மேற்குலகில் புத்தம் புதிய இசைக்கருவி ஒன்றை வாங்குவதற்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள். நாமோ நம்மிடம் உள்ள உயர் இசைக்கருவிகளை மியூசியப் பொருட்களாக மாற்றிக் கொண்டு வருகிறோம் என்பது அறிந்தே செய்யும் தவறு என்றே தோன்றுகிறது என்று வருத்தப்படுகிறார்.

புதுக்கோட்டையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடும் பாலூரில் வேலூர் மரபின் மிச்சமாக ஆயிரம் வருட பழமையான மூவர் கோவிலை பற்றியும் மதுரைக்கு அருகே உள்ள இடைக்காட்டூர் ஊரில் உள்ள புனித இருதயநாதர் தேவாலயத்தைப் பற்றியும் சிலாகிக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள். மேலும் இந்த இடைக்காட்டூர் தேவாலயம் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற நார்ட்டர்டாம் தேவாலயத்தைப் போன்று அதே வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த தேவாலயத்தை மதுரை கட்டிடக் கலைஞர்கள் எவ்விதமான அளவுகளும் இன்றி வெறும் கோட்டோவியங்களைப் பார்த்து அதுபோலவே புதிதாக ஒரு தேவாலயத்தை உருவாக்கிய கலைஞர்கள் என்றும் அந்த கலை நுட்பம் இன்று இல்லை என்றும் ஆதங்கப்படுகிறார்.

நடிகர் சந்திரபாபு மற்றும் அவருடைய வரலாறு அவர் நடித்த படங்கள், "வைக்கம் முகமது பஷீர்" பற்றிய ஆவணப்படம், கே.பாலசந்தரின் திரைப்படங்கள், இயக்குனர் பாலாஜி சக்திவேலின் திரைப்படங்கள், ஹிந்தி திரைப்படங்கள், ரயிலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள், வெயில் படம், மலையாளத் திரைப்படம் மற்றும் "ஜெயகாந்தன்" திரைப்படங்களைப் பற்றி திரைப்படம் பகுதியில் மொத்தம் 17 கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஹிர்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர் திரைப்படம் "சரித்திரமும் இல்லை; சினிமாவும் இல்லை, தானிஷ்க் நகைகளுக்கு எடுக்கப்பட்ட விளம்பர படம்" என்றும் ஷோலே திரைப்படம் நிறைய படங்களில் பாதிப்பு உருவானது என்றும் கூறுகிறார்.

பள்ளி ஆண்டு விழாவில் நிகழும் சம்பிரதாயங்கள், பொதுவெளியில் ஏற்படும் அவமானங்கள், துரத்தல்கள், கேலிப் பேச்சுகள், எதைப்பற்றியும் கவலையின்றி பேசிப் பேசி அறிந்து கொண்ட விஷயங்கள், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கவிஞர் தேவதச்சனை சந்தித்து ரயில் நிலையத்தில் உரையாடிய நிகழ்வுகள் என தனது அனுபவங்களை "அனுபவம்" என்ற பகுதியில் சொல்லி உள்ளார் எஸ.ரா அவர்கள்.

பின்னிரவில் நாம் பயணம் செய்யும்போது உறங்கி விடுவது நம் எல்லோருடைய வழக்கம். ஆனால் எஸ்ரா அவர்கள் மிக நுட்பமான சில விஷயங்களை "காற்றில் யாரோ நடக்கிறார்கள்" என்ற கட்டுரையில் பகிர்ந்துள்ளார். அப்போதைய கிராமங்களில் மக்கள் தெருவில் பாய் போட்டு உறங்குவதும், கடைகளின் ஓரத்திலோ அல்லது சாலையோரத்திலோ உறங்குவதும், அதிகாலையில் எழுந்து பால் கறப்பது, வீட்டுப் பணிகள் செய்வது என நடக்கும். ஆனால் தற்போதைய கிராமங்களில் விவசாயம் சார்ந்த வாழ்க்கை பெரிதும் கைவிடப்பட்ட சூழலும், பகலிரவுகளும் முழுமையாக டிவி பார்ப்பதற்கு ஒப்படைக்கப்பட்டதாலும் கிராமங்களின் இயல்பான பழக்கங்கள் மாறிப் போய் விட்டன என்று கூறுகிறார். மேலும் அக்காலங்களில் மாட்டுச்சாணி தெளிக்காத தெருக்களே கிடையாது என்றும் ஆனால் இன்று ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைகளும் தூக்கி எறியப்பட்ட வாட்டர் பாட்டில்களும் தவிர வேறு ஏதும் இல்லை என்றும் கூறுகிறார்.

பின் நிலவு காலங்களில் உறங்குகின்றவர்கள் மீது பனிபோல வெண்ணிறமான வெளிச்சம் பொழிந்து கொண்டிருக்கும். "காற்றின் வேகம் மாறிக்கொண்டே இருப்பதால் யாரோ நடமாடுவது போன்ற சிறு சப்தம் எழும்பியபடி இருக்கும்" என்று தன் பால்ய வயதில் வெட்ட வெளியில் உறங்கிய அனுபவத்தையும் கூறியுள்ளார் ஆசிரியர்.

கடிதங்கள் மறைந்து செல்போன் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது, காந்திக்கும் அவருடைய கடகாரத்துக்கும் உள்ள பிணைப்பு, எளிய மனிதர்கள் கற்றுத் தந்தவை என சில கட்டுரைகளை பொதுப்பகுதியில் கொடுத்துள்ளார்.

நூலின் இறுதியில் சில ஆங்கில புத்தகங்கள் மற்றும் இணையதளங்களின் பெயர்களை கொடுத்ததோடு 318 பக்கங்களில் வாசகர்களுக்கு பல்வேறு பரந்துபட்ட கட்டுரைகளை கொடுத்துள்ளார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள்.

No of users in online: 137