சிக்கந்தாபுரம்
சிக்கந்தாபுரம் - ரபீக் ராஜா

சிக்கந்தாபுரம் - ரபீக் ராஜா

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சிக்கந்தாபுரம் எனும் கிராமத்தில், அங்குள்ள மக்களின் கலாச்சாரங்களையும், பேச்சு வழக்குகளையும் எதார்த்தமாக கூறியுள்ளார் இக்கதையின் ஆசிரியர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து இந்நூலைப் படைத்துள்ளார். ஒரு கிராமத்தில் பள்ளிவாசல் ஜமாத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் அங்கு நிலவும் சூழ்நிலைகள் எவ்வாறு இருக்கும் என்பதை தெளிவாக கூறியுள்ளார்.

ஊரில் இருபெரும் தலைகளான காதர்கனி, செல்லப்பா ஆகிய இருவரும் தேர்தலில் வெற்றி பெற கையாளும் முயற்சிகள், முடிவுகள், அதன் விளைவுகள் என அனைத்துமே விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே நகைச்சுவையுடனும் கதையை நகர்த்தியிருக்கும் விதம் சிறப்பு.

"பள்ளிவாசலுக்கு எதிரே ஒரு திரையரங்கம்" - இதை ஒரு பரபரப்பான கதையின் கருவாக நான் பார்க்கிறேன். திரையரங்க உரிமையாளரான சாகுல் ஹமீது என்பவர் இக்கதையின் மிக முக்கியமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரம் என்றே கூறலாம். இறுதிவரை தன் பிடிவாத குணத்தை இறுகப் பற்றி பிடித்தவராக வரும் இவர் ஊரில் உள்ள பெருந்தலைகளுக்கே சவாலாகவும் விளங்குகிறார்.

ஊர்ப்பெருமைக்காகவும்,விளம்பரத்திற்காகவும் பதவிக்காகவும் போட்டிக்காகவும் "இறை வழியில் செல்கிறேன்" என்று பொய்யான முகமூடி அணிந்து கொள்பவர்கள் மத்தியில் என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கெத்தாக வலம் வந்து வியக்க வைக்கிறார் சாகுல் ஹமீது.

ஜமாத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தியேட்டர் தரைமட்டமாவது ஆவது உறுதி என்ற பேச்சு ஊரில் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும், அதையெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தன் தாயின் மரணத்திற்குப் பின் சாகுல் ஹமீது. எடுக்கும் ஒரு முடிவு யாரும் எதிர்பாராத வகையில் கதையின் திருப்புமுனையாகவும் சிறப்பம்சமாகவும் அமைந்திருக்கிறது.

"எனக்கும் என் இறைவனுக்குமான தொடர்பு எனது கல்புக்கும் என்னைப் படைத்த ரப்புக்குமானது" - என்று ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்வாசகம் மனதை நெகிழச் செய்கிறது.

ஒரு காலத்தில் இஸ்லாம் சமூகத்தில் பரவலாக கடைப்பிடிக்கப்பட்ட முக்கிய விஷயங்களான நேர்த்திக்கடன், அவுலியாக்கள், கந்தூரி விழா, தர்கா வழிபாடு, கொடிக்கட்டி, சந்தனக்கூடு இவற்றில் சிலவற்றை நம் நினைவுக்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். அதே சமயம் அவையெல்லாம் ஷிர்க்(இறைவனுக்கு இணை வைத்தல்) என்று தீன் என்ற பேச்சாளர் மூலமாக எடுத்துக்கூறவும் தவறவில்லை.

தற்கால இலக்கிய சூழலில் இயங்கி வருபவரும் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுள் ஒருவரான ரபீக்ராஜா அவர்கள் மென்மேலும் பல படைப்புகளை உருவாக்க வாழ்த்துகள்.