தர்காக்களும் இந்து - இசுலாமிய ஒற்றுமையும்

தர்காக்களும் இந்து - இசுலாமிய ஒற்றுமையும்

நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசையில் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய "தர்காக்களும் இந்து - இசுலாமிய ஒற்றுமையும்" என்ற நூல் 30 பக்க அளவில் சிறு வெளியீடாக வந்துள்ளது.

இந்து - இஸ்லாமிய உறவு  அல்லது ஒற்றுமை என்பது தமிழகத்தில் பன்னெடுங்காலமாக  தொடர்ச்சியாக வருவது. இந்த ஒற்றுமைக்கு இந்துக்கள் இஸ்லாமியர்களின் "தர்கா"க்களை நாடிச் செல்வதும், இஸ்லாமியர்கள் இந்துக்களின் கோவில்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு விபூதி அல்லது கைகளில் கயிறு கட்டிக் கொள்வதும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இச்சிறு புத்தகம் இஸ்லாமியர்களின் தர்காவிற்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிணைப்பைக் கூறுகிறது.

ஆதியிலிருந்து மனிதன் தன் பிரச்சனைகளை அல்லது மற்றவர்களிடம் சொல்ல முடியாத, பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி அதனுடன் உரையாட ஆரம்பிக்கிறான். ஆசிரியர் கூறுவது போல, சைவ சமயத்தில் நாயன்மார்களும் வைணவ சமயத்தில் ஆழ்வார்களும், கிறித்துவ சமயத்தில் புனிதர்களும், இஸ்லாமிய சமயத்தில் அவுலியாக்கள் அல்லது வலிமார்கள் என்று அழைக்கப்படும் இறையருள் பெற்ற அடியார்களிடம் தன் பிரச்சினைகளை நேரடியாக முறையிட்டு வழிபடுகின்றனர்.

"நெருங்கியவர்", "நண்பர்" என்ற பொருளைத் தரும் 'வலி' என்ற அரபுச் சொல்லின் பன்மையே 'அவுலியா' அல்லது 'வலிமார்கள்'. இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற பொருளிலேயே அவுலியா என்ற சொல் வழங்கி வருகிறது எனக் கூறும் ஆசிரியர் இத்தகைய வலிமார்களின் அடக்கத் தலமே "தர்கா" எனப்படுகிறது என்று கூறுகிறார்.

தர்காக்களுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் திரளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் அவுலியாக்களை நாட்டார் தெய்வங்களுள் ஒன்றாகக் கருதி வழிபடுகின்றனர் என்று கூறுகிறார் ஆசிரியர்.

இந்துக்களுக்கும் தர்காக்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பு மற்றும் உறவை கீழ்க்கண்ட நிகழ்வுகளை உதாரணமாக சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்.

1. "முகமது நபியின் வரலாற்றைக் கூறும் "சீறாப்புராணம்" என்ற காப்பியத்தை எழுதிய உமறுப் புலவருக்கு அவரது சொந்த ஊரான எட்டையாபுரத்தில் பிச்சையா கோனார் என்பவர் தனக்கு குழந்தை பேறு கிடைத்ததால் அதற்கு நன்றிக் கடனாக அவருக்கு தர்காவை கட்டிக் கொடுத்துள்ளார் என்றும் இத்தர்க்காவைச் சுற்றி வாழும் கோனார் மற்றும் மறவர் சாதியினர் தன் குழந்தைகளுக்கு உமறுக் கோனார், உமறுத் தேவர், உமறம்மாள் என்ற பெயர்களை சூட்டியுள்ளனர்".

2. தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவிற்கு சந்தனக் கூடை சுமந்து செல்ல வண்டியும் மாடும் இலவசமாக வழங்குவதைச் சில இந்து மற்றும் கத்தோலிக்கக் குடும்பங்கள் பரம்பரை வழக்கமாகக் கொண்டுள்ளன.

3. அருப்புக்கோட்டையில் உள்ள தர்காவிற்கு திரு.பள்ளிவாசல் சேதுராம நாயக்கர் என்பவர் வீட்டில் இருந்து தான் சந்தனம் கரைக்கப்பட்டு சந்தனக்கூடு விழாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

4. நாகூர் ஆண்டவரின் சமாதி மீது போர்த்தப்படும் போர்வை சென்னையைச் சேர்ந்த பழனியாண்டிப் பிள்ளை என்னும் வணிகரின் பரம்பரையினரால் ஒவ்வொராண்டும் வழங்கப்படுகிறது.

5. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு அருகில் உள்ள ஏர்வாடி கிராமத்தில் உள்ள சுல்தான் செய்யது இப்ராகிம் தர்காவிற்கு சந்தனக்கூடு குடத்தைக் கொண்டு செல்வதற்கான மரக்கூடு ஆசாரி இனத்தவரும், கூடுகட்ட கயிறு மற்றும் நார் ஆகியன நாடார் இனத்தவரும், கூடு அலங்கரிப்பு ஆதிதிராவிடர் மற்றும் யாதவர் சமுதாயத்தினரும், நெய் பந்தம் பிடிக்கத் தேவைப்படும் துணியை சலவை தொழிலாளர் சமூகத்தினரும் வழங்குகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் இன்னும் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற கந்தூரி விழாக்களை அந்தந்த சமூகத்தினர் செய்து வரும் பங்களிப்பை தெரிவித்துக் கூறியுள்ளார்.இசுலாமிய சமயத்தை மேற்கொண்ட பிராமண சாதியைச் சேர்ந்த சிலரும் அவுலியாக்களாக வாழ்ந்து மறைந்ததாகக் கூறி அந்த பிராமணர் சாதியைச் சேர்ந்தவர்களின் தர்கா எங்கெங்கு உள்ளன என்றும் கூறியுள்ளார்.

தர்காவில் நடைபெறும் "கொடிக்கட்டு ஊர்வலம்", "சந்தனக்கூடு ஊர்வலம்" ஆகியன இந்துக் கோவில் திருவிழாக்களின் போது நிகழும் சப்பர ஊர்வலத்தையும், தேரோட்டத்தையும் நினைவூட்டுகின்றன என்று கூறுகிறார்.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் இசுலாமிய இறையியல் கோட்பாட்டிற்கு முரணானவை என்று இசுலாமிய சமயப பெரியோர்கள் சிலர் கருதுவதாகவும் குறிப்பாக சவுதி அரேபியாவுடன் தொடர்புடைய சில இசுலாமியக் குழுக்கள் வெகுசனத் தன்மை வாய்ந்த தர்கா வழிபாட்டிற்கு எதிராகக் குரலெழுப்பி வருவதாகவும் கூறியுள்ள ஆசிரியர் வேற்று நாட்டுச் சமயமொன்றைத் தழுவும் ஒரு நாட்டு மக்கள் தம் நாட்டுச் சமயப் பண்பாட்டுக் கூறுகளையும் ஓரளவுக்கு அதில் இணைத்து விடுவது இயல்பான ஒன்றாகும் என்றும் தமிழ்நாட்டு தர்காக்களில் நிகழும் வழிபாடுகளிலும், விழாக்களிலும் சமகலப்புப் பண்பாடுப் பேறு இடம்பெற்றுள்ளது என்று கூறுகிறார். 

ஆனால் இதனை மனதில் கொள்ளாது தர்கா வழிபாட்டில் இந்து சமயத்தின் ஊடுருவல் நிகழ்ந்துள்ளதாக இசுலாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள் கருதுகின்றன என்று ஆதங்கப்படுகிறார்.

மேலும் தர்கா வழிபாட்டிற்கு எதிரான கருத்து நிலை இசுலாமியர்களிடையே உருவாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சில இந்து சமய அடிப்படைவாத இயக்கங்களும் இந்துக்கள் தர்காவிற்கு செல்வதையும், காணிக்கை செலுத்துவதையும் நிறுத்தும் முயற்சி ஈடுபட்டுள்ளன. இவ்வாறு இசுலாம், இந்து சமய அடிப்படைவாதிகள் தர்கா வழிபாட்டை ஒழிப்பதில் ஒன்று பட்டுள்ளனர். ஆனால் நடைமுறையில் தமிழ்நாட்டில் இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்குத் தர்காக்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. கடந்த கால வரலாறும் தற்கால நிகழ்வுகளும் இதை உணர்த்தி நிற்கின்றன. எனவே தர்கா வழிபாட்டை முற்றிலும் ஒழிப்பது என்பது தேவைதானா என்பதை இரு மதங்களிலும் உள்ள சமய நல்லிணக்கத்தை வேண்டுபவர்களும் மனிதநேயவாதிகளும் சிந்திக்க வேண்டும் என்று முடிக்கிறார் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள்.

சிறிய புத்தகமாக இருப்பினும் இப்புத்தகம் பலதரப்பட்ட இளைஞர்களை சென்றடைந்தால் மிகச் சிறப்பானதாக தமிழகம் அமையும்.

தமிழ்நாட்டில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்டு வரும் இந்த இணக்கமான உறவை சில அடிப்படை வாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் தேவையற்ற குழப்பங்களை  தன் சுயநலனை கருத்தில் கொண்டு செயலாற்றுவதால் குழப்பங்களே மிஞ்சும். எனவே இதனை இரு பக்கமும் உள்ள இளைஞர்களும் பெரியவர்களும் உணர்ந்து கொண்டு இணக்கமான உறவைப் பேணி பாதுகாத்தால் தமிழ்நாடு என்றுமே அமைதி பூங்காவாகத் திகழும்.

No of users in online: 122