கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் - ஆதிவாசி கவிதைகள் - இந்திரன்

கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் - ஆதிவாசி கவிதைகள் - இந்திரன்

கவிதை உலகில் இளைஞர்கள் முதல் அனுபவம் வாய்ந்தவர்கள் வரை காதலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றபொழுது எங்கோ வாழும் பழங்குடியினர் தனது மண்ணையும், மலையையும், சிறு பறவைகளையும், மரங்களையும், நதிகளையும் மற்றும் தனது மூதாதர்களையும் பாடிக்கொண்டு இருக்கின்றனர். தனக்கு உதவி செய்த அனைத்தையும் தனது பாடலின் மூலம் நன்றி செலுத்துகிறான். இது உலகம் முழுவதும் நடந்தாலும் ஒரு தொகுதியாக, ஒரு புத்தகமாக நான் ஆதிப்பழங்குடியினர் கவிதைகளை படிக்கவும் இல்லை; பார்க்கவும் இல்லை.

ஆனால் இந்திரன் அவர்களை ஏதோ ஒரு கவிதை வசியப்படுத்த அல்லது ஆர்வமடையச் செய்ய நாம் அது போல உள்ள கவிதைகளை அந்த ஆதிப்பழங்குடியினர் கவிதைகளை தமிழுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உந்துதலில் "கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்" என்ற இப்புத்தகத்தை படைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆதி மனிதன் இயற்கையுடன் ஒன்றி காட்டுக்குள் வாழும் பொழுது அவன் அதனுடன் ஒன்றி வாழ்ந்து வருகிறான். எப்பொழுது காட்டை விட்டு வெளியேறி நாகரீகம் என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கி வளர்ச்சி என்ற கட்டத்துக்கு வருகின்றானோ அப்பொழுது அவன் தனக்கு ஆதரவாக இருந்த இயற்கையை சூறையாடுகிறான். அது மட்டுமல்லாமல் இயற்கையை, அந்த காட்டைச் சார்ந்து வாழும் காட்டைப் பாதுகாக்கும் ஆதிப்பழங்குடியினரின் வாழ்க்கையையும் சூறையாடுகிறான். இருப்பினும் அந்த ஆதி பழங்குடியினர் தனக்கு கெடுதல் செய்யும் சக மனிதனை முன்னேறிய கூட்டம் என்று சொல்லக்கூடிய மனிதனை எதிர்க்கிறான்; எதிர்ப்பை பாடலில் காண்பிக்கிறான்.

"கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்" என்ற இந்த கவிதை தொகுப்பு 58 கவிதைகளைக் கொண்டு நான்கு பகுதிகளாக - தொன்மம், வாழ்க்கை, துயரம், போராட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது.

இக்கவிதையின் தொகுப்பின் நாயகர்களாக கெரியா, ஹோ, செளரா, ஜுவான், முண்டா, ஜர்படா, கார்வாலி, தர்கேரா, போண்டா, சவோரா மற்றும் சில மலையினப் பாடல்கள் உள்ளன.

ஒரு சில ஆதிவாசிப் பாடல்களில் அவர்கள் தனது முன்னோர்களை தனது மூதாதையரை அழைத்து தங்களது சிறு படையலை ஏற்கச்சொல்லி பாடுகின்றனர். மூதாதையருக்கு, ஆதிப்பழங்குடியினரின் சிறு படையல் என்பது, ஒரு சிறு மாமிசத் துண்டு, ஒரு பருக்கை அரிசி, ஒரு குவளை அரிசி சாராயம், அல்லது ஒரு கோப்பை அரிசி மது மட்டுமே.

ஆதிவாசிகளின் வாழ்க்கை என்பது அவர்களுடைய நிலத்தைச் சார்ந்தது. அவர்களுக்கும் ஒரு ஆசிரியர் இருக்கிறார். அந்த ஆசிரியர் நிலத்தை உழுவது எப்படி என்றும், விதைப்பு செய்யும் முறை என்னவென்றும், மகசூலை பகிர்ந்து கொள்வது பற்றியும், சடங்குகளை எப்படி செய்வதென்று பற்றியும், நிலத்தின் மீது எப்படி நடந்து கொள்வது என்பது பற்றியும் கூறுகிறார். அவர் வேறு யாருமில்லை; அவர்களது நிலமே அவர்களது ஆசிரியர். அதை நிலம் என்ற தலைப்பில் ஆசிரியர் இந்திரன் மொழிபெயர்த்துள்ளார்.

நமது நிலம்
நமது ஆசிரியர்.

நமது ஆசிரியர் நமக்குச் சொல்கிறார்

நிலத்தை உழுவது எப்படி என்றும்
விதைப்பு செய்யும் முறை என்னவென்றும்
---------------------------------------
---------------------------------------
நமது நிலத்தின் மீது பாடப்படும் பாடல்களைப் பற்றியும்,
நமது அரசு அதிகாரிகளுக்குத் தெரியும்
நமது நிலத்தோடு நமக்குள்ள உறவு.

ஆனாலும்
அவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை.

ஆதிவாசிகளின் பண்பை மற்ற உயிர்களின் மீது கொண்டுள்ள பாசத்தை "அவசரம் கூடாது" என்ற தலைப்பின் கீழ் உள்ள கவிதை மூலம் அறியலாம்.

மைனாவே

நீ நதியில் இறங்கி விட்டாய்
கொஞ்சம் தண்ணீர் குடிப்பதற்காக.

தண்ணீரைக் குடிக்க
நீ ரொம்பவும் அவசரப் படுகிறாய்.

அவசரப்படாதே மைனாவே
முதலில் உன்னை நிலைப் படுத்திக்கொள்.

முதலில்
நதியை முறையாக அணைத்துக் கொள்.
அதன் பிறகு
நீ நீரைப் பருகலாம்.

இன்னொரு கவிதை "துயரம்" என்ற பகுதியில் உள்ள "வந்தவர்கள்" என்ற கவிதை. அதில் அவர்கள், "ஒரு காலத்தில் நமது பக்கத்தில் வசிப்பதற்காக வந்தவர்களுக்கு நாம் பழங்களையும் ,கிழங்குகளையும், பாலும் உணவும் கொடுத்தோம். ஆனால் இப்போது அவர்களது அரண்மனை போன்ற வீடுகளை அலங்கரிக்க நமது தலைகளைக் கேட்கிறார்கள். அவர்கள் அதைக் கேட்பது  வாழத்தான் என்று இருந்தால் அதையும் கொடுத்திருப்போம். ஆனால் அவர்கள் உல்லாசத்திற்கு நமது உயிரைக் கேட்கிறார்கள். போலீஸ் பூட்ஸ் கால்களின் சத்தமும் ஆபாசமான குற்றச்சாட்டுகளும் பல்கிப் பெருகி நம்மைப் பயமுறுத்துகின்றன என்று தங்களது வாழ்க்கையின் நிதர்சனத்தை ஒரு பாடல் மூலம் ஆதிவாசி வெளிப்படுத்துகிறார்.

"திக்குகள்" என்ற கவிதை, நாங்கள் எவ்வளவு சாப்பிடலாம் என்றும் எப்படி வாழலாம் என்றும் பண்பாடு பற்றியும், எங்கள் அடையாளத்தைப் பற்றியும் கற்றுக் கொடுக்கிறார்கள் என்றும் கூறியதோடு எங்கள் அடையாளங்களை அவர்கள்  தான் அழிக்கப் பார்க்கிறார்கள் என்று ஆதிவாசிகள் குமுறுகிறார்கள். மேலும் எங்கள் குழந்தைகள் இந்த அந்நியர்களை வெறுக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

எனக்கு பிடித்த மற்றொரு ஆதிவாசிப் பாடல் "இருதலை கொல்லி". ஒரு மனிதன் அவனாகவே இருத்தல் அல்லது அவனுடைய வாழ்க்கையை வாழ்தல் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதி. மனித வாழ்க்கையையும் வாழாமல், எப்படி வாழ்கிறோம் என்றும் தெரியாமல் ஒரு மோசமான வாழ்க்கையை நாட்டில்  நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த மோசமான வாழ்க்கையை  ஆதிவாசிகளுக்கும் நாம் பரிசளித்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்கும்போது மனித சமூகம் எந்தளவிற்கு மோசமானது என்பது தெரிகிறது. அந்தப் பாடல்,

நாங்கள் காடுகளிலிருந்து
கொண்டுவரப்பட்டோம்

நாகரிக வாழ்க்கைக்கு.

இப்போது
நாங்கள்
காட்டு விலங்குகளின் பகுதியுமல்ல

நாகரிக சமூகத்தின் பகுதியுமல்ல.

"பிறப்பு" என்ற தலைப்பின் கீழ் உள்ள கவிதையில் வரும் ஒரு வரி இப்புத்தகத்திற்கு தலைப்பாக வந்துள்ளது. அந்த கவிதை,

சிவன் பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா
நீங்கள்?

இயேசு பிறந்தது எப்போது?
சொல்ல முடியுமா
நீங்கள்?

கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்.

நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்.

மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்.

நாங்கள்
கடவுள்களுக்கு
முன் பிறந்தவர்கள்.

ஆதிவாசி மக்களுக்கு தெரிந்துள்ளது; நமக்குப் பிறகு தான் கடவுள் படைக்கப்பட்டான் என்று. ஆனால் நாகரீகம் என்ற போர்வையில் வாழக்கூடிய மனிதன் தனக்கு முன்பே கடவுள் பிறந்து விட்டான்; தன்னை படைத்தது கடவுள் தான் என்று சொல்லிக் கொண்டு அலைகிறான் சாதி, மத வெறியோடு.

நமக்கு முன்னோ அல்லது ரோட்டு ஓரங்களிலேயோ கையறு நிலையில் கிடக்கும் ஒருவன் ஒருவேளை ஏதோ ஒரு காட்டின் ஆதிவாசியாகக் கூட இருக்கலாம். ஆனால் நாமோ அவனுடைய வாழ்க்கையை வாழ விடாமல், நமது வாழ்க்கையும் நாம் வாழாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் அழிவை நோக்கி.

புத்தகத்தில் உள்ள எல்லா ஆதிவாசிப் பாடல்களும் ஏதோ ஒரு மாநிலத்தின் ஆதிவாசிப் பாடல்களாக அமைந்துள்ளன தமிழ்நாட்டைத் தவிர. தமிழ்நாட்டிலும் பல்வேறு ஆதிவாசிக் குழுக்கள் இருக்கின்றன. ஆதிவாசிப் பாடல்களில் மனதைத் தொலைத்த எழுத்தாளரும், கவிஞரும், கலை விமர்சகருமான இந்திரன் அவர்கள் தமிழ்நாட்டு ஆதிவாசிகளின் கவிதைகளைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து கொண்டு வந்தால் தமிழுக்கும் பல சிறந்த கவிதைகள் கிடைக்கும்.

 

No of users in online: 82